கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இதன் தீவிரத்தால் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நான்கு நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வேல்முருகன்

அம்மா உணவகங்களில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பால் உணவுக்காக தவித்து வரும் பல மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடற்றோர், ஆதரவற்றவர்கள் உள்ளிட்டவர்களை சமூக தொண்டு நிறுவனங்கள் மீட்டு பராமரித்து உணவளித்து வருகின்றனர்.

இதேபோல தூத்துக்குடியில் `மனிதம் விதைப்போம், `ஆர்.சோயா அறக்கட்டளை’, `ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை’ ஆகிய மூன்று சமூக அமைப்புகளும் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 60 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு மாநகராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு அளித்து பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். இவர்களில் 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முடிவெட்டி, சேவிங் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வாட்ஸ்அப்களில் பரவியது.

வேல்முருகன்

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அவரின் மகன், உறவினர்கள் மாநகராட்சி மண்டபத்துக்கு நேரில் வந்து பார்த்து உறுதி செய்தனர். 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன் தந்தை வேல்முருகன்தான் என அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர் அவரின் மகன்கள். இதுகுறித்து வேல்முருகனின் உறவினர்களிடம் பேசினோம், “தூத்துக்குடியில் இரண்டாம் கேட் பகுதியிலதான் வேல்முருகனின் வீடு இருக்கு. இவர் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த 1997-ம் ஆண்டு அவரின் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மனைவி இறந்த சோகத்தில் சில மாதங்களில் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி கால் போன போக்கில் போய் விடுவார். பிறகு, தெரிந்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இப்படியே நடந்து வந்த நிலையில், ஒருநாள் காலையில் வீட்டை விட்டுப் போனவர் பல மாதமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாதங்கள் ஆண்டுகளையும் கடந்தது. இந்த நிலையில்தான், மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு முடிவெட்டி, சேவிங் செய்த புகைப்படம் இன்று வாட்ஸ்அப்பில் பரவியது. அந்தப் படத்தை உற்றுப் பார்த்தபோது காணாமல் போன வேல்முருகன் போலவே தெரிந்தது.

மகன், பேரக் குழந்தைகளுடன் வேல்முருகன்

நேரில் வந்து பார்த்தோம். வேல்முருகனை அடையாளம் கண்டோம். ஆனால், அவருக்குத்தான் எங்களை அடையாளம் தெரியவில்லை. வேல்முருகனின் மூத்தமகன் ராமச்சந்திரன் பழக்கடை நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் திருமணம் செய்துகொள்ளாமல் கோயிலில் சேவை செய்து வருகிறார். வேல்முருகன் விரைவில் குணமடைந்து மீண்டும் எங்களுடன் சேர்ந்து வசிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

இதுகுறித்து சமூகசேவை அமைப்பினரிடம் பேசினோம், “மனநிலை பாதிக்கப்பட்ட வேல்முருகனின் உறவினர்கள் மண்டபத்துக்கு நேரில் வந்து பார்த்து அடையாளம் கண்டு உருகியதைப் பார்த்து நெகிழ்தோம். தந்தையை எங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார்கள். ஆனால், அவர் மனநிலை பாதிப்பில் இருந்து முழுமையாக குணமாகாத நிலையில் அனுப்பி வைக்க இயலாது.

வேல் முருகன்

சிகிச்சைக்குப் பிறகு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளோம். வேல்முருகன் தூத்துக்குடி பகுதியிலேயே சுற்றி வந்த போதிலும் தாடி, ஜடை முடி, கந்தல் ஆடைகளுடன் காணப்பட்டதால் அவரை அடையாளம் காண முடியாமல் போனது. எங்களது சேவையால் 23 ஆண்டுக்குப் பிறகு ஒருவர் குடும்பத்தினருடன் இணைய இருக்கிறார் என நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.