சாத்தான் குளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க, தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்ததும் போதும், ‘இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடிக்குச் சென்று வந்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா?” என அமைச்சர் ஜெயக்குமார் ஒருபுறம் கேள்வி எழுப்ப, மறுபுறம் ”ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி எதிர்க்கட்சியினருக்கு இல்லையா?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கைவிட, இருவருக்கும் சமூக வலைதளத்தில் உதயநிதி பதிலளிக்க, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனைக் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. காவலர்களின் இந்த வெறிச்செயலை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. ஆன்லைன் வழியாக கண்டனக் கூட்டங்களும் மனித உரிமை அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்டன. இந்தநிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, நேரில் சென்று சந்தித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்ட 25 லட்சத்துக்கான காசோலை அளித்ததுடன், மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்தச் சம்பவம குறித்து புகார் அளித்தார்.

உதயநிதி – ஜெயக்குமார் – சீமான்

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதியம் சென்னையிலிருந்து கிளம்பி மாலை சாத்தான்குளம் சென்று, இறந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சாத்தான் குளம் சம்பவத்தில் அரசின் செயல்பாடுகளை, தனது சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், நேற்று, சென்னை ராயபுரம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ”தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்குச் சென்று வந்துள்ளார். சென்னை மாநகராட்சியிடமோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமோ அதற்கான அனுமதியைப் பெறவில்லை. அவர் செய்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா அல்லது சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்க வேண்டும்.” என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ” தம்பி உதயநிதி அனுமதிச்சீட்டுப் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா?” என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி போஸ்ட்

இந்தநிலையில், இருவருக்கும் பதிலளிக்கும் விதமாக, தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், ”இ-பாஸைக் காட்டியபிறகே போலீஸார் ஒவ்வொரு செக்போஸ்டிலும் பயணிக்க அனுமதித்தனர்” என்றும் ”அப்பாவிகளைக் கொன்ற போலீசை கண்டிக்காதவர்கள், போலீசை காப்பாற்றும் அரசை விமர்சிக்காதவர்கள் சாத்தான்குளம் சென்ற என்னை விமர்சிக்கிறார்கள். அவர்களை மக்கள் அறிவர். விலைபோனவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்பதைக் காலம் உணர்த்தும், காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில் சபாஷ் அமைச்சருக்கும் சீமானுக்கும் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள் என்று உதயநிதிக்கு ஆதரவானவர்களும், ”இறந்தவர்களை வைத்து அரசியல் செய்கிறது தி.மு.க” என சீமானின் ஆதரவாளர்களும் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்,

”நான் பத்து நாள்களாக ‘இ பாஸ்’ கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரிக்கு உடனடியாக இ-பாஸ் கிடைக்கிறது. தங்களின் சொந்த ஊருக்குப் போக முடியாத மக்களுக்குக் கிடைக்காத இ-பாஸ் இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது. அமைச்சர், உதயநிதி இ- பாஸ் வாங்கவில்லை, எனச் சொல்கிறார், இவர் வாங்கித்தான் போனேன் என்கிறார். எது உண்மை என்பதை மக்களுக்கு அரசு விளக்கவேண்டும். எனக்குப் பாஸ் கிடைத்தால் நானும்தான் ஆறுதல் சொல்வதற்காகப் போவேன். நான் அரசைக் கண்டிக்கவில்லை என உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படித் தெரியும். மக்களுக்காக தொடர்ச்சியாகக் களத்தில் நிற்பது நாங்களா, தி.மு.கவா?

சீமான்

Also Read: சாத்தான்குளம்: `விடிய விடிய அடி; லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதுதான் காலம் காலமாக இவர்கள் செய்துவரும் வேலை. அவரின் அத்தை கனிமொழிக்கும் அவருக்கும் இடையிலான உள்கட்சி அரசியல் போட்டி காரணமாகவே அவர் போனாரே தவிர ஆறுதல் சொல்வதற்காக அல்ல. விலை போகும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி விலை போவது யார், பிறரை விலை பேசுவது யார் என மக்களுக்கே தெரியும். தி.மு.க ஆதரவு அரசு அதிகாரிகள் சிலர் இப்போதே தி.மு.கவின் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டனர் என்பதையே இந்த இ பாஸ் விஷயம் காட்டுகிறது” எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் சீமான்.

”இ-பாஸ் வாங்கித்தான் சாத்தான்குளத்துக்குச் சென்றேன்” எனும் உதயநிதியின் விளக்கம் குறித்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்,

”ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதற்காகத்தான் ‘இ பாஸ்’ என்கிற நடைமுறையை உருவாக்கியிருக்கிறோம். அந்த விதிமுறையை உடைத்துச் செல்வது சரியல்ல. நான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். உதயநிதி எந்த அனுமதியும் வாங்கவில்லை என்பதே உண்மை. அவர் தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார். வேறு யாரோ ஒருவரின் வண்டிக்கு வாங்கிவிட்டு அவர் சென்றிருக்கலாம். உதயநிதி என்கிற பெயருக்கு அவர் வாங்கினாரா, ஆள் மாறாட்டம் செய்துதான் போயிருக்கிறார்.

அமைச்சர் ஜெயக்குமார்

சட்டத்தை மீறுவது தி.மு.கவினருக்குக் கை வந்த கலை. அதைத்தான் அவரும் செய்திருக்கிறார். சீமான் சரியான காரணங்களுக்காக பாஸ் விண்ணப்பித்தால் கண்டிப்பாகக் கிடைக்கும். ஆள் பார்த்து யாருக்கும் வழங்கப்படுவதில்லை. சாத்தான்குளம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதுகுறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

Also Read: உதயநிதியை வைத்து கனிமொழிக்கு `செக்’? – கழக குடும்பத்தில் அரசியல் ஆடுபுலி

அமைச்சரின் குற்றச்சாட்டுகள் குறித்து, விளக்கம் கேட்க, உதயநிதி ஸ்டாலினைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவரைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், அவருடன் சாத்தான்குளம் சென்றுவந்த, சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசினோம்,

”இ பாஸ் வாங்கவில்லை என்றால் செக்போஸ்ட்டில் எங்களை எப்படி அனுமதிப்பார்கள். தவிர, உதயநிதி ஒரு பத்திரிகையாளர் என்பதையே அனைவரும் மறந்துவிடுகிறார்கள்” என்றார்.

பரந்தாமன் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தொடர்ந்து, ”தி.மு.கவினர் தங்களின் உட்கட்சி அரசியலுக்காக சாத்தான்குளம் விஷயத்தைப் பயன்படுத்துகிறார்கள்” எனும் சீமானின் குற்றச்சாட்டு குறித்து, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர், பரந்தாமனிடம் பேசினோம்,

”சாத்தான்குளம் விவகாரத்தில் அரசின் மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக, சீமான், த.மா.காவைச் சேர்ந்த யுவராஜ், பி.ஜே.பியின் முருகன் ஆகியோரை அ.தி.மு.க அறிக்கை விடச் செய்கிறது. உதயநிதியை விமர்சிக்கும் யாரும், சாத்தான்குளம் சென்று அந்தக் குடும்பத்தினரைப் பார்க்கவில்லை. சீமான் ‘இ பாஸ் கேட்டு’ விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தைப் பொதுத்தளத்தில் வெளியிடவேண்டும். தி.மு.க ஒன்றும் விலைபோகவில்லை, தி.மு.க.வின் வாக்குகளை மடைமாற்ற சீமான்தான் விலை போயிருக்கிறார். கனிமொழி அந்தத் தொகுதி எம்.பி. அந்த வகையில் அவர் போனார். முப்பது வயது இளைஞனின் மரணம் உதயநிதியைப் பாதிக்க, இளைஞரணிச் செயலாளரான அவர் போனார். இதில் எந்த உட்கட்சி அரசியலும் இல்லை” என்கிறார் பரந்தாமன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.