தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை.

image

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.

இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும்.  

image

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். 

image

இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.

ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம்.

image

 எனவே தமிழக முதல்வர், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.