இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,000-த்தை தாண்டிவிட்டது. கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும்விதமாக இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தமிழகத்தில் சில மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-ம் தேதியலிருந்து சில நாள்களுக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,430 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் 2,624 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

குஜராத்தைப் பொறுத்தவரையில் அகமதாபாத்தில்தான் கொரோனா நோய்த் தொற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அகமதாபாத்தில் மட்டும் 1,298 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ரெட் ஸ்பாட் பகுதிகளில் அனைத்து இடங்களில் போலீஸார் பேரிகாட்களைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். “இருந்தும் என்ன பயன் மக்கள் வெளியில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை” எனப் புலம்புகின்றனர் பெஹ்ராம்புரா பகுதி மக்கள்.

Also Read: `உறவுகள் மீதான ஏக்கம்.. வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள்!’ -உ.பி அரசின் அடுத்த முயற்சி

ஏழைகளும் நடுத்தர மக்களும் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிதான் பெஹ்ராம்புரா (Behrampura). அட்டைப்பெட்டிகள் போன்று அடுக்கடுக்காக அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், குறுகலான நெரிசல் மிகுந்த வீதிகள். தனிமனித இடைவெளி எல்லாம் இங்கு காற்றில் பறப்பதாக வேதனை கொள்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ஊரடங்கு

பெஹ்ராம்புரா பகுதியினர் பேசுகையில், “இந்தப் பகுதியில் மக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கோ நகராட்சி நிர்வாகத்துக்கோ தொடர்புகொண்டால் எந்தப் பதிலும் இல்லை. இந்தப் பகுதியில் எத்தனை நபர்கள் உணவின்றித் தவிக்கின்றனர் என யாருக்காவது தெரியுமா?

மருத்துவப் பரிசோதனைகள்கூட இந்தப் பகுதிகளில் முறையாகச் செய்யப்படவில்லை. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஒரு மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் வழங்கியுள்ளனர். குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு வசதிகள் இல்லை. எங்களுக்கு ஏதாவது பிரச்னை என உதவி எண்ணை அழைத்தால் வேறொரு எண்ணை வழங்கி அதற்கு அழையுங்கள் என்கிறார்கள். ஆனால், பிரச்னைகளுக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

பெஹ்ராம்புரா பகுதியைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண்ணின் பெற்றோர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். “ எங்கள் குடும்பத்தில் 10 நபர்கள் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யவில்லை” என்கிறார்.

ரேகா பேசுகையில், “மருத்துவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். என் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார்கள். எங்களுக்கு எந்தப் பரிசோதனையும் எடுக்கவில்லை. உணவுகள்கூட வழங்க ஏற்பாடு செய்யவில்லை. 8 வயதில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்தாம் எங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்” என்றார் வேதனையாக.

கோவிட் -19 கொரோனா

முகேஷ் என்ற இளைஞர் ஊரடங்கு நாளையொட்டி சமூகப்பணியாற்றி வருகிறார். ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்குத் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் உணவுகளை வழங்கி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாயாருக்கு சளி, இருமல் இருந்துள்ளது. இதையடுத்து அவரே தானாக முன்வந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். முகேஷின் தாயாரை மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தியுள்ளனர். அவருக்குக் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்ற தகவலைக் கூறவில்லை.

Also Read: கொரோனா போர்… நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள்!

இந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க யாரும் வருவதில்லை. மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வந்தார்கள். பாதி குடும்பங்களுக்கு மட்டுமே சோதனை செய்தனர். எங்களிடம் இப்போது போதுமான கருவிகள் இல்லை, நாளை வருகிறோம் எனக் கூறி திரும்பிச் சென்றார்கள், இதுவரை வரவில்லை. இதை யாரிடம் போய்க் கேட்பது என்றுகூட தெரியவில்லை. தனிமனித இடைவெளியைத் தாண்டி மக்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. அதை யாரும் இங்கே கேட்பதாக இல்லை. காவல்துறையினரையும், நகராட்சி அலுவலர்களையும் தொடர்பு கொள்கிறோம், யாரும் இங்கு வருவதாகவும் இல்லை” எனக் கவலையுடன் கூறுகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.