கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெல்வதற்கு, அந்த நோய்த் தொற்று பாதித்தோரை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைந்து கண்டறிந்து, ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை அளிப்பதுதான் முக்கியமான தீர்வு. இந்தப் பரிசோதனைகளுக்கு பணமும் நேரமும் அதிகம் செலவாகும் என்பதே மக்கள்தொகை அடர்த்தியான வளரும் நாடுகளில் பெரும் பின்னடைவாக இருக்கிறது.

இந்தச் சூழலில், குறைந்த செலவில் விரைந்து ஒரு துப்பறிவாளனால் கொரோனாவைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?

“என்னடா இது புது டிசைன் கதையா இருக்கே?” என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இந்தப் பின்னணியில் கதை கொஞ்சம், நிஜம் நிறைய கலந்திருக்கிறது.

தகவல் இதுதான்: `ஃபெலூடா’ என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரிசோதனைக் கருவி, சில நிமிடங்களிலேயே பரிசோதனை முடிவுகளை அளிக்கப்போகிறது.

வங்கமொழி பேசும் இரு விஞ்ஞானிகளான தேபோஜ்யோதி சக்கரவர்த்தி, சவுவிக் மைத்தி ஆகியோர் தலைமையிலான குழு ஒன்று, காகிதத்தை அடிப்படையாக வைத்து, ஸ்ட்ரிப் வகை பரிசோதனை சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளது. இலக்கியம் – திரைப்படங்கள் மீது ஆர்வமுள்ள இவர்கள், இந்த ஸ்ட்ரிப் டெஸ்ட்டுக்கு `ஃபெலூடா’ என்று பெயரிட்டுள்ளனர்.

யார் இந்த ஃபெலூடா?

உலகப் புகழ்பெற்ற வங்கத் திரைப்பட மேதையும் எழுத்தாளருமான சத்யஜித் ரே உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரம்தான், `ஃபெலூடா’. ஷெர்லாக் ஹோம்ஸ் தொடங்கி துப்பறியும் சாம்பு வரை மக்களின் மனம் கவரந்த துப்பறியும் கதாபாத்திரங்களில் ஃபெலூடாவும் ஒன்று.

குழந்தைப் பருவத்தில் இருந்தே துப்பறியும் கதைகள்மீது அதீத ஆர்வம்கொண்டவர், சத்யஜித் ரே. தன் பள்ளிக் காலத்திலேயே ஷெர்லாக் ஹோம்ஸை பிரித்துமேய்ந்தவர். அந்த இன்ஸ்பிரேஷனில், `ஃபெலூடா’ எனும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கி, பிற்காலத்தில் சுவாரஸ்யமான கதைகள் பல படைத்தார். வங்கமொழியின் சிறார் இலக்கியத்தில் பெரும் பங்காற்றிய ஃபெலூடா துப்பறியும் கதைகள், பின்னாளில் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும்கூட உருப்பெற்றன. உற்றுநோக்கும் திறன்மூலம் துப்பு துலக்குவதில் வல்லமை படைத்தவர்தான் இந்த துப்பறிவாளர் ஃபெலூடா. சிறுவர்களை மட்டுமின்றி, பெரியவர்களையும் அன்றும் என்றும் என்றும் வசீகரிக்கும் கதாபாத்திரம் இது.

கொரோனாவைக் கண்டுபிடிக்கும் ஃபெலூடா

சி.எஸ்.ஐ.ஆர். (CSIR) எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்று, ஐஜிஐபி (IGIB). டெல்லியில் உள்ள இந்த மரபணு மற்றும் தொகுப்புயிரியல் நிறுவனம் (Institute of Genomics and Integrative Biology), குறைந்த விலையில் விரைந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

விஞ்ஞானிகள் தேபோஜ்யோதி சக்கரவர்த்தி, சவுவிக் மைத்தி இருவரும் தலைமை வகித்த ஆய்வுக் குழு, கொரோனாவைக் கண்டுபிடிக்கும் ஃபெலூடா ஸ்ட்ரிப்பை கண்டுபிடிக்க இரண்டு மாத காலம் தினமும் 20 மணி நேரம் உழைத்திருக்கிறது.

“இந்த எளிய முறை பரிசோதனை, இந்தியாவில் கொரோனா டெஸ்டுக்கான பணச் செலவை வெகுவாகக் குறைக்கும்” என்று விஞ்ஞானிகள் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Institute of Genomics and Integrative Biology (IGIB), Delhi

தற்போது, கொரோனா பரிசோதனைக்குரிய ஆர்.டி – பி.சிஆர் டெஸ்ட்டுக்கு தனியார் பரிசோதனை மையங்களில் ரூ.4,500 செலவாகிறது. ஆனால், இவர்கள் கண்டுபிடித்துள்ள ஃபெலூடா டெஸ்ட்டுக்கு ரூ.500 மட்டுமே செலவாகுமாம்.

இதுகுறித்து சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் – ஜெனரல் சேகர் சி.மண்டே `தி பிரின்ட்’ செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில், “கருத்தரிப்பு பரிசோதனைக்கான டெஸ்ட் ஸ்ட்ரிப்புகள் போலவே ஃபெலூடாவும் மிகவும் எளிமையானது. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை சில நிமிடங்களிலேயே ஃபெலூடா கண்டுபிடித்துவிடும். இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள எவ்வித சிறப்புத் திறன்களோ, மருத்துவ சாதனங்களை இயக்கும் திறமையோ தேவையில்லை.

நிறம் மாறுதல் உத்தி மூலம் நோய்த் தொற்று கண்டறியப்படும் ஃபெலூடா ஸ்ட்ரிப் டெஸ்ட்டை மருத்துவப் பரிசோதனை மையங்களில் மிக எளிதில் செய்துவிட முடியும். இது, 100% துல்லியத் தன்மைக் கொண்டது. பொதுவாக, இதுபோன்ற பரிசோதனை உபகரணங்களைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் இரண்டு மூன்று வருடங்கள் எடுத்துக்கொள்வர். ஆனால், நம் விஞ்ஞானிகள் மிகக் குறைந்த காலத்துக்குள் கண்டுபிடித்து சாதனை செய்திருக்கிறார்கள்” என்றார் பெருமிதத்துடன்.

ஃபெலூடா டெஸ்ட் கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானி தேபோஜ்யோதி சக்கரவர்த்தி கூறும்போது, “நாங்கள் சிக்கிள் செல் அனீமியா (sickle cell anaemia) குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வுசெய்துவருகிறோம். சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியவுடனே, நாங்கள் அதுகுறித்து ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டோம். `ஃபெலூடா’-வுக்காக, கடந்த இரண்டு மாதங்களாக தினமும் 20 மணி நேரம் உழைத்திருக்கிறோம்” என்றார். சத்யஜித் ரே-யின் துப்பறியும் கதாபாத்திரத்தின் பெயரை இந்த டெஸ்டுக்கு வைத்தது குறித்து கேட்டதற்கு, “கொரோனா வைரைஸை சில நிமிடங்களிலேயே இந்த டெஸ்ட் கண்டுபிடித்துவிடும், ஃபெலூடா போலவே!” என்றார் அவர்.

Satyajit Ray’s Feluda

Also Read: 30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது..?! -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள்

தற்போது ஃபெலூடா டெஸ்ட்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முறையான நடைமுறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளுக்குப் பின் ஒப்புதல் கிடைத்தவுடன், வர்த்தக ரீதியில் தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிடும். ஆக, விரைவில் ஃபெலூடா துப்பறியத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

செய்தி ஆதாரம்: தி பிரின்ட்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.