‘ஸ்கூட்டியோ பஸ்ஸோ ஏதோ ஒண்ண புடிச்சு ஒரு வழியா சிரமப்பட்டு வகுப்பறைக்கு போய், டீச்சர் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கறப்போ அருமையான தூக்கம் ஒண்ணு வரும் பாருங்கன்னு’ இருந்த நிலைமை மாறி எல்லா மாணவர்களுக்கும் கொரோனா லாக் டௌன்ல ஆன்லைன்லதான் கிளாசஸ் நடந்துகிட்டு இருக்கு. புதிய அனுபவங்கிறதால, இந்த ஆன்லைன் கிளாசஸ் எப்படி இருக்கப்போகுதுங்குற ஆர்வமும் எதிர்பார்ப்புகளும் ஆரம்பத்துல ரொம்பவே இருந்தாலும் அதுல ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. நாம எதிர்பார்த்தது ஒண்ணா இருக்கும், அங்க நமக்கு கிடைக்கிறது ஒண்ணா இருக்கும். அப்படி என்ன எதிர்பார்த்தோம்… என்ன நடந்தது..?

லாகிங் இன்:

Expectation: பஸ் புடிச்சு ட்ராஃபிக்ல வந்ததுனாலதான் லேட்னு டெய்லி சொல்லுவாங்க. இனிமேல் இந்த பிரச்னையே இல்ல. ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாம லாக் இன் செஞ்சு, பாடமா இருந்தாலும் சரி ஸ்டாஃப் மீட்டிங்கா இருந்தாலும் சரி கரெக்ட்டா ஆரம்பிச்சிடலாம்ன்னு கனவோட லாக் இன் பண்ணுவாங்க டீச்சர்ஸ்.

Reality: நிதர்சனம் என்னன்னா, குறைஞ்சது 5 நிமிஷமாவது லேட் ஆகிடும் எல்லாரும் லாக் இன் பண்ணி மீட்டிங்கை ஆரம்பிக்க. மொத்த மீட்டிங்கையும் நிர்வகிக்கிற ஆசிரியருக்கு டெக்னாலஜி ஃபோபியா இருந்து தவறுதலான லிங்கை அனுப்பிட்டாருன்னா ஷெட்யூல் பண்ணின கிளாஸ் மொத்தமா டமாலு டுமீலுதான். இதுல நெட்வொர்க்கும் தன் பங்குக்கு நம்ம ஆன்லைன் கிளாஸ்ல பேஸ்கட் பால் ஆடினா, “ஹலோ, கேக்குதானு” கேக்குறதுலயே பாதி கிளாஸ் முடிஞ்சிடும். டெக்னாலஜியில் சில ஆசிரியர்கள் வீக்கா இருக்கறதால மாணவர்களுக்கு டபுள் ஃபன்தான்.

மீட்டிங் நேரம்:

Expectation : வழக்கமா, மீட்டிங் ஒரு மணிநேரத்துக்கு சரியா முடிக்கணும்னு பிளான் பண்ணினாகூட கைய மீறி மணிக்கணக்கா போயிடும். ஆன்லைன் மீட்டிங்தானே, ஒரு மணிநேரம்ன்னா சரியா ஒரு மணிநேரத்துல கண்டிப்பா முடிச்சிடலாம்னு நினைச்சுத்தான் போய் ஆன் பண்ணுவோம்.

Reality: முகம் பார்த்து பேசி நடக்குற மீட்டிங்குகளைவிட கொடுமையானது இந்த ஆன்லைன் மீட்டிங்குகள். எல்லாரும் நினைச்ச உடனேயே பேசிட முடியாது. ஒவ்வொருத்தராதான் பேச முடியும். அதையும் மீறி எல்லாரும் ஒரே நேரத்துல பேச ஆரம்பிச்சா, ரேடியோல ஒளிபரப்பாகிற க்ராஸ் டாக் நிகழ்ச்சியை நேர்லையே கேட்டுக் களிக்கலாம். இதுல ஆடியோ, வீடியோ ரெண்டையும் ஆஃப் பண்ணிட்டு சொந்த அலுவல்களைப் பார்க்கிற குரூப் தனி.

Online classes

டெக்னிக்கல் பிரச்னைகள் :

Expectation: மொபைல் டேட்டா பிரச்னையே இல்ல, வைஃபை இருக்க கவலை என்னன்னு அதிரடியா லாக் இன் பண்ணி கிளாஸை முடிச்சிட வேண்டியதுதான்னு நினைச்சிருப்போம்.

Reality: வீட்ல எல்லாருக்குமே வொர்க் ஃப்ரம் ஹோம்ன்னு மண்டையில உரைக்குற மாதிரி அப்போதான் நெட்வொர்க் கட் ஆகும். ஸ்க்ரீன் ஸ்ட்ரக் ஆகி மத்தவங்க பேசற சத்தம் விட்டுவிட்டு பிஞ்சுபோன பியானோ இசை மாதிரி கேக்கறது எரிச்சலோட உச்சத்துக்கே கொண்டுபோயிடும். லாக் அவுட் பண்ணி மறுபடியும் லாக் இன் பண்றதுகுள்ள போதும் போதுங்ம்கிற நிலைமைதான். சரியா மத்தவங்களுக்கு கேக்காததைப் பயன்படுத்தி ஏதாவது திட்டணும்னாகூட திட்டிக்கலாங்கிற பயன் இவ்வளவு ரணகளத்துலயும் இருக்கத்தான் செய்யுது.

Also Read: `வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு Remote Assistance சேவை.. அதுவும் இலவசமாக..!’ -HP நிறுவனம்

கவனச்சிதறல்கள்:

Expectation: கிளாஸ்லதான் பக்கத்துல ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க ஏதாவது பேசிட்டே இருக்கத் தோணும். கடைசி பெஞ்ச்ல ஓப்பன் பண்ற டிபன் பாக்ஸ் வாசனை ஆளைத் தூக்கும். இப்படி எந்தக் கவனச்சிதறல்களும் இல்லாம் படிக்கிறோம், பாஸ் பண்றோம் மோட்ல கம்ப்யூட்டர் முன்னாடி போய் உட்காருவோம்.

Reality: அப்போதான் போர் அடிக்குதுன்னு வேண்டப்பட்டவங்க அனுப்புற மெசேஜஸ் பாப் அப் ஆகி குறுக்கால வரும். கடமைதான் முக்கியம்னு அதையெல்லாம் பொருட்படுத்தாம கஷ்டப்பட்டு மனசை மாத்திக்கிட்டு லாக் இன் பண்ணுவோம். நீங்க இந்த அப்டேட்டை எல்லாம் மிஸ் பண்ணிட்டீங்கனு, ஃபேஸ்புக்ல இருந்து யூடியூப் வரைக்கும் நோட்டிபிகேஷன் அனுப்பி நம்மை கடுப்பேத்துவாங்க. இதையெல்லாம் தாண்டியும் நம்ம கிளாஸ் அட்டெண்ட் பண்ணா, அதை நம்ம வாழ்நாள் சாதனை லிஸ்ட்ல கண்டிப்பா சேர்த்துக்கலாம்.

ஆன்லைன் கிளாஸஸ்

ஸ்டார்ட் மியூசிக்:

Expectation: வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டு `நானும் படிக்கப்போறேன்னு’ பில்ட்-அப் குடுத்துட்டு போய் ஆரம்பிப்போம். ஆனா, அமைதியா நம்மள படிக்க விட்ருவாங்கனு நினைக்கிறீங்களா, அங்கதான் இருக்கு ட்விஸ்ட்.

Reality: கிரைண்டர் மிக்சி ஓடுற சத்தத்தைப் பத்தி சொல்ல மறந்துட்டோமாங்குற மாதிரி அப்போதான் வீட்டுல சரர்ர் புரர்ர்ன்னு போட்டு தெறிக்க விடுவாங்க… பக்கத்து வீட்டுல மோட்டார் ஓடுற சத்ததுல இருந்து அடுத்த தெருவுல நாய் கொரைக்குற சத்தம் வரைக்கும் வீடியோ கால்ல அமோகமா கேக்கும். இதுல எங்க க்ளாஸை ஸ்மூத்தா முடிக்கிறது. நாம படிச்சு புரிஞ்சு பாஸ் பண்றது..! 🙁

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.