ஜமாபந்தி: 

மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மன்னர்கள், ஆங்கியேர்கள் ஆட்சிக்காலம் எனத் தொன்று தொட்டு, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களால் நீண்டநாள்களாக இழுத்தடிக்கப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கும் புகார்களுக்கும் ஜமாபந்தியில் பெரும்பாலும் தீர்வு கிடைத்துவிடும்.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியானது, கிராமப்புற மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மக்கள் தங்களது மனுக்களை ஜமாபந்தி கூட்டத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் ஜமாபந்தியின் அடிப்படையான நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

வீரசேனன்

தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. என்னதான் விதவிதமாக ஆட்சிகள் மாறினாலும், ஜமாபந்தி நடைபெறாமல் இருந்ததே இல்லை. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்து கொள்வார்கள். ஜமாபந்தி என்பது இந்தி சொல் என்பதால், தி.மு.க ஆட்சிக்காலத்தில் இது, வருவாய் தீர்வாயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வருவாய்த்துறை உயர் அலுவலர் தலைமையில் தாலுகா தோறும் இக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் நடைபெறுவது, வீடுகள்தோறும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மக்கள், தங்களது மனுக்களோடு ஜமாபந்திக்கு வருவார்கள். அங்கேயே பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ஜமாபந்தியில் பல்வேறுவிதமான குளறுபடிகள் உள்ளதாகவும் இதனால் மக்களுக்குப் பல்வேறுவிதமான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன், ‘’விவசாயிகளுக்கு, ஜமாபந்தி ரொம்பவே உதவியாக இருக்கும். வாய்க்கால்கள், ஏரி, குளங்கள்ல ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்து, பாசனத்துக்குத் தண்ணீர் வரலைனா, இங்க மனு கொடுப்பாங்க. பெரும்பாலும் இதுக்குத் தீர்வு காணப்படும். இயல்பாக மற்ற நாள்கள்ல பட்டா பெயர் மாற்றம், கூட்டுப்பட்டாவுல இருந்து, தனிப் பட்டா வாங்குறதெல்லாம் சாதாரண காரியமல்ல. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், இழுத்தடிச்சிக்கிட்டே இருப்பாங்க.

மக்களுக்கே தெரியல…!

ஆனால் ஜமாபந்தியில் முறையிட்டால், உடனடியாகத் தீர்வு காணப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற முதியோர்கள் உட்பட இன்னும் பல எளிய மக்கள், அரசின் சலுகைகளைப் பெறவும் ஜமாபந்தி உதவியாக இருக்கும். இதுக்கான முன் அறிவிப்பை, ஊர் தலையாரி, வீடுகள்தோறும் தெரிவிச்சி,கையெழுத்து வாங்குவார். தாலுகா அலுவலகத்துல பத்து நாள்கள் இது நடைபெறும். ஒவ்வொரு நாளும், ஒரு வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு கொடுப்பாங்க. இறுதி நாள்களுக்குள் தீர்வு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்துல இதுல ஏகப்பட்ட குளறுபடிகள்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஜமாபந்தி நடத்தப்படுவது மக்களுக்கு தெரிவிக்கப்படல. பட்டுக்கோட்டை தாசில்தார் ஆபீஸ் பக்கம், யதார்த்தமாகப் போனேன். வழக்கத்தை விட, அதிகாரிகளின் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருந்துச்சு. சுமார் முந்நூறு பேர் இருந்தாங்க. ஏதோ பிரச்னைனு நினைச்சி, விசாரிச்சப்பதான், ஜமாபந்தி நடக்குதுனு சொன்னாங்க. ஆனால் பொதுமக்கள் ஒருந்தர் கூட இல்லை. மக்கள் நேரடியாக மனு கொடுக்க அனுமதி இல்லை. ஆன்லைன்ல மட்டும்தான் கொடுக்க முடியும்னு சொன்னாங்க. கிராமப்புற மக்களுக்கு இது சாத்தியமே இல்லை. மக்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலிச்சாதான் உடனடியா தீர்வு, கிடைக்கும். கொரோனாவைக் காரணம் காட்டி, இதுமாதிரி செஞ்சிருக்காங்க. ஆனால், மூணு பீர்காவைச் சேர்ந்த அனைத்துத் துறை அதிகாரிகளும், ஒரே நாள்ல, பட்டுக்கோட்டை தாலுகா ஆபீஸ்ல கூடியிருக்காங்க. இன்னும் பல அரசு நிகழ்ச்சிகள் கூட்டம் கூட்டமாக நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால் சாமானிய மக்களின் நீண்டகாலப் பிரச்னையை எளிதாகத் தீர்க்கக்கூடிய ஒரே வாய்ப்பாக இருந்த ஜமாபந்தியில் கை வச்சிட்டாங்க. முறையாக மக்களுக்குத் தெரிவிச்சி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிச்சி, இதை நடத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அலுவலர்களிடம் பேசியபோது ‘’கொரோனா பிரச்னை பூதாகரமாக இருக்கு. இதனால்தான் நாளிதழ்கள்ல அறிவிப்பு வெளியிட்டு, ஆன்லைன்-ல மனுக்கள் அனுப்பச் சொன்னோம். தமிழக அரசின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுகிறோம்” எனத் தெரிவித்தார்கள்.

ஆட்சியர் கோவிந்தராவ்

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் பேசியபோது, “பொதுவா, ஜமாபந்தி பெரிய அளவுல நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மனுக்களை ஆன்லைன்ல அனுப்ப சொன்னோம். இதுகுறித்த அறிவிப்புகளை பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறோம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நேரடியாக மனுக்களை வாங்குவதில் வேறு சில சிரமங்கள் உள்ளது. வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும்பாலானோர், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வர்றாங்க. கொரோனா பிரச்னையால், போக்குவரத்து வசதிகள் இயல்பு நிலையில் இல்லை. ஜமாபந்திக்கு நேரடியாக வர மக்களும் சிரமப்படுவாங்க. மனுக்கள் ஆன்லைன்ல பெறப்பட்டாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.