கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒலிம்பிக் முதல் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், விளையாட்டு வீரர்கள் துடிப்புடன் உள்ளனர். இதற்கு உதாரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமூக வலைதளங்களில் ” Keep it Up” என்ற சவாலைத் தொடங்கியுள்ளார்.

யுவராஜ்சிங் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கிரிக்கெட் பேட்டின் நுனிப்பகுதியில் பந்து கீழே விழாமல் தட்டுகிறார். 23 விநாடிகள் அந்த வீடியோ நீடிக்கிறது. அதில், “இந்த சவாலான காலகட்டத்தில் நாம் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீட்டில் இருக்கிறேன். எவ்வளவு நாள்கள் அவசியமோ அவ்வளவு நாள்கள் அதை நான் கடைப்பிடிப்பேன்’’ என்று யுவராஜ் பேசுகிறார்.

மேலும், இதேபோன்று பந்து கீழே விழாமல் பேட்டின் நுனி கொண்டு தட்டமுடியுமா என கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு யுவராஜ் சவால் விடுத்தார். யுவராஜின் சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின், புதுமையாக அந்த சவாலைச் செய்துமுடித்திருக்கிறார்.

டெண்டுல்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #Keepitupchallenge இன் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், சச்சின் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு பந்தை கிரிக்கெட் பேட்டின் நுனியில் மிக லாகவமாகத் தட்டுகிறார். சச்சினின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்பின்னர், இதேபோல் கண்களை மூடிக்கொண்டு பந்தைத் தட்ட முடியுமா என யுவராஜ் சிங்குக்கு அவர் சவால் விடுத்திருக்கிறார்.

மேலும், அந்த வீடியோவில் சச்சின், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதற்குப் பதில் அளித்த யுவராஜ் சிங், `நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் விட்டுவிட்டேன்.

சச்சின் விட்ட சவாலைச் செய்வதற்கு எனக்கு ஒரு வாரம் ஆகலாம். நான் முயற்சி செய்கிறேன்’’ என்றார். இதையடுத்து, அதை எப்படி எளிதாகச் செய்யலாம் என இரண்டாவது வீடியோ ஒன்றையும் சச்சின் பதிவிட்டிருக்கிறார்.

ஹர்பஜன் சிங்கும் யுவராஜ் சிங்கின் சவாலை முடித்துவிட்டு, தான் இந்தக் கொரோனா தொற்று பிரச்னை முடியும் வரை வீட்டில் இருக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், இந்த சவாலைச் செய்யுமாறு தவான், சௌரவ் கங்குலி, அனில் கும்ப்ளே ஆகியோருக்கு ஹர்பஜன் சவால் விடுத்துள்ளார். போட்டிகள் முடங்கினாலும், சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அன்றாட நடவடிக்கைகளையும், கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.