கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் தளர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் இதுவரை 16,365 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மே 3ஆம் தேதி வரை பின்னர் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த நடவடிக்கையால் அடித்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அன்றாடம் வருமானம் ஈட்டி வாழும் சுமார் 40 கோடி பேர் ஊரடங்கால் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. தினந்தோறும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழில் செய்பவர்கள், தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. இதுதவிர சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டதால், அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
ஏனென்றால் இந்தப் பணிகளை செய்யும் மக்கள் அன்றாடம் கூலி வாங்கி தான் தங்கள் குடும்பத்திற்கான செலவினை செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் சிறு கடன்களை கட்ட வேண்டிய சூழல் உள்ளது. மருத்துவச் செலவு உட்பட அனைத்தும் அன்றாட கூலியில் தான். அப்படி இருக்கையில் இவர்களது பணி ஒரு மாதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டால் குடும்பமே நிலை குலைந்துவிடும். இதுமட்டுமின்றி இந்த ஊரடங்கு உத்தரவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை படுமோசமாக இருக்கிறது. அவர்கள் இருக்கவும் இடம் இல்லாமல், சொந்த ஊரும் திரும்ப முடியாமல் கொரோனா அச்சத்தில் தவிக்கின்றனர். இதற்கெல்லாம் மேல் இந்திய பொருளாதாரமே சரிந்து கிடக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. இது நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும் எனவும், .தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள் அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும் என்றும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வினியோகத்துறை மற்றும் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யவும், வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிட தொழில்கள் தொடரவும், தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலங்கள் செயல்படாலம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் யாருக்கும் பலன் என்பதை நாம் இங்கே பார்க்க வேண்டியுள்ளது. வேளான் மற்றும் தோட்ட தொழில்கள் செயல்பட்டாலும், அவர்கள் முழுநேர சந்தைப் படுத்தலில் ஈடுபடுவது கேள்விக்குறிதான். குறிப்பாக ஹாட்ஸ்பாட் பகுதிகள் வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. தோட்டத்தொழிலாளர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாக இருப்பதால், அவர்கள் அரசு பேருந்துகளில் தான் செல்வார்கள். பேருந்துகள் இல்லாமல் செல்வது கடினம். உரிமையாளர்கள் வாகனங்கள் வைத்து அழைத்துச்சென்றாலும், பலர் ஒரே வண்டியில் செல்ல முடியாது.
மீன்பிடித் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் அவர்களுக்கு பலன் இல்லை. கட்டடத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அவர்கள் தொழிலுக்கான பொருட்களை வாங்க வழியில்லை. பிளம்பெர் வேலை செய்பவர் எங்கே பொருட்களை வாங்குவார் ? எலக்ட்ரிசியன் வேலை செய்பவர் எங்கே பொருட்களை வாங்குவார் ? என்ற கேள்வி எழுகிறது. அலுவலங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம், ஆனால் சொந்தமாக வாகனம் இல்லாதவர்களுக்கு சிக்கல் ? இவ்வாறு பல நடைமுறை சிக்கல்களும் வரும் என சமூக கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். இதுதவிர கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படாத இன்னும் எத்தனையோ தொழில்கள் மற்றும் துறைகள் சார்ந்த தொழிலாளர்களின் நிலையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையும் கேள்விக்குறிதான்.
தமிழகத்தை பொறுத்தவரை புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் நாளை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னரே அறிவிப்பு வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி முடிவெடுக்க வல்லுநர் குழுவை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழு, முதற்கட்ட கூட்டத்தை நடத்தி முதலமைச்சரிடம் நாளை ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வல்லுநர் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே புதிய அறிவிப்புகள் இல்லாவிடில் தமிழகத்தில் இதே நிலை தான். இதற்கெல்லாம் மேலாக கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பெரும் பொறுப்பு அரசிடம் இருப்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். தளர்வுகளை அறிவித்துவிட்டு கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் அது நாட்டிற்கே பேராபத்து என்பதையும் உணர வேண்டியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பல் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த பெண் !
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM