நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ரிஷி கபூரின் மகள் சாலைவழியே டெல்லியிலிருந்து மும்பைக்கு காரில் புறப்பட்டுள்ளார். 
 
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்(67). 1970-ம் ஆண்டில் ‘மேரா நாம் ஜோக்கர், படத்தில் அறிமுகமானார். இதற்கு அவர் தேசிய விருதும் வாங்கினார். 1973-ல் வெளியான ‘ பாபி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ரிஷி கபூர் 2018-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்தார். சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கில் இருந்து இந்தியா திரும்பினார்.
 
image
 
இதனிடையே நேற்று  உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் ரிஷி கபூர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக அவரது சகோதரர் ரந்தீர் கபூர் தெரிவித்தார். இதையடுத்து ரிஷி கபூர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரிஷி கபூரின் கடைசி பாலிவுட் திரைப்படம் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான, 102 நாட் அவுட் என்ற திரைப்படமாகும். ரிஷி கபூர் கடைசியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியான தி பாடி என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். ரிஷி கபூருக்கு மனைவி மற்றும் மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா கபூர் சாஹ்னி ஆகியோர் உள்ளனர்.
 
image
 
இந்நிலையில், நடிகர் ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் சாஹ்னிக்கு அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சாலைவழியே பயணிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே வாகனங்கள் சாலையில் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இந்தத் தடையால் ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் அவரது மகள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ரித்திமா, தொழிலதிபரை மணந்து கொண்டு தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். ஆகவே விமானம் மூலம் பயணிக்க அவர் மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கோரியதாகத் தெரிகிறது. 
 
image
 
அவருக்கு மட்டும் விமானத்தில் செல்ல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் சாலைவழியே தனது உறவினர்கள் 5 பேருடன் மும்பைக்கு காரில் பயணிக்க அனுமதிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி என்டிடிவிக்கு பேசியபோது, “இரவில் தாமதமாகத்தான் அவர்  அனுமதி கோரினார்”என்று தெரிவித்துள்ளார். இது மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் டெல்லி காவல்துறை எப்போதும் அனுமதி அளித்துள்ளது என்றும் அவர் இப்போது சாலை வழியாகப் பயணிப்பார் என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். மொத்தம் 1,400 கி.மீ பயணத்திற்குப் பிறகு ரிஷி கபூரின் மகள் மும்பையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சுமார் 18 மணி நேரம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.