கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மத்திய மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, இது சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், அவசர தேவைகளுக்கு மட்டுமல்லாமல், தேவையற்ற காரணங்களோடு பலர் சாலைகளில் சென்று வருகிறார்கள். குறிப்பாக தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்குவதற்குப் பெருமளவில் கூட்டம் கூடியது. இதனால் கொரோனா அபாயம் அதிகரிக்குமே எனப் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

தஞ்சை

இந்நிலையில்தான் கொரோனா தடுப்புக்கான தஞ்சை மண்டல சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.எஸ்.சண்முகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகத்தான், இன்று தஞ்சையில் நூறு சதவிகிதம் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூரின் அனைத்துச் சாலைகளும் ஆள் அரவம் இல்லாமல் நிசப்தமாகக் காட்சியளிக்கிறது. காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நகரின் முக்கியச் சாலைகள் மட்டுமல்லாமல், ஊரகப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைளுக்காக, தமிழ்நாட்டை 12 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கு, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியைச் சிறப்பு அதிகாரியாக நியமித்தது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டல சிறப்பு அதிகாரியாக எம்.எஸ்.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றதும், கொரோனா தடுப்பில் பல சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனைகள் நடத்தி, தேவையான உத்தரவுகள் பிறப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நகரின் முக்கிய இடங்கள், ஊரகப் பகுதிகள், புறவழிச்சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் இவரே நேரடியாகச் சென்று பார்வையிடுகிறார்.

எம்.எஸ். சண்முகம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்கிறார். வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சைக்கு வந்து செல்ல 13 வழிகள் இருந்த நிலையில், தற்போது 8 வழிகளில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதி. தஞ்சையின் எல்லைப் பகுதிகளிலேயே இந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. டிரைவர், கிளினர்களுக்கு, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் கூட, இவர்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், இங்கு தண்ணீர் டேங்க் மற்றும் சோப் வைக்கப்பட்டுள்ளன.

தங்களை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொண்ட பிறகே இவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நாள்களை விட, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இதை முழுமையாகக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் சிறப்பு அதிகாரி எம்.எஸ்.சண்முகம். நூறு சதவிகித ஊரடங்குக்கு உத்தரவிட்டார். மீன், இறைச்சிக் கடைகள் மட்டுமல்லாமல், மளிகை, காய்கறிக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என முன்கூட்டியே மூன்று நாள்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அவசர மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில்தான் ஆள் அரவம் இல்லாமல் இன்று தஞ்சை மாநகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஒரு சில வாகனங்களைப் பார்ப்பதே கூட மிகவும் அரிதாக உள்ளது. காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த பல நாள்களாக தஞ்சையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, இன்று தஞ்சை மக்கள் இதை முழுமையாக உணர்கிறார்கள். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இதுமாதிரியான நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என மக்கள் பாராட்டுகிறார்கள்.

Also Read: கொரோனா வைரஸை முதலில் அடையாளம் கண்ட ஷீ செங்லீ… சீனத்து சாகசப்பெண்ணின் சுவாரஸ்ய கதை!

இதுகுறித்து தஞ்சை மண்டல சிறப்பு அதிகாரி எம்.எஸ்.சண்முகத்திடம் பேசியபோது, “தஞ்சை மக்களுக்கு நான் மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்க என்னதான் உத்தரவுகள் பிறப்பித்தாலும் கூட, மக்கள் அதை முழுமையா ஏத்துக்கிட்டு, ஒத்துழைப்பு கொடுக்குறதுதான் பெரிய விஷயம். கொரோனா அபாயத்திலிருந்து மக்களை முழுமையாகப் பாதுகாக்க, இந்த நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கு. இதனால் உணவு கிடைக்காமல் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவங்களுக்கு உதவுறதுக்கும் நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்கோம். வெயில் காலத்துல தண்ணீர்ப் பந்தல் வைக்கிற மாதிரி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டகளிலும் பொது இடங்களில் தண்ணீர் டேங்கும், திரவ சோப்பும் வைக்கப் போறோம். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில போகக்கூடிய மக்கள், தங்களோட வீடுகளுக்குப் போகுறதுக்கு முன்னாடி, தங்களை சுத்தப்படுத்திக்கிட்டு வீட்டுக்குப் போக இது உதவியாக இருக்கும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் இதுக்கு ஏற்பாடு செய்யப்போறோம். இந்த மூன்று மாவட்டங்கலும் கொரோனா ஆய்வு முடிவுகளை விரைவாகப் பெறுதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மண்டலத்தில் கொரோனாவை மிக விரைவில் முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியும்னு உறுதியாக நம்புறேன்” என மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.