சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய டாக்டர், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்திவந்தார். அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் நரம்பியல் நிபுணர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்டர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

Also Read: `வதந்திகளைப் பரப்பாதீங்க; அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்க!’- கலங்கும் டாக்டரின் மகன், மகள்#Corona

சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்

இதையடுத்து அவரின் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு டாக்டரின் சடலம் இரவு 11 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அதற்குமுன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. இதுகுறித்த தகவல் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தெரிந்தது. உடனடியாக அவர்கள் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள இடத்துக்கு வந்து, `இங்கு கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்யக் கூடாது’ என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதே சமயத்தில் மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள், டாக்டரின் சடலத்தை அங்கு அடக்கம் செய்ய சம்மதிக்கவில்லை. அதனால், அங்கிருந்து டாக்டரின் சடலத்தை அண்ணாநகர் வேலாங்காடு மயானத்துக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்

கல்லறைத் தோட்டத்திலிருந்து மீண்டும் டாக்டரின் சடலம், வேலங்காடு மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென ஆம்புலன்ஸை பொதுமக்களில் சிலர் அடித்து உடைத்தனர். அதனால் ஆம்புலன்ஸின் கண்ணாடிகள் உடைந்தன. ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர். பின்னர் டாக்டரின் சடலம் அதிகாலை ஒரு மணியளவில் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து டி.பி சத்திரம் அண்ணாநகர் போலீஸார் 188, 269, 145, 341, 294(b), 353, 506(I) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஜே.சி.பி ஆபரேட்டர் முத்தரசன் ஆகியோர் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “கொரோனா தொற்றால் இறந்த டாக்டர், பிரபலமான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். இவருக்குச் சொந்தமாக மருத்துவமனை உள்ளதால் அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம்தான் டாக்டரின் சடலம் கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. டாக்டரின் மகளும் மருத்துவராக உள்ளார். அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். டாக்டரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றனர்.

Also Read: `சென்னை அரசு டாக்டருக்கு கொரோனா; தனியார் மருத்துவமனையில் அனுமதி!’ – தனிமைப்படுத்தப்பட்ட 35 பேர்

சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்

இதுகுறித்து அரசு டாக்டர்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், “கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் மருத்துவர்களை அடக்கம் செய்யவிடாமல் தடுக்கின்ற கும்பலை அரசு இரும்புக்கரம் கொண்டு உடனடியாக அடக்க வேண்டும். கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரும்பாடுபட்டு தன்னுயிரை இழக்கின்ற மருத்துவர்களின் இறுதிச்சடங்கைத் தடுத்த கும்பலை உடனடியாக கைதுசெய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் இறக்க நேரிட்டால் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அரசு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கூறுகையில், “இரவு நேரத்தில் கல்லறைத் தோட்டத்திலிருந்து தூர்நாற்றம் வீசியது. மருந்து வாடையும் வந்ததால் வீட்டிலிருந்து வெளியில் வந்தோம். கல்லறைத் தோட்டத்தில் கொரோனாவால் இறந்த டாக்டர் ஒருவரை அடக்கம் செய்யும் தகவல் கிடைத்தது. கொரோனாவால் இறந்த ஒருவரை குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்தால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றுதான் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களிடம் பேசிய போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும், அடக்கம் செய்வதால் எந்தப்பிரச்னையும் ஏற்படாது என்று கூறினர். ஆனால், குழந்தைகளை வைத்திருக்கும் எங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் யார் பொறுப்பு” என்று கேள்வி எழுப்பினர்.

ஆம்புலன்ஸ் டிரைவர்

Also Read: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை 74 வயது மூதாட்டி குணமடைந்தது எப்படி?

ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவேற்காடு, அம்பத்தூர் ஆகிய பகுதியில் சடலத்தை தகனம் செய்ய எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வளசரவாக்கத்தில் ரகசியமாக டாக்டரின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அதேபோல, சென்னையில் தனியார் மருத்துவமனையை நடத்தி வந்த பிரபல டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்வதில் நடந்த வன்முறை சம்பவங்கள் மருத்துவத்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.