இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் அதுவொரு கொந்தளிப்பான காலம். அப்படியொரு துரதிர்ஷ்டமான ஒரு காலத்தை சந்திப்போம் என்று சச்சினோ, கங்குலியோ, டிராவிட்டோ நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள். ஆம், 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றிலே படுதோல்வி அடைந்து வெளியேறியதுதான் இத்தனை கொந்தளிப்புக்கும் காரணம். சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட், கும்ப்ளே இத்தனை லெஜண்டுகளை கொண்ட இந்திய அணிதான் ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் 2003 உலகக் கோப்பையில் வீறுநடைபோட்டு இறுதிப் போட்டி வரை சென்ற அணி, அடுத்த உலகக் கோப்பையிலே இப்படியொரு நிலைக்கு சரிந்து போனது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியபோதே, இந்திய ரசிகர்கள் வீரர்களின் வீடுகளுக்கு முன்பு போராட்டங்களை நடத்தி, தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

image

உலகக் கோப்பை நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு சொந்த நாட்டில் அச்சுறுத்தலான சூழல் நிலவியது. விமான நிலையத்தில் இருந்து மீடியாக்களை தவிர்த்து மறைந்து ஒளிந்து ஓடிய தருணம் அது. கேப்டன் டிராவிட் உள்ளிட்ட பல வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. இந்திய ரசிகர்கள் எந்த அளவிற்கு வெற்றியை ரசிப்பார்களோ, அதே அளவிற்கு மோசமான தோல்விகளுக்கு கடுமையான எதிர்வினைகளையும் ஆற்றுவார்கள். அந்த மோசமான தோல்வி இந்திய அணிக்கு மின்னல் வேகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பல வீரர்களை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வைத்துவிட்டது.

image

நாம் ஏன் இத்தனை விரிவாக இந்த நெருக்கடி குறித்தும், மிக மோசமான சூழல் குறித்தும் கவனிக்க வேண்டி இருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமைகள் தங்களது தொடக்கத்தை ஒரு நெருக்கடியான சூழலில் இருந்துதான் ஆரம்பித்து இருப்பார்கள். இந்திய அணியின் நினைத்து பார்க்க முடியாத அந்த நெருக்கடிதான் மகேந்திர சிங் தோனி என்னும் மிகச்சிறந்த ஆளுமையை இந்தியாவுக்கு கொடுத்தது. 2007 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, கேப்டன்சி பொறுப்புக்கான மாற்றம் அரங்கேறியே ஆக வேண்டிய நிலை. ஆனால், அடுத்த கேப்டன் யார். சச்சின் தயாராக இல்லை, டிராவிட் மீது விமர்சனங்கள். சேவாக்கும் தயாராக இல்லை. அணியில் இருந்த அனுபவம் வாய்ந்த வீரர் யுவராஜ் சிங் தான். ஒரு நாள் உலகக் கோப்பை நடந்த அதே வருடத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வந்தது.

image

இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை யாரிடம் வழங்குவது என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. யாருமே எதிர்பாராதவிதமாக தோனியின் வசம் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு வந்து சேர்ந்தது. மூத்த வீரர்கள் பலரும் அந்த தொடரில் இருந்து விலகிக் கொண்டார்கள். அங்கிருந்து தான் தோனியின் கேப்டன்சி பயணம் தொடங்கியது. 2007 ஒருநாள் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி சந்தித்த நெருக்கடி சூழல் புரிந்தவர்களுக்கு தான், தோனிக்கு அந்த தருணத்தில் இருந்த அழுத்தத்தை புரிந்து கொள்ள முடியும். தோனி தலைமைப் பொறுப்பு ஏற்கவிருந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டியே மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மிகப்பெரிய ஆளுமைகள் பலருக்கு இப்படியான முதல் தருணங்கள் நடைபெற்றிருப்பது உண்மையே. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்தான் முதல் முதலாக கேப்டனாக களமிறங்கினார் தோனி. அந்தப் போட்டியும் டையில் முடிந்து, பின்னர் இந்திய அணி பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றது. தோனியின் வெற்றிப் பயணம் தொடங்கியது அங்கிருந்து தான்.

image

2007ல் படுதோல்வி அடைந்த இந்திய அணியின் கைகளில் 2011 உலகக் கோப்பை. நான்கே வருடங்களில் இந்திய அணியின் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. ஆம், தோனியின் தலைமையில் அத்துனை வேகமாக வீறுநடை போட்டது இந்திய அணி. தோனியை ஒரு வீரராக கண்டெடுத்து அவரை சரியான நேரத்தில் களமிறக்கி அவருக்குள் இருந்த திறமையை வெளிக் கொண்டுவந்த பெருமை சவுரவ் கங்குலியையே சாரும். ஆனால், கேப்டன்சியை பொருத்தவரை நெருக்கடியான சூழலில் இந்திய அணி தனக்கான ஒரு தலைவனாக தோனியை எடுத்துக் கொண்டது.

தோனி என்ற சிறந்த கேப்டன் உருவாவதற்கு இந்திய அணி சந்தித்த அந்த தருணம் முக்கியமான பங்காற்றியது என்பது நிதர்சனமான உண்மை. அசாருதீனுக்கு பிறகு கங்குலி கேப்டனாக உருவானதற்கு இதேபோன்றதொரு நெருக்கடியான சூழல் இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. 2007 நெருக்கடியான காலம் குறித்து தோனியை வெளிப்படையாக பேசியிருக்கிறார். பேட்டி ஒன்றில் தோனி இவ்வாறு கூறுகிறார்.

image

‘நாங்கள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி டெல்லி வந்து சேர்ந்தோம். அது கொந்தளிப்பான நேரம். விமான நிலையத்தில் இருந்து போலீஸ் வேனுக்கு வர வேண்டியிருந்தது. மாலை நேரம் அது. அந்த போலீஸ் வேனில் சேவாக் பக்கத்தில் நான் அமர்ந்து இருந்தேன். ஒரு குறுகிய சாலையில் 60 கி.மீ வேகத்தில் அந்த வேன் சென்றது. அப்போது எங்களை மீடியா வாகனங்கள் சுற்றி வளைக்க முயன்றது. ஒரு கொலை குற்றவாளியைப் போல், தீவிரவாதியைப் போல் எங்களை உணர வைத்த தருணம் அது. அவர்கள் எங்களை பின் தொடர்ந்தார்கள். நாங்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தோம். ஒரு 15-20 நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்து பின்னர் எங்கள் கார்களில் சென்றோம். அது என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரான, ஒரு நல்ல மனிதனாக உருவாக்கியது அதுதான்’ இப்படிதான் அதனை விவரித்தார் தோனி.

இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை தோனி அந்த தருணத்தில் இருந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதுதான் தோனி என்னும் மிகப்பெரிய ஆளுமையை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்தது. நெருக்கடிகளை முறியடித்து வெற்றிகளை சாதித்து காட்டுபவர்களே ஆளுமைமிக்க தலைவர்கள். அப்படியொரு ஆளுமை மிக்க கேப்டனான தோனியும் நெருக்கடியில் இருந்து முளைத்தவரே.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.