கேரள மாநிலத்தில், கொரினா நோயாளிகள் படிப்படியாகக் குணமடைந்துவருகின்றனர். பத்தணம்திட்டா மாவட்டம் கோளங்கேசி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஷெர்லி ஆபிரஹாம், நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். கேரளாவில் கொரோனா பாதித்து அதிக நாள்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் ஷெர்லி ஆபிரஹாம். 62 வயதான ஷெர்லி ஆபிரஹாம் 48 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்திருக்கிறார். கோளஞ்சேரி மாவட்ட மருத்துவமனையில் ஷெர்லி ஆபிரகாமிற்கு சிறந்த சிகிச்சை அளித்ததற்காக டாக்டர்கள், நர்ஸுகள் மற்றும் பணியாளர்களுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்கள் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய ஷெர்லி ஆபிரகாமிற்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

ஷெர்லி ஆபிரஹாமை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில், பத்தணம்திட்டா மாவட்ட கலெக்டர் பி.பி.நூஹ் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து கோளஞ்சேரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், “கேரளத்தில் இரண்டாம் கட்டமாகப் பரவிய கொரோனாவில் ஷெர்லி ஆபிரஹாமிற்கு தொற்று ஏற்பட்டது. இத்தாலியிலிருந்து திரும்பிய ராணி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவினராக இருந்த ஷெர்லி ஆபிரஹாமிற்கும் அவரது மகளுக்கும் கொரோனா பரவியது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஷெர்லி ஆபிரஹாம்

மார்ச் 8-ம் தேதி, ஷெர்லி ஆபிரஹாம் கோளஞ்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 10-ம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முதலில் கொரோனா அறிகுறிகள் இருந்தபோதும் ஷெர்லி ஆபிரஹாம் ஆரோக்கியமாகவே இருந்தார். இதற்கிடையில், அவரது ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்ததால் சிகிச்சை அளிப்பது கடினமாகவே இருந்தது. அவரது மாதிரிகளை 20 முறை பரிசோதனை நடத்தியபோதும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஏப்ரல் 2-ம் தேதி நடத்திய பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. அதன் பிறகு நடத்திய பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. பின்னர் ஏப்ரல் 20-ம் தேதியும், 22-ம் தேதியும் நடத்திய சோதனைகள் நெகட்டிவ் என வந்தது. இதைத் தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இனி 14 நாள்கள் அவர் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்றனர்.

நீண்ட ஆஸ்பத்திரி வாசத்துக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியே படிகளில் இறங்கிவந்த ஷெர்லி ஆபிரஹாமின் கண்கள் குளமாயின. அப்போது ஷெர்லி ஆபிரஹாம் கூறுகையில், “எனது மகிழ்ச்சியை வாயால் சொல்ல வார்த்தைகள் இல்லை. டாக்டர்களும் நர்சுகளும், மற்ற பணியாளர்களும் எனது குழந்தைகள். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பிரதிபா-வை மகளே என்றுதான் நான் அழைப்பேன். நான் இங்கிருந்த நாள்களில் வீட்டில் இருந்ததைப்போன்று உணர்ந்தேன். அனைத்து மதத்தினரும் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷெர்லி ஆபிரஹாம்

என் கணவரையும் பிள்ளைகளையும் பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டன. லாக்டெளன் காரணமாக, மகன் ரோஷன் டெல்லியில் உள்ளார். என் மகள் கிறிஸ்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். ராணியில் உள்ள உறவினரும் நாங்களும் ஒரே வீட்டினர்போல வசித்துவந்தோம். அதன்மூலம் எனக்கு கொரோனா தொற்றியது. வேறு யாருக்கும் கொரோனா பரவிவிடக்கூடாது என்பதற்காக, எங்களுக்கு அறிகுறி தெரிந்ததும் நாங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தோம். இனி யாருக்கும் இந்த நோய் வரக்கூடாது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.