பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும்பான்மையானோர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இணைய வெளியில் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் செய்வதை கலாய்த்து பல மீம்ஸ் உலவி வருகிறது. ஆனால், IT துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தில் உண்மையில் கொரோனா நோய் தொற்று என்ன பிரச்னைகளைக் கொண்டு வரப்போகிறது என்று நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது. பொது வெளியில் பலரும் IT ஊழியர்களைப் பற்றிக்கொண்டு இருக்கின்ற பிம்பம் ஆனது IT ஊழியர்கள் கடினமான வேலை செய்யாமல் அதிக சம்பளம் வாங்குபவர்கள் என்ற அளவிலேயே உள்ளது. அதனால்தான் இது போன்ற மீம்ஸ் அதிகம் ஷேர் ஆவதற்குக் காரணம் ஆகும்.

Representational Image

தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் 80% ஊழியர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நிறுவனங்களுக்கு வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு நமது நாட்டினோடு ஒப்பீடு செய்து பார்த்தால் பல மடங்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களிலேயே உள்ளது. நமது நாட்டில் இருந்து பெருவாரியான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த நாடுகளில் அதிகமான பணி நீக்க நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டன. இந்த நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது பொதுவாக தமது நாட்டு மக்களை பாதுகாக்க முயற்சி செய்யும். அதனால் வெளிநாடுகளிலிருந்து வேலை செய்பவர்களைத்தான் முதலில் வேலையில் இருந்து நீக்கப்பார்க்கும். அதனால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி நீக்க நடவடிக்கையினால் வேலை இழக்க வாய்ப்புகள் உள்ளன.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியான இந்தியர்களை முழு நேர ஊழியர்களாக இல்லாமல் பகுதி நேர (contract) ஊழியர்களாவே பணி அமர்த்தி இருக்கும். அதனால் இந்தியர்களே பெரும்பாலும் இந்தப் பணி நீக்க நடவடிக்கைக்கு உட்பட்டு வேலை இழப்பார்கள். ஏற்கெனவே வந்துகொண்டு இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பல்லாயிரம் ஊழியர்கள் தங்களது வேலையை இழந்து உள்ளனர். இன்னும் சில மாதங்களில் இது பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு வேலை இழந்தவர்கள் வெளி நாடுகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் நமது நாட்டுக்கு வந்து வேலை தேடச் செய்வார்கள்.

Representational Image

நமது இந்திய IT நிறுவனங்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படப் போகிறது என்று பார்ப்போம். இந்தப் பேரிடரால் வெளிநாட்டு நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்குவர். அவர்கள் புதிய வேலைகள் எதுவும் தொடங்க மாட்டார்கள். அதனால் அந்த நிறுவனங்களின் சார்பாக டெவலப்மென்ட் புராஜெக்ட்களில் வேலை செய்பவர்கள் வேலை இல்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மேலும், அனைத்து புராஜெக்ட்களிலும் செலவு குறைப்பு நடவடிக்கையால் ஆட்கள் குறைப்பு இருக்கும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் தமது பணிகளுக்கு பில்லிங்கில் தள்ளுபடி கேட்கும். அதனால் இந்திய நிறுவனங்களுக்கு வரும் லாபமானது கணிசமாகக் குறையும்.

IT துறையில் ஊழியரின் சம்பளமே நிறுவனத்தின் பிரதான செலவீனமாக உள்ளது. அதனால் இந்திய நிறுவனங்கள் இந்த பிரச்னையை சரி செய்ய அதிக ஊதியம் பெறுகின்ற ஊழியர்களை அவர்கள் வேலை செய்துகொண்டு இருக்கின்ற புராஜெக்ட்டில் இருந்து நீக்க வாய்ப்பு அதிகம். இவர்கள் அனைவரும் பெஞ்சுக்கு (வேலை இல்லாதவர்களை நிறுவனம் உடனடியாகப் பணி நீக்கம் செய்யாது. அவர்கள் பெஞ்சில் இருந்து நிறுவனத்தின் பிற இடங்களில் வேலை இருக்கிறதா என்று தேடலாம்) அனுப்பப்படுவர்.

Representational Image

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10% வரை பெஞ்சில் ஊழியர்களை வைத்து இருப்பார்கள். புதிதாக புராஜெக்ட் கிடைக்கும்போது பெஞ்சில் இருப்பவர்களுக்கு வேலை கிடைத்து விடும். ஆனால், இந்தப் பேரிடர் சூழ்நிலையில் பெஞ்சில் 25 முதல் 30 சதவிகித ஊழியர்கள் நிரம்பிவிடுவார்கள். இவர்களில் பெரும்பானவர்கள் அதிக ஊதியம் வாங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை நிறுவனத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்காது. அதனால் நிறுவனங்கள் மெதுவாக ஒவ்வொருவராக பெஞ்சில் இருந்து பணிநீக்கம் செய்யும். இதன் மூலம் இன்னும் 6 மாதத்தில் பல்லாயிரக்கணக்கான IT ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பார்கள்.

4 ஜூலை 2018 அன்று விகடனில் (தமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை… காரணமும் தீர்வும்! #DataStory) 4 வருடங்களில் 8,000 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடிப்படையாக வைத்து ஒரு கட்டுரை வந்து உள்ளது. வாழ்ந்து கெட்ட குடும்பம் நிர்கதியானால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை அந்தக் கட்டுரை நமக்கு நினைவுபடுத்தியது. நல்ல வேலையில், வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை செய்த ஒருவர் ஒரே நாளில் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுவது என்பது கண்ணிருந்தும் பார்வை இழப்பதற்குச் சமம் ஆகும். இந்த நிலை வராமல் இருக்க நிறுவனங்களும் அரசும், ஊழியர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

Representational Image

ஒரு நிறுவனம் மற்றும் ஊழியர்களின் அடிப்படையில் இந்த பிரச்னைக்கு என்ன விதமான தீர்வு காண முடியும் என்று பார்க்கலாம்.

முதலாவதாக நிறுவனம் இந்தப் பேரிடர் காலங்களில் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதே இதற்குத் தீர்வு. நாம் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு நிறுவனத்தின் செலவினில் அதிக சதவிகிதம் (தோராயமாக 60%) ஊழியர்களின் சம்பளத்துக்கே செல்கிறது. நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் 3 மாதம் முதல் ஒரு வருட ஊதியத்தில் 1 முதல் 5 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யலாம். தகவல் தொழில்நுட்ப துறையில் பெருவாரியான நிறுவனங்களில் தமது ஊழியர் சம்பளத்தில் நிலை மற்றும் நிலையில்லாத சம்பளம் (Variable pay – பஞ்சபடிக்கு நிகராக) என்று இரண்டு தொகுப்பைக் கொண்டு உள்ளது. இதில் நிலை இல்லாத ஊதியத்தில் இருந்து இந்த ஊதியத்தைப் பிடித்தம் செய்யலாம். ஊழியர்களின் பார்வையில் இது ஒரு காப்பீடு போன்றதுதான். முழுவதுமாக வேலை இழப்பு ஏற்படாமல் குறுகிய காலத்துக்கு சிறிது பணம் பிடித்தம் செய்வது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது.

இரண்டாவது ஒவ்வொரு நிறுவனத்தின் அடிப்படையில் செலவு குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் நிறுவனங்கள் தமது ஊழியர்களை அதிக பாதிப்பில்லாமல் பாதுகாக்க முடியும். பெருவாரியான நிறுவனங்களின் பங்குகள் கடந்த 30 வருடங்களில் 1,000 முதல் 10,000 மடங்கு வரை உயர்ந்து உள்ளது. இந்த லாபத்தைக் கொண்டு வந்த ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை என்பதை புரிந்து கொண்டு நிறுவனங்கள் இப்போது செயல்பட வேண்டும்.

Representational Image

அரசின் சார்பாக இந்தப் பேரிடர் காலத்தில் நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் வழங்க முடியும் என்று ஆராய வேண்டும். நிறுவங்களுக்கு இந்தப் பேரிடர் காலத்தில் வரிச் சலுகைகள் அல்லது நிவாரண நிதிகள் வழங்கி நிறுவனத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு ஊழியரைப் பணிநீக்கம் செய்வது என்பது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கூர்மையான ஆயுதமாகும். அதிக பணிநீக்கம் மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும். நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும். அதன் பின் விளைவுகளாக நிறுவனத்தின் லாபத்தையும் பாதிக்கும். அதனால் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே பொருளாதாரத்தை இந்தப் பேரிடர் காலத்தில் மீட்டெடுக்க உதவும்.

அதனால் இந்த ஆபத்தான காலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதே இதற்கான சரியான முடிவாக இருக்கும்

ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.