கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்து வரும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 6.76 லட்சம் மக்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 35,000-த்தைக் கடந்துள்ளது. இதனால், எண்ணிக்கையின் அடிப்படையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரேசிலானது, அந்நாட்டில் வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஒட்டுமொத்த புள்ளி விவரங்களை வெளியிடாமல் மறைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, வைரஸ் தொடர்பான விஷயத்தில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் எண்ணிக்கைகளை மறைத்துள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் தங்களது நாடுகளில் பாதிப்படைந்தவர்கள், குணமடைந்தவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக அரசால் தொடங்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றன. பிரேசிலும் அவ்வாறு எண்ணிக்கைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து வந்தது. ஆனால், தற்போது அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகமானது பதிவேற்றப்பட்ட தரவுகளை இணையதளத்தில் இருந்து அகற்றியுள்ளது. அதிபர் பொல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய ஒட்டுமொத்த தரவுகள்… நாட்டின் தற்போதைய நிலையை பிரதிபலிக்காது” என்று பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைரஸ் அந்நாட்டில் பரவத் தொடங்கிய நாள்கள் முதலே, அதிபர் பொல்சனாரோ ஊரடங்குக்கு எதிராகவும் மாகாணங்களில் ஊரடங்கை அமல்படுத்தும் ஆளுநர்களுக்கு எதிராகவும் பேசி வந்தார். இவரின் அழுத்தம் தாங்காமல் இரண்டு சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதுவரை பதவி விலகியுள்ளனர்.

Also Read: `சிறு காய்ச்சல்… கொலையாளி… 2 வது இடத்தில் பிரேசில்!’ – அதிபரின் அலட்சியத்தை எதிர்க்கும் மக்கள்

தொற்றுநோய் பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்த covid.saude.gov.br என்ற முகவரியில் செயல்படும் இணையதளத்தில் இருந்து தரவுகளை நீக்கியதற்கு அதிபர் பொல்சனாரோவோ, சுகாதாரத்துறை அமைச்சகமோ எந்தவிதமான விளக்கங்களையும் இன்னும் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பக்கத்திலிருந்து தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. பின்னர், சனிக்கிழமை முதல் கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் எவ்வளவு புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது, இறப்புகள் எவ்வளவு ஏற்பட்டுள்ளது மற்றும் குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு வருகிறது. சனிக்கிழமை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 27,075 பேருக்கு புதிதாகத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 904 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த விஷயம் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இணையதளம்

முன்னதாக, ஒருநாளில் 5 மணி வரை கிடைத்த தரவுகளை அந்நாட்டு இந்த இணையதளத்தில் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது இரவு 10 மணி அளவில் தரவுகள் வெளியிடப்படுகிறது. இதுதொடர்பான விமர்சனங்களையும் அந்நாட்டு அரசாங்கம் சந்தித்து வருகிறது. “பாதிப்படைந்தவர்கள் பற்றிய தரவுகளின் வெளிப்படைத்தன்மை தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான சக்தி வாய்ந்த கருவி” என பிரேசிலிய பத்திரிகை கழகத்தின் தலைவர், பவுலோ ஜெரோனிமா குறிப்பிட்டார். தாமதமாகத் தகவல்கள் வெளியாவது குறித்து பத்திரிகையாளர்கள் பொல்சனாரோவிடம் கேட்டதற்கு, நகைச்சுவையான பதில்களைச் சொல்லி கடந்துசென்றுள்ளார். உலகில் அதிகம் மக்கள் தொகைக் கொண்ட பல நாடுகளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மறைத்து வருவதாகப் பிற நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இணையதளத்தில் இருந்தே வெளிப்படையாகத் தரவுகளை பிரேசில் அரசு மறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவிலான பாதிப்பு எண்ணிக்கையை மறைக்க அரசு முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன.

Also Read: `அதிபரின் அழுத்தம்; அதிகரித்த உயிரிழப்புகள்!’ – ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.