கேரளாவில் கர்ப்பிணி யானையின் மரணம், தேசத்தையே உலுக்கியுள்ளது. ’பன்னி படக்கம்’ என்ற வெடி பொருள் வைத்த தேங்காயை உண்டது, கடைசியில் அந்த யானையின் உயிரையே பறித்துவிட்டது. கொரோனா வைரஸ், ஊரடங்கு, பசி, வாழ்வாதாரம் பாதிப்பு என்று பேரிடர்களுக்கு மத்தியிலும் பேரிடியாகத் தாக்கியுள்ளது அந்த யானையின் மரணம்.

யானை

இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, கேரளா மன்னார்காடு பகுதியில் உயிரிழந்த யானை குறித்து மட்டுமல்ல; மன்னார்காடுக்கு அருகே உள்ள நம் கோவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யானைகளுக்கு நடந்து வரும் கொடுமைகளையும்தான்.

2008-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை ஈரோட்டிலிருந்து பாலக்காட்டை நோக்கிப் பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. கோவை, மதுக்கரையைக் கடந்து காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து வந்தது அந்த ரயில். குரும்பப்பாளையம் அருகே தண்டவாளத்தில் ஒரு பெண் யானை, இரண்டு ஆண் யானைகள் நின்றுகொண்டிருந்தன. மற்றொரு யானை தண்டவாளத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. யானைகளைப் பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டார். ஆனால், அதற்குள் ரயில் அந்த மூன்று யானைகள் மீதும் மோதிவிட்டது.

உயிரிழந்த பெண் யானை

ரயில் மோதிய வேகத்தில் பெண் யானை தூக்கி வீசப்பட்டு, மின் கம்பத்தில் மோதி ரயில் இன்ஜினுக்கும், பெட்டிக்கும் இடையில் விழுந்து சிக்கிக்கொண்டது. அதன் பிறகும், யானையின் உடல் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. உடல் உருக்குலைந்து, அதன் வயிற்றில் இருந்த 18 மாத ஆண் யானைக்குட்டி வெளியே விழுந்து இறந்தது.

ஆம், 12 ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒரு கர்ப்பிணி யானையை, அதன் சிசுவுடன் காவு வாங்கியிருக்கிறோம். தண்டவாளத்துக்கும், அதன் அருகில் இருந்த மண்மேட்டுக்கும் இடையே சிக்கி இரண்டு ஆண் யானைகளும் உயிரிழந்துவிட்டன. அந்த விபத்திலிருந்து தப்பிய ஒரே ஒரு யானை, சில மீட்டர் தொலைவில் பயத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

யானை

Also Read: `அன்னாசிப் பழமல்ல… தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ -யானை மரணத்தில் என்ன நடந்தது?

பின்னர், அந்த யானையை வனத்துறையினர் விரட்டிவிட்டனர். அதனுடன் முடியவில்லை. 2011, 2016 ஆண்டுகளில் இதேபோல ரயில் மோதி 5 யானைகள் உயிரிழந்தன. இப்போதும், தமிழக – கேரள எல்லையில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கேரளாவில் பன்னி படக்கம் என்றால் தமிழகத்தில் அவுட்டுக்காய். அவ்வளவுதான் வித்தியாசம். 2016-ம் ஆண்டு தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு குட்டி யானை அவுட்டுகாயைச் சாப்பிட்டுவிட்டது. விளைவு, அதன் தாடை கிழிந்து, உண்ணவும் முடியாமல், உறங்கவும் முடியாமல் சில நாள்களில் பரிதாபமாக உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் அருகே அவுட்டுக்காய் வெடித்ததில் 15 வயதுப் பெண் யானை பாதிக்கப்பட்டு. தண்ணீரோ, உணவோ சாப்பிட முடியாமல் துடிதுடித்து உயிரிழந்தது.

யானைகள்

2018-ம் ஆண்டு மட்டும் 4 யானைகள் அவுட்டுக்காயால் உயிரிழந்துள்ளன. யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. ஆனால், அவுட்டுக்காயால் கடுமையாகப் பாதிக்கப்படுவது அதன் வாய்ப்பகுதிதான். இதனால் பசித்தாலும் உணவு சாப்பிட முடியாது. இப்படி பசியும், காயத்தின் வலியும் உயிரைப் பறித்த யானைகளின் எண்ணிக்கை ஏராளம்.

யானைகளுக்கு மற்றொரு பெரிய எமன், மின்வேலிகள். 2015-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. அதே மேட்டுப்பாளையம் பகுதியில் 2017-ம் ஆண்டு ஒரே விபத்தில் மின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழந்தன. அந்த விபத்தில் குட்டி யானை ஒன்றும் காயமடைந்தது. 2019-ம் ஆண்டு மதுக்கரை அருகே ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலி தாக்கி குட்டி ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

யானை

2019-ம் ஆண்டு மட்டுமே கோவையில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட யானைகள் மின்சாரம் தாக்கி உயிர்களை விட்டுள்ளன.

இதுதவிர கல்வி நிறுவனங்களாலும், ஆசிரமங்களாலும், ரிசார்ட்ஸ்களாலும் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, காடுகளில் உணவு கிடைக்காமல், அவை காட்டைவிட்டு நகருக்குள் வருகின்றன. அப்படி வரும் யானைகள் விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் கிடைக்கும் உணவுகளுக்குப் பழக்கப்படுகின்றன. ஆனால், யானைகளின் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, மனிதர்களோடு பிரச்னை செய்வதாக யானைகளை இடம் மாற்றியும், பயிற்சி யானைகளாக மாற்றியும் வருகிறது.

சின்னத்தம்பி யானை

கடந்த இரண்டு ஆண்டுகளில் விநாயகன், சின்னத்தம்பி, அரிசிராஜா என்ற மூன்று யானைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் விநாயகன் யானையை முதுமலை வனப்பகுதியில் விட, சின்னத்தம்பியும், அரிசிராஜாவும் ஆயுள் கைதிகளாக வரகளியாறு மரக்கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன.

இப்போதும், உணவைத் தேடியும், தனது வாழ்விடத்தைத் தேடியும் கோவையின் பல்வேறு பகுதிகளில் யானைகள் உலா வருவதைக் காண முடியும். ஆனைக்கட்டி அருகே ஒரு யானை குப்பைத் தொட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மற்றொரு யானை, ஹோட்டலில் தூக்கி வீசப்பட்ட எச்சில் இலைகளை உண்ட அவலமும் நடந்துள்ளது.

யானைகள்

இப்படி காடுகளில் உணவு கிடைக்காமல், மனிதர்களை நம்பி வெளியில் வரும் யானைகளுக்கு ரயில் தண்டவாளங்களும், அவுட்டுக்காய்களும், மின்வேலிகளும் மரண தண்டனையை வழங்கி வருகின்றன. வழக்கம் போல மனிதன் செய்யும் தவறுகளுக்கு, யானைகளே மீண்டும் மீண்டும் தண்டனைகளை அனுபவித்து வருகின்றன.

கோவையில் யானைகளின் வாழ்விடத்தை மறித்த புகாருக்குள்ளான நிறுவனங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

யானைகள்

Also Read: யானைகளையும் பன்றிகளையும் காவு வாங்கும் பன்றிக்காய்… எப்படி நடக்கிறது, எப்படி தவிர்ப்பது?

தவறு செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்ல; தங்களது வாழ்வியலை மட்டுமே மையமாக வைத்து, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தையும் சர்வ சாதாரணமாகக் கடந்துசெல்லும் அனைத்து மக்களுமே ஒரு விதத்தில் குற்றவாளிகள்தான்!

யானைகளுடன் நல் உறவில் இருக்கும் ஒரே மனித சமூகம் பழங்குடிகள்தான். அதனால்தான், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், பழங்குடி மக்கள் யானைகளை கடவுளாக வணங்குகின்றனர். காட்டு ராஜா யார் என்று கேட்டால், நம்மில் பலரும் சிங்கம் என்றுதான் சொல்வோம். ஆனால் பழங்குடி மக்களிடம் கேட்டால், யானைகளைத்தான் ’காட்டு ராஜா’ என்று சொல்வார்கள். ஏனென்றால் காடுகளை உருவாக்குவது யானைகள்தான் என்பது பழங்குடி மக்களுக்கு நன்கு தெரியும். 2008-ம் ஆண்டு ரயில் விபத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்தபோது, கோவையில் கர்ப்பிணிகள் உட்பட ஏராளமான பெண்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

யானை

மதுக்கரை மகாராஜா இறந்தபோது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். விநாயகன், சின்னத்தம்பியைப் பிடித்தபோதும் கண்ணீர்விட்டும், போஸ்டர் ஒட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது அதே மக்கள்தான் மன்னார்காட்டில் உயிரிழந்த கர்ப்பிணி யானைக்கும் கண்ணீரைக் காணிக்கையாக்கி வருகின்றனர். யானைகளுக்கு நம் கண்ணீரோ, கண்ணீர் அஞ்சலி போஸ்டரோ தேவையல்ல; அவற்றுக்குத் தேவை அவற்றின் வாழ்விடம். நிலம் அதன் உரிமை. அதன் வாழ்விடத்தை மீட்டுக் கொடுப்பது மட்டுமே, நாம் அவற்றுக்குச் செய்யும் அறம். இல்லையென்றால், நம் பாவக்கணக்கு நீண்டுகொண்டேதான் இருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.