பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வளர்ந்த பிறகு நாம் பல இடங்களுக்கு சுற்றிப்பார்க்கச் சென்றிருப்போம். அவ்வாறு செல்லும்பொழுது நம்முடைய பொறுப்பு என்பது மிக முக்கியமானது. மேலும், எப்பொழுதும் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், நம்முடைய சிறு வயது பயணங்களின் மகிழ்ச்சி என்பது வேறுவிதமானது. அது போன்ற பயணங்களில் நமக்கான அனைத்து தேவைகளையும் பிறர் திட்டமிட எந்தவிதக் கவலையுமின்றி பயணத்தை உற்சாகமாக அனுபவிக்கலாம். அதனாலேயே, அதுபோன்ற பால்ய கால பயண அனுபவங்கள் மறக்க முடியாததாகிவிடுகிறது.

Representational Image

எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். 1980 அல்லது 1981 ஆம் வருடம் என நினைக்கிறேன், என்னுடைய அப்பா ஒருநாள் கோடை விடுமுறையின் போது, “நாம் எல்லோரும் சுற்றிப்பார்க்க மெட்ராஸ் (Madras) டூர் போலாம்….”என்று சொன்னார்.

எங்களுக்கு ஒரே குதூகலம். ஏனென்றால் அதுதான் எங்களுடைய முதல் நெடுந்தூர பயணம். மேலும் ரயிலில் செல்வதாக திட்டம்.

என்னுடைய அத்தை மகள் ஒருவர் திருமணமாகி மெட்ராஸில் (இன்றைய சென்னை) இருந்தார். என் அம்மாவினுடைய வயதை விட சற்று வயது குறைவாக இருக்கும். அதனால், நாங்கள் அவரை சின்னம்மா என்றே கூப்பிடுவோம். அவருடைய திருமணத்தின் போது எனக்கு நான்கு வயதிருக்கும். என்னுடைய சித்தப்பா அப்பொழுது HTL (Hindustan Teleprinters Limited) இல் வேலை செய்து கொண்டிருந்தார். முன்னதாக எங்களுடைய சித்தி, சித்தப்பாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு புறப்பட்டோம்.

Representational Image

திருச்சியிலிருந்து மலைக்கோட்டை விரைவு வண்டியில் (Rockfort Express) செல்வதாக முடிவு செய்து எங்களுடைய மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு கிளம்பினோம். நான் என் அண்ணா, என்னுடைய இரண்டு அக்கா மற்றும் என் அப்பா அம்மா என நாங்கள் ஆறு பேர். முன்பதிவு செய்தோமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், இருக்கை வசதியோ படுக்கை வசதியோ போகும்போது கிடைக்கவில்லை. ஏதோ ஒரு பெட்டியில் கீழே அமர்ந்து சென்றது போன்ற நினைவு. இரவு ஒன்பதரை அல்லது பத்து மணிக்கு அந்த ரயில் கிளம்பும்.

Also Read: “சென்னைதான் நமக்கு அன்னை பூமி!’’ – `மெட்ராஸ் டே’ எஸ்.முத்தையா நினைவுப் பகிர்வு

மெட்ராஸ் செல்ல போகிறோம் என்ற உற்சாகத்தில் சிறு குழந்தைகளாக இருந்ததால் எந்த அசௌகர்யத்தையும் நாங்கள் உணரவில்லை. ஆனால் இன்று பெரும்பாலோர் முன்பதிவு அதுவும் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.

Representational Image

அனைவரும் ஏறி அமர்ந்த பின், பயண சீட்டு பரிசோதகர் வந்து அனைத்தையும் சரி பார்த்து விட்டு சென்று விட்டார். ரயில் கிளம்பியது. சிறிது நேரத்தில் நான் உறங்க ஆரம்பித்து விட்டேன். கீழே எதோ போர்வையை விரித்து என்னைப் படுக்க வைத்து விட்டார்கள். வண்டி எத்தனை ஸ்டேஷன்களில் நின்றது என்று தெரியவில்லை. ஆனால், திடீரென்று காற்று நின்றது போன்ற உணர்வு எதோ ஸ்டேஷனில் வண்டி நின்றுகொண்டிருந்தது..

வெளியில் “போண்டாட்டீ… போண்டாட்டீ…” என்று ஒரு சத்தம். பிறகுதான் தெரிந்தது அது போண்டாட்டி இல்லை “போண்டா …டீ…” என்று போண்டாவையும் டீயையும் அந்த நள்ளிரவில் கூவி கூவி விற்று கொண்டிருக்கிறார்கள் என்பது.

என் அப்பாவிடம் கேட்க, வண்டி விழுப்புரத்தில் நிற்பதாகவும் மீண்டும் கிளம்ப ஒரு முக்கால் அல்லது ஒரு மணி நேரம் ஆகும் என்றும் அப்பா பதிலளித்தார்.

Representational Image

காரணம் என்னவென்றால், திருச்சியில் கிளம்பும் அதே நேரத்திற்கு மெட்ராஸிலிருந்தும் இணையான ஒரு மலைக்கோட்டை விரைவு வண்டி கிளம்பும் என்பதும் அந்த வண்டியிலுள்ள மின்சார என்ஜின் கழற்றப்பட்டு நாங்கள் சென்ற ரயிலில் இணைக்கப்படும். நாங்கள் வந்த ரயிலின் என்ஜின் மெட்ராஸிலிருந்து வந்த ரயிலுடன் இணைக்கப்பட்டு திருச்சி செல்லும் எனவும் அப்பா கூடுதல் தகவல் சொன்னார். விழுப்புரம் திருச்சி மார்க்கம் முழுமையாக மின்மயமாக்கப்படும்வரை இதுதான் நடைமுறையாக இருந்தது.

ஒருவழியாக முக்கால் மணிநேரம் கழித்து வண்டி கிளம்ப, நான் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டேன். எங்கள் வீட்டில் யார் யார் தூங்கினார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக என் அண்ணா இதுபோன்ற பயணங்களில் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டேன் வருவான். வெளியில் எதுவும் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கவலை இல்லை.

Representational Image

காலை ஐந்தரை மணி அளவில் என்னை எழுப்பி விட்டனர். ரயில் சென்னையை நெருங்குவதாகவும் தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயில் பிடித்து கிண்டியில் இறங்கி ஆலந்தூரில் இருக்கும் எங்கள் சின்னம்மா வீட்டிற்கு செல்லலாம் எனவும் எங்கள் அப்பா கூறினார். எங்களுடன் பயணம் செய்த ஒருவரும் தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயிலில் செல்வதாக கூறினார். மேலும், மின்சார ரயில் ஒரு ஸ்டேஷனலில் 3 நிமிடம் மட்டுமே நிற்கும் அதற்குள் இறங்கி கொள்ள வேண்டும் என்று கூறினார். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

ரயில் தாம்பரம் ஸ்டேஷனை அடைய நாங்கள் அனைவரும் கொண்டுவந்திருந்த பொருட்களுடன் இறங்கினோம். பின்பு மின்சார ரயிலுக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு, அடுத்து வந்த மின்சார ரயிலைப் பிடித்து கிண்டி ஸ்டேஷனுக்கு பயணமானோம். கிண்டி ஸ்டேஷன் வந்தவுடன் நாங்கள் முதலில் இறங்கிக்கொண்டோம். எங்களுடன் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் வந்தவர் மற்ற பொருட்களை எடுத்துக் கொடுத்து உதவினார்.

Representational Image

அங்கே எங்கள் சித்தப்பா எங்களுக்காக காத்திருந்தார். ஒருவழியாக நாங்கள் எங்கள் சித்தி வீட்டை அடைந்தோம். கிண்டி ஸ்டேஷனலிலிருந்து ஆலந்தூரில் உள்ள சித்தி வீட்டிற்கு எப்படி சென்றோம் என்று சரியாக நினைவிலில்லை.

அவர்களுடைய வீடு ஒரு சிறிய வாடகை வீடுதான். ஆனாலும் எங்களுடன் சேர்த்து ஒன்பது பேர் (சித்தி, சித்தப்பா மற்றும் அவர்களுடைய 3 வயது குழந்தையும் சேர்த்து) அந்த வீட்டின் சிறிய அறையில் தான் உறங்கினோம். மிகவும் சந்தோசமாக கிட்டத்தட்ட ஒரு வாரம் அங்கு இருந்தோம். அவர்களிடம் எந்தவொரு சலிப்போ, முணுமுணுப்போ இல்லை. இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதர்கள் அத்தகைய விருந்தோம்பும் மனப்பான்மையோடு இருப்பார்களா என்பது சந்தேகம். இன்றைய பொருளாதார சுதந்திரம் (Economical Freedom) மற்றும் தனி மனப்பான்மை (nuclear mindset) அதிகரித்திருக்கும் நிலையில் இது போன்ற புரிதல் இருப்பதற்கான வாய்ப்பு என்பது மிகக் குறைவாக இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

Representational Image

எங்களுடைய சித்தியும் சித்தப்பாவும் எங்களை எவ்விதமான குறையுமின்றி நன்றாகக் கவனித்து கொண்டார்கள். அந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருளாதார நிலை என்ன என்பதும் அவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள் என்பதும் இன்றுவரை எனக்கு தெரியாது.

அந்த பயணத்தில் பார்த்த சில முக்கியமான விஷயங்கள் இன்றும் நினைவிலிருக்கிறது.

முதன் முதலாக விமானம் மேலே புறப்படுவதையும் (Takeoff) தரை இறங்குவதையும் (landing) மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பார்த்தோம். கிண்டி உயிரியல் பூங்காவில் அணைத்து வகையான விலங்குகளையும் பார்த்தோம். அப்பொழுது வண்டலூர் உயிரியல் பூங்கா இல்லை.

Representational Image

முதலைப் பண்ணை சென்று பலவிதமான முதலைகளை பார்த்தோம். அதற்கு உணவிடும் பொழுது இரையைப் போட்டி போட்டு முதலைகள் உண்ணும் காட்சியை காண்பது திகில் கலந்த ஒரு பரவச அனுபவம்.

எங்களுடைய சித்தி பக்கத்துக்கு வீட்டிற்கு கூட்டிச் சென்ற பொழுது அங்கு முதன்முதலாகப் பார்த்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியும் (Television) அதில், ஒரு ஞாயிறு மாலை பார்த்த மறைந்த நடிகை ஸ்மிதா என்ற சில்க் ஸ்மிதா நடித்த வண்டி சக்கரம் திரைப்படமும் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது.

கிண்டியிலிருந்து மின்சார ரயிலில் எழும்பூர் சென்று பாலைவன சோலை, மற்றும் கோடீஸ்வரன் மகள் என்ற இரு திரைப்படங்களை ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தோம்.

(பாலைவன சோலை படத்தில் இடம் பெற்ற

“ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு ….

மிச்ச விவரம் வேணுமின்னா மச்சானை போயி கேளு கேளு..”

என்ற புகழ் பெற்ற பாடல் இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.)

அதன் பிறகு சுமார் முப்பைத்தந்து வருடங்கள் கழித்து அதே தியேட்டரில், என் குடும்பத்துடன் ஏழாம் அறிவு படம் பார்த்தேன்.

Representational Image

கிர்ணி பழச்சாறு முதன் முதலாகக் குடித்தது இன்றும் நினைவிருக்கிறது.

மெரினா கடற்கரை சென்று கடலையும் அலைகளையும் அனுபவித்து விளையாடினோம். அண்ணா சமாதி மற்றும் கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் பார்த்தோம். அங்கு விற்ற மாங்காய், தேங்காய், பட்டாணி, சுண்டல் வாங்கி சாப்பிட்டோம். அதன் பிறகு நான் பலமுறை பீச்சுக்கு சென்றிருந்தாலும், அந்த முதல் முறை அனுபவம் மறக்க முடியாதது.

செத்த காலேஜ் என்று பல திரைப் படங்களில் அழைக்கப்பட்ட எழும்பூர் மியூசியம் (Egmore Museum) பார்த்தோம். அங்கு வைக்கப்பட்டிருந்த பலவகையான உயிர்ம படிவங்களையும் (Fossils) விலங்குகளின் எலும்பு கூடுகளையும் பார்த்து ஆச்சர்ய பட்டோம்.

ஒருவாரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை. ஆனால், அந்த இனிய நினைவுகளுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் அதே மலைக்கோட்டை எஸ்பிரஸில் (இம்முறை முன்பதிவு கிடைத்ததாக ஞாபகம்) கிளம்பி திருச்சி வந்தோம்.

Representational Image

இன்றைய காலகட்டத்தில் நாம் முன்னறிவிப்பின்றி உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு செல்வது என்பது நடவாத ஒன்று. அப்படியே அவர்களுக்கு நம் வருகையை தெரிய படுத்தினாலும் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவர்கள் வீட்டிற்கு நாம் செல்ல முடியாது என்பது நிதர்சனம்.

அன்று எங்கள் சித்தி சித்தப்பாவிடம் (திரு லோகாம்பாள்-கந்தசாமி) எங்களால் ஏற்பட்ட கூடுதல் செலவுகளை சமாளிக்க பணமிருந்ததா இல்லையா என்பதை அறியேன். ஆனால், எங்களை நல்லபடியாக கவனித்து அனுப்பவேண்டும் என்ற மனமிருந்தது.

ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.