தமிழகத்தில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளிலேயே படகு கட்டும் தொழில் நடைபெற்று வருகிறது. அந்தமான், சிங்கப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து படகு கட்டுதலுக்குத் தேவையான மரத்தடிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கப்பல் கட்டுதல் தொழில் நடைபெறுகிறது.

பாதியில் நின்ற படகு கட்டும் தொழில்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான 13 கடலோர கிராமங்கள் உள்ளன. 25,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த மீனர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தளமாகக் கொண்டு 260 விசைப்படகுகள் மற்றும் 150 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். மீன்பிடித் தொழிலைப் பொறுத்தவரையில் மீனவர்களின் முதலீடு என்றால் படகுகள்தான்.

இம்மாவட்டத்தில் தருவைகுளம், திரேஸ்புரம், தூத்துக்குடி கடற்கரை சாலை உள்ளிட்ட 10 பகுதிகளில் படகு கட்டுதல் தளம் உள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்டோர் படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 20 அடி நீளம் முதல் 50 அடி நீளம் வரையிலும், 10 அடி உயரம் முதல் 20 அடி உயரம் வரையிலும் படகுகள் கட்டப்படுகின்றன. குறைந்தபட்சமாக ரூ.25 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி மதிப்பில் படகுகள் கட்டப்படுகின்றன.

படகு கட்டும் தளத்தில் தொழிலாளர்கள்

தற்போது ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட தொழில்களை குறைந்தபட்ச தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்ச தொழிலாளர்களைக் கொண்டு இத்தொழிலை மேற்கொள்வதில் சாத்தியமில்லாததால் தளர்வு அளிக்கப்பட்டும் பலனில்லை என வேதனையுடன் கூறுகிறார்கள் படகு கட்டும் தொழிலாளர்கள்.

இதுகுறித்து படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் பேசினோம், “படகு கட்டும் தொழிலை நம்பி தச்சர்கள் மட்டுமல்லாமல் மோட்டார் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், வெல்டர், பெயின்டர், சுத்தம் செய்பவர் உள்ளிட்ட பல நிலைத் தொழிலாளர்களும் வேலை செய்வதால் இத்தொழிலை தூத்துக்குடியின் உயிர்நாடி என்றே சொல்லலாம். இத்தொழிலில் தினசரி கிடைக்கும் ரூ.600 முதல் 1,000 வரையிலான கூலியை வைத்துதான் பிழைப்பை நடத்தி வந்தோம். கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேலையிழப்பால் வாடுகிறோம். அரசு அளித்த நிவாரணத் தொகை ரூ.1,000 எங்களுக்குப் போதுமானதாக இல்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வால் மே 17 வரை 4 தொழிலாளர்களை வைத்து மட்டுமே கட்டுமானம் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதியில் நின்ற படகு கட்டும் பணி

குறைந்தபட்சம் 10 நபர்கள் இருந்தால் மட்டுமே இத்தொழிலை தொய்வின்றி மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே மேற்கொண்டு வந்த படகு கட்டும் வேலைகளும் பாதியில் அப்படியே நின்று போனது. மீன்பிடித் தடைக்காலம் முடிவுபெறும் ஜூன் மாதத்திற்குள்ளாக நின்றுபோன பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் இத்தொழிலை மேற்கொள்ள முடியும். எனவே, படகு கட்டும் தொழில் நடக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.