“பெண்கள் இன்னும் கிச்சனில்தான் இருக்கவேண்டுமா” என்கிற மாளவிகாவின் நியாயமான எதிர்வினைக்கு நியாயம் கிடைத்திருக்கிறது. வீட்டுக்குள் விஜய் பாடல் ரசித்தபடியும், அனிருத் பியானோ வாசித்தபடியும், விஜய் சேதுபதி விளையாடியபடியும் இருக்க மாளவிகா மட்டும் கிச்சனில் சமைப்பதுபோல `மாஸ்டர்’ டீமைப் பற்றி ஸ்பெஷல் கார்ட்டூன் வரைந்திருந்தார்கள் விஜய் ரசிகர்கள். இதில் கடுப்பான மாளவிகா `கற்பனை சூழலில் கூட பெண்கள் சமையல்தான் செய்துகொண்டிருக்க வேண்டுமா, இந்தப் பாலின பாகுபாடு எப்போது மாறுமோ?’ என ட்வீட் செய்திருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அதை அவர் டெலிட் செய்துவிட, அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன்ஷாட் சோஷியல் மீடியாவில் வைரல் ஆக, பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மாளவிகாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அந்தப் படத்தை அவரது ரசிகர்கள், மாளவிகா புத்தகம் படிப்பதுபோல பலவகையில் எடிட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இதைக் கோட் செய்து ட்வீட் செய்த மாளவிகா, `இந்த வெர்ஷன் மிகவும் பிடித்துள்ளது. படத்தில் இருப்பதுபோல எனக்கு படிப்பது மிகவும் பிடிக்கும்’ என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘பாகுபலி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களிடையேயும் மாஸான வரவேற்பைப் பெற்றது. `பாகுபலி’யின் இரண்டு பார்ட்டுகளுமே செம ஹிட். இந்தச் சூழலில், இன்றோடு `பாகுபலி-2′ வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் படம் குறித்த நினைவுகளை அந்தப் படத்தின் நட்சத்திரங்களான பிரபாஸூம், ராணாவும் தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்டாவில் பிரபாஸ், `என் வாழ்க்கையில் மறக்க முடியாத பெரிய படம் இது. இதன் வெற்றியை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கும் இயக்குநர் ராஜமெளலிக்கும் நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.

`பொன்மகள் வந்தாள்’ மற்றும் மேலும் சில படங்கள் இந்த லாக் டெளன் சூழலால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறது. நிலைமை சரியான பிறகும் தியேட்டர்கள் திறக்க இன்னும் காலம் ஆகும் என்ற நிலையில், OTT தளத்தில் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் தொடரும் நிலையில், ஆதரவும் ஒரு பக்கம் பெருகி வருகிறது. அந்தவகையில் தமிழ்த்திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சிறிய படங்களின் நேரடி OTT ரிலீஸுக்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “முன்பு டிவி வந்தபோது சினிமா அவ்வளவுதான் என்றார்கள். கேசட் வந்தபோதும் சினிமா இனி இல்லை என்றார்கள். ஆனால், நிஜம் அதுவல்ல. காலமாற்றத்திற்கேற்ப மாற வேண்டும். இதனால், இனிவரும் காலங்களில் தியேட்டரில் வெளியிடப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் இப்போது முடிவு செய்துள்ள நேரடி OTT ரிலீஸால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது” எனக்கூறியுள்ளார்.

சமீபத்தில் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா, “கோயில்களை சுத்தமாகப் பராமரிப்பது போல, உண்டியலில் காசு போடுவதுபோல பராமரிப்பின்றி இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உதவுங்கள்” எனப் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகள் வந்த நிலையில், ஜோதிகாவின் பேச்சு இந்துக்களை புண்படுத்தும்படி இருப்பதாகக் கூறி ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தப் பிரச்னை குறித்து நடிகை ஜோதிகா தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் வராமலிருந்தது.

இந்த நிலையில், “ஜோதிகாவின் பேச்சை சரியாகப் புரிந்து கொண்டு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். `மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்’ என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் #அன்பைவிதைப்போம் என்ற ஹேஷ்டேக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.