திருச்சியில் கணவர் இதய நோயால் படுக்கையில் உள்ள நிலையில் சாப்பாட்டிற்கு வழியின்றி 2 மகள்களுடன் தாய் தவித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் இந்திரா காலனியில் வசிக்கும் முருகன் (45) இருசக்கர வாகனத்தில் டீ விற்பனை செய்து வருகிறார். இவருக்கு வனஜா என்ற மனைவியும், 15 வயதிற்குட்பட்ட இரண்டு மகள்களும் உள்ளனர். முருகனுக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேல் இருதய வால்வு கோளாறும், தற்போது கிட்னி கோளாறும், கண் பார்வை குறைபாடும் உள்ளன. இந்த கடுமையான நோய்களுடனும் குடும்பத்திற்காக முருகன் வாரச் சந்தையில் டீ, சூப், உளுந்தங்கஞ்சி போன்றவைகளை கேன்களில் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

தனக்கு இருக்கும் நோய்கள் தொடர்பாக சென்னை, மதுரை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் எங்கும் பலனில்லை. கடந்த 3 வருடங்களாக முருகன் வீட்டிலேயே படுக்கையில் இருப்பதால், குடும்ப வறுமையை நினைத்து அவரது மனைவி வனஜா டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். சிறுக, சிறுக சேமித்த பணத்தை கொண்டு முருகனுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

image

ஆனால் முருகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், சாப்பிடுவதற்கே பணமின்றி முருகனின் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர். இந்த சூழலிலும் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முருகனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்ற நோயாளிகளை பார்க்கவில்லை என்றும், கொரோனா நோயாளிக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி மருந்து கூட வாங்காமல் முருகனை அழைத்துக்கொண்டு அவரது குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர்.

image

இந்நிலையில், முருகனின் உடல்நிலை மேலும் மோசமாகிக் கொண்டே வருவகிறது. தன்னால் தனது குடும்பம் படும் துயரத்தை கண்ட முருகன், தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு கூறி தனது மனைவியிடம் அழுதுள்ளார். இதனால் மனைவி மற்றும் இரு மகள்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதி : உள்துறை அமைச்சகம்

தனது குடும்பத்தின் நிலை குறித்து பேசிய வனஜா, “எங்களால் முடிந்தளவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டோம். தற்போது சிகிச்சைக்கு கையில் பணமும் இல்லை, சிகிச்சையும் அளிக்க முடியவில்லை. வருமானமின்றி மிகுந்த சிரமத்தில் உள்ளோம். என் கணவருக்கு தமிழக அரசு மருத்துவ உதவி செய்து காப்பாற்ற வேண்டும். என் மகள்களின் எதிர்காலத்திற்க்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.