அவ்வப்போது புதிய வைரஸ்கள் தாக்குவதும் பின்னர் அதற்கான தீர்வை நாம் கண்டறிவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. திடீர், திடீரென புதிய வைரஸ்கள் (Viruses) எவ்வாறு தாக்குகின்றன என யோசித்ததுண்டா…?
இதற்கு முன்னர், கொரோனா போல, மனிதகுலம் எதிர்கண்ட கொடூரமான வைரஸ் தாக்குதல் எனில், அது 1918-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவிய ஸ்பானிஷ் ப்ளூதான். மற்ற விலங்கினங்களைப் போலவே வைரஸ்களுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு. அவை இரண்டு வகையில் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. ஒன்று காலப்போக்கில் வைரஸின் ஜீன்களில் மாற்றம் ஏற்பட்டு அதன் மூலம் வேறோர் வடிவத்தை அடைவது. மற்றொன்று, இரு வேறுபட்ட வைரஸ்கள் தங்கள் ஜீன்களை மாற்றிக்கொண்டு புதிய வைரஸாக உருவெடுப்பது. இதில் இரண்டாவது வகைதான் உலமெங்கும் வைரஸ் தாக்குதல்கள் திடீரென ஏற்படக் காரணமாக இருப்பது.

2009-ல், அமெரிக்கா மற்றும் ஆசியாவில் பரவிய பன்றிக்காய்ச்சலை நாம் மறக்கமுடியாது. எல்லா வைரஸ்களும் எல்லா உயிரினங்களையும் தாக்காது. பறவையைத் தாக்கும் தன்மையுடைய வைரஸும், மனிதர்களைத் தாக்கும் தன்மையுடைய வைரஸும் பன்றியின் உடலில் தங்கள் ஜீன்களை மாற்றிக்கொண்டு புது வகையான வைரஸாக உருவெடுத்தது. இது போல பரிணாம வளர்ச்சி அடையும் வைரஸ்களுக்கு, முன்னர் பயன்படுத்திய மருந்துகளையே மீண்டும் பயன்படுத்த முடியாது. பரிணாமத்தின்போது அதற்கேற்றவாறு அதன் உடற்கூறுகள் மாற்றி அமைந்திருக்கும்.
அதைப்போலவே தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவும் வவ்வால்களின் உடலில் ஜீன்களைப் பரிமாறிக்கொண்டு புதுவகையான வைரஸாக உருவெடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள், வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்கும் ஏதுவான சூழல் ஒன்று இருக்க வேண்டும். அப்படியான சூழல் வௌவால்களில் அமைந்ததினால் அவற்றால் ஜீன்களை மாற்றிக் கொள்ள முடிந்தது.
Also Read: கொரோனா தடுப்பில் மத்திய அரசு சொல்லும் `ஆக்ரா மாடல்’ – ஹாட்ஸ்பாட் நகரம், மாடல் நகரமானது எப்படி?
தற்போது இந்த வைரஸை நாம் கட்டுப்படுத்தினாலும், பின்னாளில் வேறோர் வடிவத்தில் இதே வைரஸ்கள் புதிதாக உருமாறக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் யாவும் பாலுட்டிகள் மற்றும் பறவைகளைத் தாக்கும் தன்மையுடையவை. தற்போது பரவிவரும் கோவிட்-19, வௌவ்வால்களில் ஒரு வகையான ஹார்ஸ்ஷு வௌவால்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதே வைரஸ் மற்ற பாலுட்டி வகை விலங்குகளையும் பாதிக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு வைரஸ் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள விலங்கினங்கள் எவையெல்லாம் இருக்கின்றன எனக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மனிதர்களின் உடலில் அமைந்துள்ள ACE2 ரிசப்டார்கள்தான் கொரோனா வைரஸ், நம் உடலில் இருக்கின்ற செல்களைத் தாக்குவதற்கான திறவுகோலாக இருக்கிறது.
இதேபோன்ற அமைப்பு மற்ற விலங்குகளிடமும் இருந்தால் அவற்றையும் கொரோனாவால் தாக்கமுடியும் என்பதால், அவ்வாறான விலங்குகளைப் பட்டியலிட்டு அவற்றின் செல்களில் சோதனைக்கூடத்தில் சோதனை முயற்சி செய்து பார்க்கப்படும். அதன் முடிவில் எந்த விலங்கினங்களின் செல்களைக் கொரோனா தாக்கும் எனக் கண்டறி்ந்து அதன் மூலம் அவை பெருகுமா, புதிதாக உருவாகுமா எனக் கண்டறியலாம். அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் ஃபெரட்டுகள் மற்றும் பூனைகளில் இந்த வைரஸ் பெருகும் வேகம் அதிகமாகவும் இருப்பதாகவும், நாய், கோழி, பன்றி மற்றும் வாத்து ஆகிய விலங்கு மற்றும் பறவையினங்களில் இதன் பெருக்கம் மெதுவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: `26 ஆக உயர்ந்த எண்ணிக்கை; களமிறங்கிய 4 மாவட்ட மருத்துவர்கள்!’ – கொரோனா தொற்றால் கலங்கும் கரூர்
இந்த ஆய்வுகள் குறித்து வைராலஜி நிபுணரான ரால்ப் பேரிக் (Ralph Baric) தெரிவிக்கையில், “இதுபோல முழுவதுமாகப் புதிய வைரஸ் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால் கண்டிப்பாகத் தோன்றும் எனக் கூற முடியாது. இதைப்பற்றி இப்போது நாம் சி்ந்திக்காவிட்டாலும், இப்படியொரு சாத்தியக் கூறு இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. மேலும் பூனைகளின் உடலில் அது பெருகும் வேகம் அதிகமாக இருக்கிறது என்பதால் எல்லா இடத்திலும் அது அப்படியே இருக்கும் என்றும் கூற முடியாது. இது பரிசோதனைக் கூடத்தில் செய்து பார்க்கும் முயற்சி. உலகில் சாதாரண நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப இவை மாறுபடும்…” எனக் கூறியுள்ளார்.