”கண்ணதாசனுக்கு கிடைத்த அளவுக்கு எங்களுக்கெல்லாம் கதைக்களமும், பாடல் சூழலும் கிடைக்கவில்லை. எல்லாமே காதல் பாடலாகவே மாறிவிட்டது. அதனால் காதல் பாடல்களிலேயே தத்துவ வரிகளை நான் வைத்தேன். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றினில் கோபம் கிடையாது’. இது மேலோட்டமாக பார்த்தால் காதல் பாட்டு. இந்த ரெண்டு வரியை தனியாக எடுத்தால் தத்துவ பாட்டு. ‘கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்’ இதுவெல்லாம் ஜென் மாதிரி இருக்கும்”

நேர்காணல் ஒன்றில் நீங்கள் பேசிய வார்த்தைகள் இவை. இதில் துளியேதும் சுயதம்பட்டம் இல்லை. பொய் இல்லை. உங்களின் பாடல்கள்
எதுகை மோனை வரிகளாக மட்டுமே இருப்பதில்லை. அதில் பல கவிதைகள் கோர்க்கப்பட்டிருக்கும். பல ஹைக்கூக்கள் புதைந்து கிடக்கும்.
கவிதைகளை ஒன்று சேர்த்து மாலை கோர்க்கும் மாயக்காரன். ‘கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே… ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என தந்தைக்கும் தாலாட்டு கொடுத்தாயே, ”மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு ” என வெயிலைக் கொண்டாடியவன் நீதானே.

image

‘கல்லரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய் தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே’ என்று தொலைக்காட்சியில் பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் அதோடு சேர்ந்து வரிகளை உணர்ந்து
பாடிக்கொண்டிருந்த காலம் எனக்கு நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் எனக்கு உங்களைத் தெரியாது. இப்படிப்பட்ட வரிகளா? பாடல்
ஆசிரியர் யாரென்று தேடிப்பார்க்கும் பக்குவம் இல்லை எனக்கு

ஆனால் ”தீக்குள்ளே விரல் வைத்தேன்தனித் தீவில் கடை வைத்தேன்” என்ற வரியில் நான் அடிக்கடி நின்றுவிடுவேன். தனிமையை இதைவிட ஒருத்தன் எப்படி சொல்லிவிட முடியும்? தனித்தீவில் கடை வைப்பது எப்படிப்பட்ட சூழ்நிலை என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு இருப்பேன். பாடல் வரிகளை
ஆய்வு செய்யத் தூண்டியவர் நீங்கள் தான். உங்கள் வரிகளை படித்துவிட்டு மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்க்கும் குணம் எனக்கு. பாடல்
வரிகளை பிரித்தெடுத்து காட்சிகளாக கண் முன்னே ஓட்டிப்பார்ப்பேன்.

image

”கதை பேசி கொண்டே வா காற்றோடு ‌போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்” என்று நீங்கள் எழுதிய வரிகளில் தான் மெளனங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன் நான்.
அன்பின் மெளனங்களை அன்று முதல்தான் நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். உங்களுக்காக நான் பாடலை கேட்டதே இல்லை.
பாடல்களை ரசித்துக் கேட்பேன். அதில் என்னை ஆட்கொண்ட பாடல்களை எல்லாம் எழுதியது நீங்களாகவே இருக்கும்.

image

”அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்” என்ற பாடல் வரிகளை கேட்டபோது
அட நம்மள மாதிரி என  சிரித்துக்கொண்டது நினைவிருக்கிறது. அனைவரும் வர்ணித்துக் கொண்டிருந்த ’பெண்ணழகை அவள் அப்படி
ஒன்றும் அழகில்லை. ஆனால் அது ஒரு குறையில்லை’ என்று எழுதியது எப்படி? எத்தனை எத்தனை பேரில் வாயில் விழுந்த வார்த்தைகள்
இவை. கற்பனைகளை அள்ளித்தூவிக் கொண்டிருந்த நேரத்தில் அப்பட்டமான எதார்த்தத்தை கையில் எடுத்தீர்களே நீங்கள்.

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ? என்று யாருக்காகவோ எழுதி விட்டீர்கள் நீங்கள். அதைத்தான் இன்றும் நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது. உடலால் நீங்கள் இங்கில்லை நா.மு. அதிவேகமாக சென்றுகொண்டிருந்த உங்கள் பேனா. ஒரு புள்ளியில் நின்று விட்டது. இருந்திருந்தால் நீங்கள் நிரப்பியிருக்கும் பக்கங்களுக்கு எண்ணிக்கையில்லை தான். ஆமாம். இன்றும் உங்களின் கவிதையை யாரோ ஒருவர் மனதார உணர்ந்துகொண்டு இருக்கிறார். காற்றில் உங்களின் வரி இசையாக எங்கோ ஒரு தூரத்தில் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அருகில் இல்லாவிட்டால் என்ன நாமு? பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?

image

’’நம்முடைய புன்னகையில், நம்முடைய கண்ணீர் துளியில், நம்முடைய கனத்த மெளனத்தில் என்றுமே நம்முடன் இசை இருக்கிறது’’ என்று நீங்கள் சொன்னீர்கள் நாமு. அது உண்மைதான். இசைபோலத்தான் உங்கள் வரிகளும். அது என்றுமே எங்களுடன் இருக்கிறது…

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிஞரே!!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.