அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்வுக்கு குஜராத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு பிரதமர் மோடியின் உத்தரவில் பரபரப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவுக்குள் தனது பயணத்தை கொரோனா ஆரம்பித்துவிட்டது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தீவிரமாகப் பரவ ஆரம்பித்த நேரத்தில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. `சமூக இடைவெளி முக்கியம்’, `தனித்திருங்கள்… விழித்திருங்கள்’ என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், `மக்களுக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும். முதலில் சட்டமன்றக் கூட்டத் தொடரை உடனே முடியுங்கள்’ என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முதல்வர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. வயதானவர்களுக்குத்தான் கொரோனா வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் கிண்டல் செய்துகொண்டிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Also Read: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா… முதல்வர் சொல்வது உண்மைதானா?

அதன் பிறகு தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் இதுவரை ஐந்து முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவடையவிருந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7-வது முறையாக ஜூன் 29-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று முதல் (ஜூலை 1-ம் தேதி) ஜூலை 31-ம் தேதிவரை ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும்.

சென்னை – ஊரடங்கு

கொரோனா பரவலில் முதன்மை நகரமாக சென்னை விளங்கிவருகிறது. சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவற்றிலும் வைரஸ் தொற்று அதிகளவில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் முழு ஊரடங்கில் உள்ளன. இதற்கு முன்பு தமிழகத்தின் பல நகரங்களிலும் தனித்தனியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நான்கு நாள்களும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை மூன்று நாள்களும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உரிய காலஅவகாசம் அளிக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்படாததால், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர். வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவரும் வேளையில், சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில்தான் சென்னை நகரில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்ததாகச் சொல்லப்பட்டது. அப்போதுதான், கோயம்பேடு காய்கறிச் சந்தை கொரோனா உற்பத்தி மையமாக உருவெடுத்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, காய்கறி மொத்த வியாபாரம் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அதற்குள் கோயம்பேட்டுக்கு வந்துசென்ற வியாபாரிகள் மூலமாக திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா பரவிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீடித்துவருகிறது. மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ பாஸ் வாங்கிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும், சென்னையில் நாளுக்குள் கொரோனா தாக்கம் அதிகரித்துவந்த காரணத்தால், சென்னையை காலிசெய்துவிட்டு பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். அதனாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா பரவியதாக செய்திகள் வருகின்றன. அதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.

சென்னை – முழு ஊரடங்கு

ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான ஊரடங்கின்போது, இடைப்பட்ட இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதத் தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைப்போல, ஜூலை மாதத்தில் வரக்கூடிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 5, 12, 19, 26 தேதிகள்) எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் ஜூன் 30-ம் தேதிவரை வழங்கப்பட்ட இ பாஸ் ஜூலை 5-ம் தேதிவரை செல்லும் என்றும், இதற்கு மீண்டும் புதிய இ பாஸ் பெறத் தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, பிற மாநிலங்களுக்கான போக்குவரத்துத் தடை நீட்டிக்கப்படுவதாகவும், ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்துக்கு பயணம் செய்ய இ பாஸ் வாங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

அம்மா உணவகம்

நகர்ப்புறங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், பெரிய வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. தங்கும் வசதியுடன் கூடிய விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் மற்ற விருந்தோம்பல் சேவைகளுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, மெட்ரோ ரயில், மின்சார ரயிலுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்களால் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 50 சதவிகிதப் பேருந்துகள் இயங்க ஆரம்பித்தன. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவிகிதம் மட்டுமே சமூகஇடைவெளியுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பெரும்பாலும் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல்தான் பயணிகள் செல்கிறார்கள் என்ற புகார் உள்ளது. பிற மாநிலங்களுக்கான போக்குவரத்துத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம்

ஜூன் 1-ம் தேதி முதல் சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி அனுமதி வழங்கப்பட்டது. சலூன் கடை, அழகு நிலையங்கள் ஏ.சி வசதியைப் பயன்படுத்தாமல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. ஆட்டோக்களில் பயணிகள் இரண்டு பேர் வரை பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், கூட்ட அரங்குகளைத் திறக்க தடை நீட்டிக்கப்பட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆறாம் கட்ட ஊரடங்கு இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததால் பல்வேறு தொழில்கள் ஓரளவுக்கு நடைபெற்ற போதிலும் பெரும்பாலான மக்கள் இன்னமும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை தமிழக அரசு வழங்கிவருகிறது. ஆனாலும் மூன்று மாதங்களுக்கு மேல் வேலையின்றி தவிக்கும் மக்கள் வாழ்க்கையை நகர்த்துவதற்கு பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

தாஜ் ஃபிஷர்மேன் கோவ் அருகே வாகன சோதனை

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20 சதவிகிதப் பணியாளர்களுடன், அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம் என்றும், 50 சதவிகித ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை… திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், ஒப்பீட்டளவில் தலைநகர் சென்னையில் மட்டும் அதிகமாக பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இன்னும் அதிகளவில் சென்னையில் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று மருத்துவ செயற்பாட்டாளர்கள் கூறிவருகிறார்கள்.

சு.வெங்கடேசன்

பிற மாவட்டங்களில் பரிசோதனைகள் மிகக் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மதுரையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அதிகமான சோதனைகளை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார். மேலும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதமும் அவர் எழுதியுள்ளார். அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “முதல்வருக்கு கடிதம் எழுதுவதாகக் கூறி சு.வெங்கடேசன் எம்.பி., மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திவருகிறார்” என்றார். அத்துடன் நிற்காமல், “தவறான தகவல் பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதல்வருக்கு கடிதம் எழுதினால், ஒரு எம்.பி மீது வழக்குப் போடுவதாக அமைச்சர் மிரட்டுவதா என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயக்குமார்

தலைமைச்செயலகத்தில் முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ நிபுணர்கள் குழுவினர், “ஊரடங்கு என்பது கோடாரியைக் கொண்டு கொசுவை அடிப்பது போன்றது” என்று குறிப்பிட்டனர். ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்று தாங்கள் அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். எனவே, தமிழக அரசு ஊரடங்கை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பதில் பயனிருப்பதாகத் தெரியவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் கேரளா, ஒடிஷா போன்ற மாநிலங்களிடமிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாநிலங்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, அதற்கேற்ப தமிழகத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.