ஜப்பானில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. திடீரென ஜப்பானில் கொரோனா வேகமாக பரவ காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
உலகின் 3ஆவது மிகப்பெரிய பொருளாதார மையமாகத் திகழும் ஜப்பான், கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. பிப்ரவரி மாதமே ஜப்பானில் முதல் கொரோனா தொற்று உறுதியானது. அப்போதே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வல்லுனர்கள் எச்சரித்தனர். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எந்த கட்டுப்பாடுகளையும் பிரதமர் ஷின்சோ அபேவின் அரசு விதிக்கவில்லை. இந்நிலையில் தான் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனை உணர்ந்த அரசு ஜப்பான் முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாக்கை அறுத்துக்கொண்ட இளைஞர் !
எனினும் வைரஸ் பரவல் குறையவில்லை. இங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து அவர்களை பரிசோதிக்காமல் விட்டதே இந்த எண்ணிக்கை உயர காரணம் எனக் கூறப்படுகிறது. டோக்கியோவில் வைரஸ் தொற்று ஏற்பட்ட பலருக்கு எந்த வழியில் கொரோனா பரவியது என்பதை அறிய முடியாமல் ஜப்பான் அரசு திணறி வருகிறது. ஜப்பான் மருத்துவமனைகள், இப்படி ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக இல்லை என்பதும் மற்றொரு காரணம். இங்கு ஒரு லட்சம் குடிமக்களுக்கு 7 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன. ஜப்பானில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வரும் நிலையில், வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 13 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 22 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன.
இதனால் அவசர சிகிச்சைக்காக வருபவர்களை மருத்துவமனைகள் திருப்பி அனுப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறிகளுடன் கடுமையான மூச்சுத்திணறலோடு ஆம்புலன்ஸில் வந்த ஒருவரை 80 மருத்துவமனைகள் திருப்பி அனுப்பிய கொடூரம் டோக்கியோவில் அரங்கேறியுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்களை ஜப்பான் அரசு வழங்கவில்லை. மருத்துவர்களுக்கு ரெயின் கோட்டுகளை தந்து உதவுங்கள் என ஒஸாகா மாநில ஆளுநர் கோரிக்கை விடுத்ததே இதற்கு சான்று. பாதுகாப்பு உடைகள் இல்லாததால் ஜப்பானில் மருத்துவமனைகளே வைரஸ் பரவல் மையங்களாக மாறியுள்ளன. டோக்கியோவின் ஒரு மருத்துவமனையில் , மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட 87 பேருக்கு கொரோனா பரவியது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.
சாலையில் சீன மருத்துவரின் உருவப்படம் : மதுரையில் விழிப்புணர்வு
பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க ஏதுவாக, டோக்கியோ , ஒஸாகா உள்ளிட்ட நகரங்களில் ஹோட்டல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, குறைந்த பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தவிர மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால் ஜப்பானில் கொரோனாவால் 4 லட்சம் பேர் வரை இறக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்வது, தனி மனித இடைவெளியை தீவிரமாக கடைபிடிப்பது உள்ளிட்டவைகள் மூலமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM