பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பழைய சாமான்கள் வாங்குபவரை வரச்சொல்லியிருந்தேன். திண்ணையில் வேண்டாத பொருள்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

அப்பா… தினமும் அந்தத் திண்ணையின் ஓரத்தில் உட்கார்ந்து ஆங்கில இந்துபேப்பரைப் புரட்டிக்கொண்டிருப்பார். அவருக்கு அது தனிப்பட்ட பிரியம்! அந்த பேப்பரை அவரைத் தவிர தொடுவார் வீட்டில் எவருமில்லை.

எழுபது வயது என யாரும் கணித்து விட முடியாது. திருமான்கோட்டை அஞ்சலகத்தில் போஸ்ட்மேனாக இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி புரிந்த காலத்தில் ஓடிய ஓட்டம் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்ள பழக்கியிருந்தது.

Representational Image

தபால் அட்டையில் விளம்பர யுக்தி முதன்முதலில் ரஜினியின் பாபா திரைப்படத்துடன் ஆரம்பமானது. அடுத்து எந்திரன் பட விளம்பரமும் வந்தது. அந்தத் தபால் அட்டை வந்த 2010-ல் தான் ஓய்வு பெற்றார்.

3 பைசாவிற்கு அறிமுகமாகி 50 பைசாவிற்கு விற்கப்படும் தபால்கார்டு! சேகரிக்கப்பட்ட தபால்தலைகள்! பேப்பர் கட்டிங் என அவருக்குப் பிடித்தமானவற்றை அடைத்து வைக்கும் கூடுதான் அவரின் ஜோல்னா பை! அது அவர் ஓய்வு பெறும் தறுவாயில் கடிதப் பட்டுவாடாவிற்காகப் பயன்படுத்திய பை!

”ஏன் சுடுதண்ணி ஊத்தினமாதிரி பறக்கிற?” என இவரின் பட்டுவாடா வேகத்தின் மீது கேள்வி வரும் போது பழங்காலத்தில் காலில் கட்டப்பட்ட கடிதங்களோடு புறா பறந்த கதைகளையும், சங்க இலக்கியத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய இரு கடிதங்களைப்பற்றிச் சொல்லித்தெறிக்க விடுவார்.

அவரின் சைக்கிள் ஏறும் ஸ்டைலே தனி! ஒரு ஜம்ப் செய்து காலை தூக்கிப்போட்டவுடன் மணியடித்து சார் போஸ்ட் என்ற குரல் வசீகரமானது. அந்தக் குரலுக்காக எல்லா தெருக்களுமே காத்துக் கிடக்கும். வீட்டு நாய்களும் கூட இந்த மணியோசைக்கு வால் ஆட்டிக்கொண்டிருக்கும் பரிச்சயம்.

காதலர்களுக்கு இவர்தான் தேவ தூதன்! கடிதம் தாங்கிய வார்த்தைகளுக்காகக் காதல் பிரபஞ்சம் தவம் கிடக்கும்! வீட்டிற்குத் தெரியாமல் வீதியில் இடைமறித்துக் கடிதம் பறித்துச்செல்லும் காதலர்களின் விதி என்னவாயிருக்கும் என்ற கவலை வரும்! அந்தக் கவலையின் பிரயாசித்தமாகவே எங்களின் கலப்புக் காதல் திருமணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதித்தார். அப்பாவின் பெருங்கருணையிது!

Representational Image

தனக்குக் கடிதமே வருவதில்லை என அறியாமையால் சிறுவர்களும், தள்ளாமையால் அழும்போது முதியவர்களுக்கும் இவர் சொல்லும் ஒரே பதில் காலம் வரும் என்பதே!

சின்ன வயசில் அந்த சைக்கிள் முன் உட்காரப் பிடிக்கும். அப்போதெல்லாம் நான்தான் மணி அடிப்பேன். வீட்டில் இருக்கும் போது அவரின் தோளின் மீது அமர்ந்து முடியைப்பிடித்து ஆட்டுவேன். இந்த இரு விஷயங்களும் ஆறாம் வகுப்பு போகும் வரை நடந்தன. எப்போது நினைத்தாலும் சந்தோசப்பூக்கள் பூக்கும்!

இந்த மணி அடிக்கும் பழக்கம் 14 ம் நூற்றாண்டிலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கிறது. தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல ஒரு மைல் தூரத்தை மூன்றாகப்பிரித்து காவலர்கள் தயாராக நிற்பார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மணியோசை எழுப்பிக்கொண்டே போக வேண்டும். மணிச்சத்தம் அடுத்த காவலர் இதை வாங்கிக்கொண்டு ஓடத் தயாராக இருப்பாராம். அந்தப் பழக்கம்தான் மணி அடிப்பது என அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

அன்புள்ள மாலினிக்கு,

நானும் அம்மாவும் சேர்ந்து எழுதுவது! நலம்! உன் நலமறிய ஆவல்! உன்னுடைய கடிதம் கிடைத்தது. அதில் கண்ட மதிப்பெண் குறைவாக இருக்கிறது! அதற்காகக் கவலைப்படாதே! மதிப்பெண் என்பது வெறும் எண்கள் தான்! எண்கள் எண்ணங்கள் அல்ல! அம்மாவும் கருத்தும் அதுவே! இன்னும் ஆறுமாதங்கள் கஷ்டப்பட்டுப் படி! டிகிரி முடித்து நீ வீட்டிற்கு வரும் நேரத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இந்த மாதம் அலுவலகத்தில் லோனுக்கு அப்ளை செய்துள்ளேன். கிடைத்தவுடன் ஃபீஸ் கட்டிவிடலாம்!

உன் தோழிகள் பிரியாவுக்கும், தனத்திற்கும் எங்களது விசாரிப்புகளைத் தெரிவிக்கவும்!

பாசத்துடன்.

அப்பா,அம்மா

Representational Image

இப்படி மாதமொரு தபால் வந்துவிடும்! தோழிகள் மறக்காமல் தங்கள் பெயர் இருப்பதை அறிந்து சந்தோசமடைவார்கள்! கடிதங்கள் சமாதான தூதர்கள்! குடும்ப நோய்களைத் தீர்க்கும் மூலிகை என்பது அவரது நம்பிக்கை! அதற்கு அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதங்களே சாட்சி!

ஒரு தபால்அட்டையில்,” என் அன்பிற்கினிய மனைவிக்கு உன் அன்புக் கணவன் அன்புடன் எழுதிக்கொள்வது! நேற்றிலிருந்து நீ பேச மறுப்பது அநியாயம்! இனி நீ சொல்லும் மளிகைச் சாமான்களை மறக்காமல் வாங்கி வந்து விடுகிறேன். மேலும்… ”

அந்த தொக்கி நிற்கும் மேலும்… என்பதை அம்மா சொல்லிச்சொல்லிச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு நின்று போய் ஆறு மாதங்கள் ஆயின. அதிலிருந்துதான் அப்பாவின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.

ஓய்வு பெற்ற பிறகு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட மாடித்தோட்டத்தில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட ஆரம்பித்து விட்டார். கீழே இறங்கி வருவது அசலூருக்குப் போவதான உணர்வாகி விட்டது. அங்கே செழித்த துளசிச் செடியின் மீதுதான் அதிக அக்கறை! காரணம் அது அம்மா வைத்த செடி! இன்னொரு முக்கிய காரணம் அம்மாவின் பெயர் துளசியம்மாள்.

இரவு சிலசமயம் மாடியில் கட்டில் போட்டுத் தூங்குவார். இது அவருக்குப் பழக்கமாகிவிட்டது. பத்து நாள்களுக்கு முன் மாடியில் தூங்கியவர் எழுந்திருக்கவே இல்லை. காரியங்கள் முடிந்துவிட்டன.

Representational Image

வீட்டின் முன் கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் மங்கத்தொடங்கியிருந்தது. இன்னும் ஓரிரு நாள்களில் அது காற்றில் ஆடி சாய்ந்து போகலாம்! அந்த இடம் வெறுமையாகப்போகிறது! அதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன.

மாடியில் இருக்கும் அறையைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் தேவையில்லாத பொருள்களை விலைக்குப் போடக் காத்திருக்கிறேன். சைக்கிள் வரும் சத்தம் கேட்டது!

பழைய சாமான்கள் சொல்லியிருந்தீங்களே!

ஆமாம்…உள்ளே வாங்க…

பெரிய கேட்டை திறந்து… சைக்கிளில் கட்டியிருந்த குடங்கள் மோதாமல் உள்ளே வந்தான்.

அதோ அந்தத் திண்ணையில் இருக்கு…

இரும்புச் சாமான்களை எடை போட ஆரம்பித்தான்.

சார்… சுமார் 30 கிலோ இருக்கு…

கிலோ எவ்வளவு….

கிலோ 30 ரூபா… ஆனா இதுக்கு 30 ரூபா தர முடியாது…

ஏன்…

துருப் பிடிச்சுக்கிடக்கு…

அப்படியே இருக்காதே….

இல்லைங்க … பாருங்க…

நான் அருகில் சென்றேன்.

இதோ பாருங்க…

சரி….அஞ்சு ரூபா குறைச்சுக்கோ…

முடியாது சார்…20 ரூபாதான்…

அவன் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி விட்டு காசுகொடுக்கும் போது,”ஐயா இது என்னவோ பை!” என என் கணவனிடம் ஒரு ஜோல்னா பையைக் கொடுத்தான்.

அதை ஏனோதானோ என வாங்கிய என் கணவரின் கையிலிருந்த பையிலிருந்து சில கடிதங்கள் நழுவி விழுந்தன. கூடவே, ஒரு நூற்கண்டு விழுந்து ஓடி வெறுமையாகி நின்றது. அப்பாவின் வாழ்க்கையும் அதே தான்.

ஆளுக்கொரு கடிதங்களைப்பொறுக்க ஆரம்பித்தோம்!

அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு நின்ற கணவரின் கண்களில் கண்ணீர்

எட்டிப்பார்த்தன..!

Representational Image

அப்பா, அம்மா பரிமாறிக்கொண்ட கடிதங்கள்! அம்மாவை தனியாக விட்டுவிட்டுப் பயிற்சிக்காகப் போன சமயத்தில் எழுதிய கடிதம் போல இருந்தது. கடைசி வரிகள் மட்டும் அவர்களின் கடைசிக் கால வாழ்க்கைபோலத் தெளிவாகத் தெரிந்தன.

———

———

தனியாக இருந்து சிரமப்படுகிறேன். சீக்கிரமாக வந்து என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு

உங்கள் அன்பு மனைவி

துளசியம்மாள்.

சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.