கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என பிற துறை சார்ந்தவர்களும் களத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர்.

கோவையை பொருத்தவரை ஆரம்பக் கட்டத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் சென்னையில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததால் அதன் மூலம் பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. அதில் கோவையும் ஒன்று.

இதுவரை கோவையில் 741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நானூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? பின் அவரை சார்ந்தவர்களுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? கொரோனா பரவலை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்களின் தடுப்பு நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து ஆராய புதிய தலைமுறை முனைப்பு காட்டியது.

இதன் ஒரு பகுதியாக அண்மையில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் கொரோனா தொற்று உறுதியான ஒரு நபரின் குடும்பம் குறித்த தகவலையும் சுகாதாரத்துறை அவர்களிடம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றும் அவர்களை சுகாதாரத்துறை எப்படி கையாளுகிறது என்பது குறித்தும், மாநகராட்சி தரப்பில் தூய்மைப் பணியாளர்கள் அந்த பகுதியில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்தும் கள ஆய்வில் ஈடுபட்டோம்.

image

அதுகுறித்த விபரங்களை தற்போது காணலாம்

1. எம் ஜி ஆர் மார்க்கெட்டில் கடந்த 24 ஆம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை வாயிலாக மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது

2. இதன் பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து கொரோனா தொற்று உறுதியான நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை எடுக்கப்படுகிறது. இதில் குடும்ப உறவினர்கள் ஒரு சிலருக்கும் உறுதியானதால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் அடைக்கப்பட்டு தொற்று உறுதியானவரக்ளை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

3. சோதனையில் விடுபட்ட நபர், தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் கொடுத்தும் அவரை ஐந்து கிலோ மீட்டர் தாண்டி கோவை அரசு மருத்துவமனையிலேயே கொரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்துகின்றனர். ஆனால் தனக்கு பாதிப்பு இருப்பதால் அவர் வெளியே செல்ல தயங்கி வீட்டுக்கருகாமையில் உள்ள சுகாதார மையத்தில் எடுக்க உதவுமாறு கோருகிறார். அதன் பின்னரே 26 ஆம் தேதி அவருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மனைவிக்கும் சோதனை மேற்கொள்கின்றனர்.

4. சோதனையில் எம்ஜி ஆர் மார்கெட்டில் பணியாற்றிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. அவரது மனைவிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வருகிறது.

5. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இஎஸ்ஐக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார்.

6. இதனையடுத்து சாயிபாபா காலனி குப்புசாமி நகர் பகுதியே அடைக்கப்பட்டு, தூய்மை பணியாளர்கள் கொண்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

image

7.பின்னர் சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் நெகட்டிவ் என்று உறுதிபடுத்தப்படுகிறது.

8. அப்போது பாதிப்புக்குள்ளானவர்களிடம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர், செவிலியர், மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு உதவும் நபர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட குதிக்கு அருகே பணியாளர்களும் மேற்பார்வைக்கு பணியமர்த்தப்படுகிறார்கள்.

9. இந்த சூழ்நிலையில் 28 ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு காய்ச்சல் துவங்குகிறது. அவரது மூத்த மகளுக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. இரவில் சுகாதாரத்துறைக்கு அழைத்து செல்ல தகவல் அளிக்கிறார். ஆம்புலன்ஸ் அனுப்பாமல் அவருக்கும் அவரது மகளுக்கும் மாத்திரைகள் வழங்குகின்றனர்.

image

10. தொடர்ந்து விட்டு விட்டு காய்ச்சல் ஏற்பட மருத்துவக் குழுவுக்கு தகவல் அளித்தும் மாத்திரைகளையே உட்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

11. கணவர் சிகிச்சையில் இருப்பதால் தனது மகள்களை விட்டு செல்ல முடியாத சூழலால் அவர் மாத்திரைகளையே உட்கொண்டு கொரோனா அறிகுறியுடன் அவதியுறுகிறார். இதுவரை பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் குழந்தைகளை பராமரிக்க என்ன திட்டம் சுகாதாரத்துறை வைத்துள்ளது என தெளிவான தகவல்கள் வெளியிடபடவில்லை.

12. தொடர்ந்து ஒருவாரம் சிகிச்சை பெற்ற பாதிக்கப்பட்ட நபர் வந்ததும் அவரது மனைவிக்கு பரிசோதனை எடுக்க முயற்சிக்கின்றனர். அப்போது அருகில் உள்ள சுகாதாரத்துறையை அணுகும் போது இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டு முடிந்துவிட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் எடுக்கப்படாது. கோவை அரசு மருத்துவமனை செல்லுங்கள் என வலியுறுத்துகின்றனர் சுகாதாரத்துறையினர்.

13. கோவையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டதால் , வாகனங்களிலும் செல்ல முடியாது , கணவரும் தனிமைப்படுத்தலில் இருப்பதால் உடன் செல்ல முடியாது சூழ்நிலை என விளக்கமளித்த பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படுகிறது.

image

14. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களோ நாங்கள் அழைத்து செல்வதோடு சரி ரிசல்ட் நெகட்டிவ் என்றால் நீங்கள் வாகனம் தயார் செய்து வர வேண்டும் என்கின்றனர். இதனால் அவர்கள் ஆம்புலன்ஸில் செல்ல மறுப்பு தெரிவித்தனர். அதனால் மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட சம்மதித்த பின்னர் அவரது மனைவி ஆம்புலன்ஸில் செல்கிறார். அவருக்கு அங்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு சோதனையில் தொற்று உறுதி என வருகிறது. அவரை இஎஸ்ஐக்கு அழைத்து செல்கின்றனர்.

15. இதனையடுத்து பெற்றோர் இருவருக்கும் கொரோனா உறுதியானதால் அடுத்ததாக பெண் குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. அப்போது சாயிபாபா காலனி கே கே புதூர் சுகாதார வளாகத்தில் உள்ள மருத்துவ குழுவினரிடம் இருந்து வரும் பதில் அதிர்ச்சியை கொடுக்கிறது.

பெண் குழந்தைகள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்துகின்றனர். தந்தை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தாய் சிகிச்சையில் உள்ளார். 10 வயதுக்கு கீழே உள்ள  இரு குழந்தைகளும் என்ன செய்வார்கள். ஆம்புலன்ஸில் செல்ல மனரீதியாக அச்சத்தில் உள்ளதால் உடன் செல்லவும் யாரும் இல்லை என்பதால் தயவு செய்து உங்கள் மையத்திலே மாதிரிகள் எடுங்கள் என பலமுறை கோரியும் அவர்கள் இரண்டாவது முறை என்பதால் எங்களால் எடுக்க இயலாது அங்கேதான் செல்ல வேண்டும் என்கின்றனர்.

image

16. இதனையடுத்து வேறு பகுதியில் இருந்து அவர்களது உறவினர் வரவழைக்கபட்டு அவரது வாகனத்தில் இரு பெண் குழந்தைகளையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு அங்கு மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு பாசிட்டிவ் ஆனதாக சொல்லியுள்ளனர். இப்போது அழைத்து சென்றவரை சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்ட இடத்திலேயே சளி மாதிரிகள் எடுத்திருந்தால் அழைத்து சென்றவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதனால் கொரோனா சங்கிலி தொடருக்கு காரணமாகும் வாய்பை சுகாதாரத்துறை ஊழியர்கள் அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து மருத்துவ ஆலோசகர்கள் கூறுகையில், “கொரோனா தடுப்புக்கு மிகவும் முக்கியம் தொற்று சந்தேகிக்கப்படும் நபர்கள் பயணிப்பதை தவிர்ப்பதே. இது அவர்களுக்கு மட்டுமின்றி செல்லும் வழியில் உள்ள பிற மக்களுக்கும் பாதுகாப்பானது. இதற்கு ஒரே தீர்வு கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே அங்கேயே மாதிரிகள் எடுப்பதுதான். இதன்மூலம் தொற்று பாதிப்பு ஏற்படாததோடு , பிறருக்கும் தொற்று பரவல் குறையும். ஆனால் கோவை மாநகராட்சி சார்பில் மொபைல் கொரோனா பரிசோதனை வாகனங்கள் இருந்தும் அது குறிப்பிட்ட கேகே புதூர் மருத்துவ வளாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படவில்லை. மேலும் பாதிப்பு இல்லாத பகுதியில் இருந்து வந்த அவரது உறவினருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை நடந்துகொண்டது கொரோனா தடுப்பு பணியின் மிகப்பெரிய தவறு” எனத் தெரிவித்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.