கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. கிரிக்கெட் முதல் ஒலிம்பிக் வரை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரசிகர் இல்லாத மைதானங்களில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

மைதானங்கள்

குறிப்பிட்ட தொடர் முடியும்வரை வீரர்களை அவர்கள் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் தற்போது 3 போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் தேதிகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-12 தேதிகளில் சௌதாம்படனிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் முறையே ஜூலை 16-20 மற்றும் ஜூலை 24-28 தேதிகளில் ஓல்டு டிராஃபோர்டிலும் நடைபெறும் என்று இங்கிலாந்து அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜூன் 9ம் தேதி இங்கிலாந்து வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வீரர்கள்…தனிமைப்படுத்தப்பட்ட சூழல்! – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு டிராவிட்டின் கேள்வி

அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஓல்டு டிராஃபோர்டு அழைத்துச் செல்லப்பட்டு மூன்று வாரங்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள். இந்தத் தொடரில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் மைதானத்துக்குள்ளேயே இருக்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வீரர்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதைக் கருத்தில் கொண்டே உரிய ஆலோசனைக்குப் பின்னர், இந்த மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், மருத்துவப் பரிசோதனை, சமூக இடைவெளி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று போட்டிகளும் ஓவல், எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் போட்டிகளுக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு முழுப் பணமும் திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

இதுதொடர்பாகப் பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர்களுள் ஒருவரான ஸ்டீவ் எல்வொர்த்தி, “கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அரசு மற்றும் மருத்துவக் குழுவினருடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். போட்டிகள் நடைபெறும் தேதிகளை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார். அதேபோல், அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிரான தொடர்களை நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. கொரோனா வைரஸ் பரவலால் நிறுத்தப்பட்ட பிறகு முதல்முறையாக நடக்கும் கிரிக்கெட் தொடர் இதுவே.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.