இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளர், மிகச்சிறந்த வீரர் என பல்வேறு நிலைகளில் இருந்து உலக ஹாக்கி விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கென தனி கவனத்தைப் பெற்றுத் தந்தவர், பல்பீர் சிங். 96 வயதான பல்பீர் சிங், உடல் நலக்குறைவு காரணமாக மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு ஹாக்கி விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவருடனான பயணங்கள் குறித்தும் சில ஹாக்கி வீரர்கள் கவலையுடன் ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பல்பீர் சிங்

இந்திய ஹாக்கி அணியானது 1948, 1952 மற்றும் 1956-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கங்களைப் பெற பல்பீர் சிங் முக்கியக் காரணமாக இருந்துள்ளார். 1952-ல் உதவி கேப்டனாகவும் 1956-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார். 1975-ம் ஆண்டு அஜித் பால் சிங் தலைமையில் இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பையை வெல்லும்போது அணியின் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் பல்பீர் சிங் இருந்துள்ளார். அதுமட்டுமல்ல, 1956-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனி ஒருவராக ஐந்து கோல்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. உலகக் கோப்பையில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்துப் பதக்கங்களையும் பெற்ற ஒருசில வீரர்களில் பல்பீர் சிங் முக்கியமானவர்.

Also Read: ஹாக்கி வீரர் டு விளையாட்டுத்துறை அமைச்சர்- முன்னாள் ஹாக்கி கேப்டன் சந்தீப் சிங்கின் அரசியல் பயணம்!

ஹாக்கி வீரர் தயான் சந்தின் மகன் அசோக் குமார் பல்பீர் குறித்து பேசும்போது, “என்னால் அந்த நாளை மறக்க முடியாது… 1971-ம் ஆண்டு பார்சிலோனாவில் உலகக் கோப்பை போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அப்போது, அணியின் மேலாளராக பல்பீர் சிங் இருந்தார். அந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் நாங்கள் தோல்வியடைந்தோம். அறைக்கு வந்த பின்னர் அவர் ஒரு குழந்தையைப் போல சண்டையிடுவதைப் பார்த்தேன். தோல்வியடைந்ததற்கு எந்தவித கடுமையான வார்த்தைகளையும் அவர் சொல்லவில்லை. ஆனால், மாலை வேளையில் நான் அவரது அறைக்குச் சென்றபோது அந்த உயர்ந்த மனிதர் அழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். `இந்த நாளைக் காண நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்?’ என்று அவர் சொன்னார்” என்று வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

பல்பீர் சிங்

தொடர்ந்து பேசிய அசோக்குமார், “1975-ம் ஆண்டு போட்டியின்போது அவர் எங்களது அணியின் பயிற்சியாளராக இருந்தார். தனித்துவமான வழியில் எங்களை அவர் ஊக்குவித்தார். எப்போதும் உங்களது இலக்கைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றும் மீனின் கண்கள் மீது கவனத்தை வைக்க வேண்டும் என்றும் கூறுவார். ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், பணிவுடன் நடந்துகொள்வார். எந்த விஷயத்துக்காகவும் அவர் கோபமடைந்து நான் பார்த்ததில்லை. மிகவும் அன்பானவர். ஹாக்கியைப் பற்றி அதிகளவில் தெரிந்து வைத்திருப்பவர்” என்று கூறினார்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட சில உயரிய விருதுகளையும் பல்பீர் சிங் பெற்றுள்ளார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை `The Golden Hat Trick: My Hockey Days’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இத்தகைய பெருமை மிக்க, பலரது அன்பையும் சம்பாதித்த மிகச்சிறந்த ஹாக்கி வீரர் இன்று உலகத்தை விட்டுப் பிரிந்திருப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: `இளைஞர்களுக்கு வழிவிடும் நேரம்!’ – ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.