கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வருமானம் ஏதுமின்றித் தினக்கூலி, புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில், தங்களைச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்

மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளின் கோரிக்கையின்படி ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கெனச் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல நூறு கிலோமீட்டர்கள் வரை தொழிலாளர்கள் நடந்தும் சைக்கிளில் பயணித்தும் வருவதைப் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும்.

Also Read: இந்தியாவை உலுக்கியப் புகைப்படமும் சர்வதேசப் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையும்!

அப்படி, ஹரியானா மாநிலம் குருகிராமிலிருந்து பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்குக் காயம்பட்ட தனது தந்தையை சைக்கிளில் கொண்டு சேர்த்திருக்கிறார் 15 வயதுச் சிறுமியான ஜோதி குமாரி என்பவர். ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டௌன் அமல்படுத்தப்பட்ட அதேநேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.

சிறுமி ஜோதி குமாரி

இதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள். குருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் தேதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் தேதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர். வழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.

இந்த விவகாரம் ஊடகங்கள் வாயிலாக வெளியில் தெரியவே, அவருக்கு உரிய முறையில் பயிற்சிகள் கொடுக்கத் தயாராக இருப்பதாக இந்திய சைக்கிளிங் ஃபெடரேஷன் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய ஆன்கன் சிங், “லாக் டௌன் முடிந்தவுடன் அவரை டெல்லிக்கு வரவழைத்து சில பரிசோதனைகளை வைக்க இருக்கிறோம். அதில், அவர் தேறும்பட்சத்தில் டெல்லியில் வைத்து அவருக்குப் பயிற்சிகள் கொடுக்க இருக்கிறோம். இன்று காலை அவரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினோம். அவரும் ஆர்வமாக இருக்கிறார்.

Also Read: `4 தண்ணீர் பாட்டில்கள்; 370 கி.மீ நடைப்பயணம்’ – பெங்களூரிலிருந்து கிளம்பிய தொழிலாளர் குடும்பம்

8ம் வகுப்பு மாணவியான அவர் தேர்வில் வெற்றிபெறும் சூழலில் ஆசியாவிலேயே மிகச்சிறந்த வசதிகள் கொண்ட டெல்லி சைக்கிளிங் மையத்தில் அவருக்குப் பயிற்சி அளிக்கப்படும். அவர் டெல்லி வந்து செல்வது மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்தும் எங்கள் செலவிலேயே ஏற்பாடு செய்யப்படும். 1,200 கி.மீ சைக்கிள் மிதிப்பது சாதாரணமான விஷயமல்ல. அந்தச் சிறுமியிடம் திறமை இருக்கிறது. உரிய முறையில் பயிற்சி கொடுத்தால் நிச்சயம் பெரிய அளவில் வருவார். 14 – 15 வரையிலான வயதில் சைக்கிளிங் செய்யும் வீரர், வீராங்கனைகள் நம்மிடம் 10 பேர்தான் இருப்பார்கள்’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.