தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

கடந்த 19-ம் தேதி இரவு, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். காவல் நிலையத்தில் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதே உயிரிழக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தேசிய அளவில் வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்பட பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்ததோடு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச்சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சுயமாக வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இது தொடர்பான கள விசாரணையை நடத்தி வருகிறார். அவருக்கு காவல்துறை தரப்பில் சரிவர ஒத்துழைப்பு வழங்கப்படாத நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமைக் காவலர், `காவல் நிலையத்தில் என்ன நடந்தது’ என்பது குறித்து சாட்சியம் அளித்துள்ளார். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படும் அந்த சாட்சியம் உள்ளடங்கிய அறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு தாக்கல் செய்துள்ளார், மாஜிஸ்திரேட் பாரதிதாசன்.

இந்தச்சூழலில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் தலைமைக்காவரிடம் பேசினோம்.

மிகுந்த பதற்றத்தோடு பேசினார்.

சாத்தான்குளம் காவல் நிலையம்

தலைமைக் காவலர் அளித்த வாக்குமூலம் மற்றும் அதுதொடர்பாக மாஜிஸ்திரேட் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான கட்டுரையை கீழே இருக்கும் லிங்கைக் கிளிக் செய்து படிக்கலாம்!

Also Read: சாத்தான்குளம்: `விடிய விடிய அடி; லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

“கிட்டதட்ட 15 வருஷமா இந்த சர்வீஸ்ல இருக்கேன். என்னோட மனசாட்சிபடி, நேர்மையா, என்ன நடந்ததோ அதைச் சொன்னேன். என்னோட ரிப்போர்ட் இதுதான். இதை எங்கே வேணும்னாலும் சொல்லுவேன். இந்த விஷயங்கள் நடந்தப்போதே நிச்சயம் என்னை விசாரிப்பாங்கன்ணு தெரியும். இதுக்கான தீர்ப்பை கோர்ட்தான் முடிவு செய்யனும். பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைச்சா நல்லாயிருக்கும். என்னோட தனிப்பட்ட கருத்துனு சொல்ல எதுவுமில்ல. இனி ஹைகோர்ட் எல்லாத்தையும் பார்த்துக்கும். என்னோட உயிருக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேணும். பாதுகாப்பு கொடுப்போம்னு ஹைகோர்ட் சொல்லியிருக்கு. கமிஷனர் சாரும் சொல்லியிருக்கார். பார்ப்போம்” என்றார் பதற்றத்துடன்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.