கொரோனா ஊரடங்கு காலத்தால் மட்டும் இந்தியாவில் 2.1கோடி குழந்தை பிறப்புகள் இருக்கலாம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இந்தப் பிறப்பு விகிதமானது கொரோனா பொதுமுடக்கத்தால் அனைவரும் வீட்டில் இருப்பதால் ஏற்பட்டுள்ளது. அதுவும் மார்ச் மாதத்துக்குப் பிறகான ஊரடங்கால் டிசம்பருக்குப் பிறகு குழந்தை பிறப்புகள் இருக்கலாம் என்கிறது ஐக்கிய நாடுகளின் உயர்நிலைக் குழு. மே10-ம் தேதி தாய்மார்கள் தினத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கலாம் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

குழந்தைகள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 11-ம் தேதியிலிருந்து சுமார் 40 வாரங்கள் கழித்து இந்த பிரசவங்கள் இருக்கும். அதுவும் மார்ச் 11-க்குப் பிறகான ஊரடங்கால் டிசம்பர் 16-க்குப் பிறகு இந்தப் பிறப்புகள் அதிகம் இருக்கும் என்கிறது அந்த அமைப்பு. மற்ற நாடுகளைப் பொறுத்தவரையில் சீனா (1.35 கோடி), நைஜிரியா (60.4 லட்சம்), பாகிஸ்தான் (50 லட்சம்) மற்றும் இந்தோனேசியா (40 லட்சம்) என்ற எண்ணிக்கையில் குழந்தைகள் பிறக்கலாம் என்றும் சொல்கிறது. இந்த நாடுகளில் வழக்கமாகவே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் இருப்பதாகவும் அதுவும் கொரோனா காலகட்டத்துக்கு பின்பு மேலும் இது அதிகரிக்கும் எனவும் கூறுகின்றது UNICEF. 2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 2.41 கோடி குழந்தைகள் பிறக்கும் என்கிறது யுனிசெஃப்.

இந்தக் கொரோனா தொற்றிற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளால் வழக்கமாக நடைபெறும் மகப்பேறு சிகிச்சை மற்றும் தாய்மார்களின் வழக்கமான சிகிச்சையை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. வளர்ந்த நாடுகளிலும் இதே பிரச்னை நிலவுகிறது. அமெரிக்காவில் 30.3 லட்சம் மகப்பேறுகள் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரை இருக்கும். உலகம் முழுவதும் இந்தக் கொரோனா தொற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் அடிப்படை சிகிச்சைக்காகவே பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். அதுமட்டுமன்றி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

மருத்துவர்

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பெண்கள் தாய்மை அடைந்துள்ளனர். `கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாகத்தான் இந்த அளவுக்கு பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். இதனால், உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் வழக்கமான சிகிச்சைக்காக மருத்துமனை சென்றாலும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்கின்ற பயம் பெரும்பாலானோர்க்கு உள்ளது’’ என்று கூறுகிறார் யுனிசெஃபின் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா.

கர்ப்பம் தரித்து குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகும் அல்லது 39 முதல் 40 வாரங்கள் ஆகும். மார்ச்11-ம் தேதியிலிருந்து 40 வாரங்களைக் கணக்கிட்டு WHO அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பெருமளவில் பாதிப்பு ஏதும் கர்ப்பம் தரித்தவர்களுக்கு ஏற்படாவிட்டாலும் மகப்பேறு நிலையில் இருக்கும் தாய்மார்கள் கவனமாகவே இருக்க வேண்டும் என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது. பிரசவத்துகுத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம்

ஆரோக்கியமில்லாமல் பிறக்கும் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாத குழந்தைகள் இறக்க அதிக வாய்ப்புகள் உள்ளதெனவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். `பாலூட்டுதல், தேவையான சத்தான உணவுகள் அளித்தல், சிகிச்சைகள் போன்ற அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. இது ஒரு கடினமான தாய்மைக் காலம். அனைத்திலும் கூடுதல் கவனமாகவும் மிகுந்த எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொரோனா தொற்று அச்சுறுத்தலால் பீதியடையாமல் ஒற்றுமையுடன் இதை எதிர்கொள்ள வேண்டும். பாதுகாப்பான உணர்வை தாய்மை அடைந்தவர்களுக்கு ஏற்படுத்தினாலே அவர்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.

இதற்கான அவசரகால நடவடிக்கையாகக் குழந்தை பிறப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோனை அவசியம். அதேபோல், திறமையான மகப்பேறு சிகிச்சையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறப்புக்கான பிந்தைய சிகிச்சையும் பாதுகாப்புக்காகத் தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான சிகிச்சையும் அவசியம். மருத்துவப் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் அவர்களால் இளம் தாய்மார்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

கர்ப்பிணி

கொரோனா தொற்று தாயிடமிருந்து சேய்க்கு பரவுமா என்ற சந்தேகம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தம்மை தொற்றிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் கடமை அனைத்து தாய்மார்களுக்கும் உள்ளது. கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் அவ்வப்போது தங்களை சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகிறது. அவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டமான பகுதிகளைத் தவிர்ப்பது நல்லது. இணையத்தில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம். கொரோனா தொற்றுக்கு முன்பாகவே வருடத்துக்கு சுமார் 2.8 கோடி குழந்தை இறப்புகள் நிகழ்கின்றன’’ என்று யுனிசெஃப் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவிர்க்க முடியாத சூழலால் ஒவ்வொரு 11 விநாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. சிறந்த பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை மகப்பேறு காலங்களில் தாய்மார்களுக்கு அளித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பிரசவம் தாய்க்கும் சேய்க்கும் வழங்கிட வேண்டியது கடமையாகும் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.