கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மனிதம் போற்றும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அதேநேரத்தில், மனிதம் மரித்துப்போனதோ என்று நினைக்கும் வகையிலான சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், போராட்டம் நடத்திய சிலர், ஆம்புலன்ஸையே அடித்து உடைத்தனர்.

ஆம்புலன்ஸ்

ஏற்கெனவே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்யவும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவங்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தின. இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தன்னுடைய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியில் அடக்கம் செய்துகொள்ளலாம் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

தற்போது, அதேபோன்ற ஒரு அறிவிப்பை ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஈஸ்வரன், “கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தேவை எனில், கோவைக்கு அருகே உள்ள என்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்கக்கூடாது. மிகவும் வருத்தமளிக்கிறது. மக்களிடம் அச்சம் போக வேண்டும்.

கொரோனா

மக்களுக்காக பணியாற்றி உயிர்நீத்த மருத்துவர்களுக்கு, உரிய மரியாதை கொடுத்து உடலை அடக்கம் செய்ய வேண்டும். அதுதான் மனிதநேயம். அப்படியில்லாமல், ஆம்புலன்ஸை எல்லாம் அடித்து நொறுக்குவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மக்களிடம் என்ன மாதிரியான புரிதல் இருக்கு என்று புரியவில்லை.

ரேஷன் கடையில் ரூ.1,000 வாங்க கூட்டத்தில் முண்டியிக்கும்போது இல்லாத முன்னெச்சரிக்கை, ஒருவர் உயிரிழந்தால் பின்னால் மட்டும் எப்படி வருகிறது. இது மனிதநேயமற்ற செயல் என்பதை மக்கள் உணர வேண்டும். அரசு இனியும், கொரோனாவைப் பற்றி பயப்படுத்திக் கொண்டேயிருக்காமல், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும். ஏனென்றால், ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதிப்பு முடிந்துவிடாது.

ம.தி.மு.க ஈஸ்வரன்

சமூகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் கொரோனா இருந்து கொண்டுதான் இருக்கும். கொரோனா பாதிப்பு எப்போது முழுமையாக விலகும் என்பது யாருக்குமே தெரியாது. எனவே, அதுவரை மக்களிடம் இதுகுறித்து முழுமையான விவரங்களை எடுத்துரைத்து, அதை எதிர்கொள்ளவேண்டிய மனநிலையை மக்களிடம் உருவாக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.