கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கைத் தளர்த்தலாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம் என்று தமிழக அரசுக்கு அந்தக் குழு பரிந்துரைத்தது.

வாகன சோதனை

ஆனாலும், சிவகாசியில் தொழிற்சாலைகளைத் திறக்கலாம் என்ற அறிவிப்பு, சார் பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு போன்ற நடவடிக்கைகளில் பெரும் குளறுபடிகள். ஊரடங்கைத் தளர்த்துவதா, வேண்டாமா என்பது பற்றி ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குழு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, விருதுநகர் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளைத் திறக்கலாம் என்ற முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. அப்போது, நோய்த்தொற்று ஆபத்து இருக்கிறது என்ற அச்சத்துக்கும் மத்தியில், வேலையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். தொழிற்சாலைகளைத் திறப்பதற்கு தொழிலதிபர்கள் தயாராயினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரான கண்ணன், “மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களின்படி, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சிவகாசியில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், டைரிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யலாம். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் 50 சதவிகிதத் தொழிலாளர்களுடன் செயல்படலாம். ராஜபாளையம் அகே சத்திரப்பட்டியில் மருந்துத்துணி தயாரிப்பில் 100 சதவிகிதம் உற்பத்திக்குத் தேவையான பணியாளர்களை வைத்து வேலை செய்யலாம்” என்று அறிவித்தார்.

பட்டாசு உற்பத்தி

கொரோனா தொற்று பற்றிய அச்சம் இருந்தாலும்கூட, அடுத்த வேலை உணவுக்கு உத்தரவாதம் கிடைக்குமே என்ற ஆவலில் வேலைக்குச் செல்ல தொழிலாளர்கள் தயாராயினர். ஆனால், மாவட்ட நிர்வாகம் தன் முடிவிலிருந்து பின்வாங்கியது. 20-ம் தேதி தொழிற்சாலைகளைத் திறப்பதற்கு பலர் தயாரானபோது, திறக்கக்கூடாது என்று மறைமுக உத்தரவு மாவட்ட நிர்வாகத்திடமிருந்து சென்றது. சிறிய அளவிலான பட்டாசுத் தொழிற்சாலைகள் ஒன்றிரண்டு திறக்கப்பட்டபோது, அவற்றை அதிகாரிகள் மூடச் சொன்னார்கள். மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியான முடிவு, விருதுநகர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் ஒரு பிரச்னை. அங்கு, ஊரடங்கைக் கடுமையாக்குவதற்கு சில நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதற்காக நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் என மூன்று நிலைகளில் மூன்று விதமான அனுமதி அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அந்த அட்டை வைத்திருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வரலாம். எல்லா வீடுகளுக்கும் இந்த அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அறிவித்தார்.

வாகன சோதனை

பச்சை நிற அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழன், நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி, சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வரலாம். இது ஒரு நல்ல ஏற்பாடு. இப்படித் திட்டமிட்டவர்கள் 15 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்த பிறகு, குழப்பங்கள் வந்தன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது என்றால் நாங்கள் என்ன செய்வது என்று 60 வயதைக் கடந்தவர்கள் குமுற ஆரம்பித்தனர். ஒரு வயதான தம்பதி. கணவன், மனைவி இருவருமே 60 வயதைக் கடந்தவர்கள். ஆதரவுக்கு வேறு யாரும் இல்லை. தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை வாங்குவதற்கு இவர்களில் ஒருவர்தான் வெளியே போக வேண்டும். ஆனால், வயதைக் காரணம் காட்டி எங்கள் இருவருக்குமே அனுமதி அட்டை வழங்கவில்லையென்றால், என்ன செய்வது என்று ஆத்திரப்பட்டார்கள். இதுபோல பலரும் பிரச்னையைக் கிளப்பினார்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலாகப் பத்திரப்பதிவு அலுவலகங்களைத் திறப்பது என்ற முடிவுதான் குளறுபடிகளின் உச்சம். மே 3-ம் தேதிவரை ஊரடங்கு இருக்கும் நிலையில், ஏப்ரல் 20-ம் தேதி முதல் பத்திரப்பதிவு அலுவலகங்களைத் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் 578 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு இதன் மூலம் வருவாய் கிடைக்கும். 575 சார் பதிவாளர்கள், 2,000 ஊழியர்கள், ஆயிரக்கணக்கான பத்திர எழுத்தர்கள் என ஏராளமானோர் பணியாற்றும் துறை இது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்றாலும், சொத்து விற்பவர், சொத்து வாங்குபவர், சாட்சிகள் என ஒரு பதிவுக்கே பலர் வர வேண்டியிருக்கும், கைரேகை வைப்பதில் இருக்கக்கூடிய ஆபத்து எனப் பலவற்றையும் நினைத்து பத்திரப்பதிவுத்துறையினர் அச்சமடைந்தனர்.

சார் பதிவு அலுவலகம்

மேலும், பொதுப்போக்குவரத்து செயல்படாததால் எப்படி எங்களால் அலுவலகங்களுக்கு வர முடியும் என்று பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். பணியாற்றும் அலுவலகம் ஒரு மாவட்டம் வீடு இருப்பது வேறு மாவட்டம் எனப் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த வாகனங்களில் வந்தாலும், போலீஸ் கெடுபிடிகளைத் தாண்டி எப்படி அலுவலகம் வர முடியும் என்று கேள்வி எழுப்பினர். ஆனாலும், பத்திரப்பதிவு அலுவலகங்களைத் திறப்பது என்ற முடிவில் அரசு உறுதியாக இருந்தது. 20-ம் தேதி தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. சார் பதிவாளர்களும் ஊழியர்களும் பீதியுடன்தான் அலுவலகம் வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு சம்பவம். முகத்தை மூடிக்கொண்டு வந்த ஒரு நபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை அதிகாரிகள் விசாரித்தபோது, `நான் வீட்டு க்வாரன்டீனில் இருந்தேன்’ என்று சொல்லி ஒரு அரசு முத்திரை பதித்த ஒரு காகிதத்தைக் காண்பித்துள்ளார். அதைக் கண்டு அதிகாரிகள் அலறிவிட்டனர். உடனே, அந்த நபர் அங்கிருந்து வேக வேகமாக வெளியேறியிருக்கிறார். இந்தத் தகவல் மற்ற சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் பரவியது. எல்லோரும் பீதியுடன்தான் இப்போது அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள்.

சார் பதிவு அலுவலகம்

இதற்கிடையே, சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணிவரையிலும், திருப்பூர், சேலம் மாநகராட்சிகளில் நாளை முதல் 28.4.2020 செவ்வாய் இரவு 9 மணிவரையிலும் முழுமையான ஊரடங்கை அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிலாவது தெளிவான திட்டமிடலோடு மக்களைக் குளறுபடிக்குள்ளாக்க மாட்டார்கள் என நம்புவோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.