இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் நெருக்கமானது. குறிப்பாக, தோணி ரசிகர்களுக்கு அந்தப் போட்டியை மறக்கவே முடியாது. இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டி முடிந்து சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஆட்டம் தொடர்பான சர்ச்சை சில நாள்களுக்கு முன்பு கிளம்பியது. இறுதிப் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருப்பதாகவும் ஆனால், இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பில்லை என்றும் இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே கூறினார். இந்தியா மற்றும் இலங்கையில் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரிடமும் இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்நாட்டு அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்து இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Aravinda De Silva

மேட்ச் ஃபிக்ஸிங் நடந்தது தொடர்பாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, “உலகக் கோப்பை பைனலில் `பிக்ஸிங்’ நடைபெற்றது. அந்தப் போட்டியில் நாம் விலை போய்விட்டோம். பைனலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். இதுகுறித்து யாரிடம் வேண்டுமென்றாலும் என்னால் வாதிட முடியும். இந்தச் சூதாட்டத்தில் வீரர்களுக்குத் தொடர்பு கிடையாது என்பதை என்னால் சொல்ல முடியும். ஆனால், சிலர் இதில் ஈடுபட்டனர்” என்றார். ஆனால், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்கள் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். எனினும், இலங்கையின் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டல்லஸ் அலாஹப்பெருமா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் தற்போது விசாரணைகளையும் தொடங்கியுள்ளனர்.

Also Read: மேட்ச் பிக்ஸிங்: `ஆட்டத்திலே இல்லாத சிலர் மூலம் சூதாட்டம்?’ -2011 உலகக்கோப்பை சர்ச்சை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு கிரிக்கெட் அணியை தேர்வு செய்து அனுப்பிய தலைமை தேர்வாளருமான அரவிந்த டி சில்வாவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அரவிந்த டி சில்வாவிடம் முதலாவதாக விசாரணைகளை மேற்கொண்டோம். அவர் அளித்த தகவல்களின்படி 2011 உலகக் கோப்பை அணி வீரர்களில் ஒருவரான உபுல் தரங்காவை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளோம். உளவுத்துறையின் உதவிகள் மற்றும் சர்வதேச அளவில் பலரின் தகவல்களையும் பெற்று விசாரணைகளை தொடர்வோம்” என்று குறிப்பிட்டனர்.

உபுல் தரங்கா

அரவிந்த டி சில்வா, விசாரணை தொடர்பாகக் கருத்துகளை தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 6 மணி நேரத்துக்கும் மேலாகக் குறைந்தது மூன்று அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள தரங்கா, போட்டியில் 30 நிமிடங்கள் விளையாடி 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று உபுல் தரங்காவிடம் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விசாரணைகளை முடித்துவிட்டு வெளியே வந்த உபுல் தரங்கா செய்தியாளர்களிடம், “எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் சில கேள்விகளை என்னிடம் கேட்டனர். அதற்கு என்னுடைய பதிலை அளித்துள்ளேன்” என்று கூறினார். தரங்காவின் பதில்களைப் பொறுத்து அதிகாரிகள் அடுத்து யாரை விசாரணை செய்வது என்ற முடிவை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை 2011

இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவை அதிகாரிகள் இன்று அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சங்ககாரா, “குற்றச்சாட்டு சொல்கிறார் என்றால் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். அந்த ஆதாரங்களை அவர் ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட தடுப்புத்துறை இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: `2011 உலகக்கோப்பை.. யுபிஎஸ்சி நேர்காணல்.. கொரோனா!’ -அஷ்வின், திருப்பூர் ஆட்சியரின் `லைவ்’ உரையாடல்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.