வணக்கம் சார்.. என்னுடைய பெயர் —–. நான் அம்பத்தூர் மண்டலம் பாடி பகுதியில் குடியிருக்கிறேன். இப்போது எல்லோரும் பயப்படுகிற கொரோனா தொற்று நோயாளி நான். கடந்த 4 நாள்களுக்கு முன் எனக்கு சளி, தொண்டை வலி இருந்தது. அதனால் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தேன். டெஸ்ட் ரிப்போர்ட்டில் எனக்குக் கொரோனா உறுதியானது. அதனால் வீட்டில் எமர்ஜென்ஸியாக வைத்திருந்த மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசும் தி.மு.க மருத்துவக் குழு

ஆய்வகத்திலிருந்து வாட்ஸ் அப்பில் எனக்கு ரிப்போர்ட் அனுப்பினார்கள். அந்த ரிப்போர்ட் அரசு அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பியதாக லேப்பில் இருந்தவர்கள் கூறினார்கள். ராத்திரி முழுவதும் தலைவலியால் அவதிப்பட்டேன். காலையில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. கொரோனா தடுப்புப் பணிகளில் இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என சில மாதங்களுக்கு முன் நான் அரசைப் பாராட்டி வீடியோ பதிவு செய்துள்ளேன்.

மாநகராட்சி அதிகாரிகள் காலையில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதன்பிறகு நானே மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தேன். அப்போது வீட்டுக்கு வந்த சுகாதாரத்துறையினர் என் கணவரையும் மாமியாரையும் அழைத்துச் சென்றுவிட்டனர். அதனால் எனக்கு சாப்பாடு கொடுக்கக்கூட ஆளில்லை. தனியாக வீட்டிலிருந்து அவதிப்படுகிறேன். மருத்துவமனையில் மாத்திரைகள் கேட்டால் தர மறுத்துவிட்டனர். எதற்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீர்கள். இது யாருடைய தவறு எனத் தெரியவில்லை. இதன்காரணமாகத்தான் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது என நான் கருதுகிறேன்” என்று அந்தப் பெண் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அந்த வீடியோவை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், பார்த்துவிட்டு உடனடியாக கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான சேகர்பாவுவைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். உடனடியாக கொரட்டூர்ப் பகுதியில் குடியிருக்கும் தி.மு.க மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் நாகராஜிக்கு நேற்றிரவு 9.45 மணிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு மருந்து, மாத்திரைகள், முகக் கவசம் ஆகியவற்றுடன் நாகராஜ் சென்றுள்ளார். அவருடன் தி.மு.க மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி கொரோனா கவச உடையணிந்து சென்றார். இந்த டீம் செல்வதற்கு முன் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அந்தப் பெண்ணிடம் போனில் பேசி விவரங்களைக் கேட்டுள்ளார். 25 நிமிடங்களுக்குள் அந்தப் பெண்ணுக்குத் தி.மு.கவினர் உதவிகளைச் செய்துள்ளனர்.

ஸ்டாலின்

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு “தி.மு.க தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்ததும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்தோம். பின்னர், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தோம்” என்றார்.

நாகராஜிடம் கேட்டதற்கு “தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தகவலின்படி மாவட்டச் செயலாளர் சேகர்பாபு விவரத்தைக் கூறியதும் உடனடியாக மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை நேரில் சந்தித்தேன். அவர் அழகுக் கலை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். மருந்து கிடைத்தும் நன்றி கூறினார். தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தி.மு.கவினர் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் நன்றி தெரிவித்து இன்னொரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் நான் அரசை குறை சொல்ல வேண்டும் என்று முதல் வீடியோ பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.