தமிழ் ஆண்டின் தொடக்கத்தின் முதல் மாதமான சித்திரையில் நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்வது விவசாயிகளின் பாரம்பர்ய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல மகசூலும் அறுவடையும் கிடைக்க வேண்டும் என சூரிய பகவானிடம் வேண்டுதல் இதன் நோக்கம். இந்த நாளில் ஏர் பூட்டுவதை “பொன்ஏர் பூட்டுதல்” என்பார்கள். தமிழ்வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் முதல் நாளன்றோ, வளர்பிறையிலோ மங்கலம் கருதி ஏர்க் கலப்பைக்கு மஞ்சள் பூசி, பூ கட்டி, வணங்கிட்டு விட்டு மாடுகளைத் தயார் செய்வார்கள்.

நவதானிய விதை தூவல்

ஊர்ப் பொது நிலத்தில், ஊரிலுள்ள விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் ”பொன்னேர் உழுதல்”. விவசாயத்தில் பெருமை, மிகுதி, மங்கலம் கருதி சொல்லப்பட்ட சொல்தான் ’’பொன்ஏர்’’. நிலத்தை மீண்டும் விவசாயத்திற்குத் தகுதிபடுத்துதலில் ஊர் விவசாயிகள் ஒன்று கூடி செய்யும் சித்திரை மாதத் தொடக்க வழிபாட்டுச் சம்பிரதாயமே இதன் நோக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள பிதப்புரம் கிராமத்தில் பொன்னேர் பூட்டும் பாரம்பர்ய நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் தங்களின் மாடுகள், ஏர்க்கலப்பை, கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்ட விவசாயப் பயன்பாட்டுப் பொருள்களுடன் உயிரிழந்த மாட்டின் கொம்பு, நவதானிய விதைகள் ஆகியவற்றை வைத்து வணங்கினர். டிராக்டர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொட்டு வைக்கப்பட்டு கலர் தாள்கள், பலூன்கள் கட்டப்பட்டிருந்தன.

வழிபாடு

வழிபாட்டிற்குப் பின்னர், மாட்டுவண்டி, டிராக்டர்களில் விவசாயிகள் குடும்பமாகச் சென்று ஊருக்குச் சொந்தமான நிலத்திற்குச் சென்றனர். அங்கு மாடுகளைப் பூட்டி ஏர்க்கலப்பையாலும், டிராக்டராலும் உழவு செய்தனர். பின்னர், அவரவர் நிலங்களில் உழவு செய்து தானியத்தை விதைத்தனர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ சின்னப்பன் கலந்து கொண்டார். ஏர்க்கலப்பை உழவு, டிராக்டர் உழவினை தொடங்கிவைத்து தானியம் விதைத்தார். இதில், விவசாயிகள் உழவின் போது முகத்தில் மாஸ்க் அணிந்தனர்.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், “தமிழ் வருசத்தோட தலை மாசம்தான் சித்திரை. ’’சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்” எனவும், ”சித்திரையில மழை பெஞ்சா பொன் ஏர் கட்டலாம்‘’னு கிராமத்தில் சொலவடையே இருக்கு. சித்திரை மாசப் பிறப்பன்றும், அந்த மாசத்து முக்கிய நாள்கள், வளர்பிறை நாளை ஊர்க்காரர்கள்கூடி தேர்வு செஞ்சு, முதல் உழவை உழுவார்கள். எங்க கிராமத்துல எப்பவுமே சித்திரை ஒண்ணுலதான் உழவடிப்போம்.

விதைக்கு ஆரத்தி எடுத்தல்

காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு, மாலை போட்டு, வீட்டில் சாணி மெழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அறுகம்புல் சொறுகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு, மாடுகளுக்கும், ஏர்க்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி, தோள்ல ஏரைத்தூக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சுட்டு ஊருக்குப் பொதுவான இடத்துல கொண்டு வந்து மாடுகளை நிப்பாட்டிட்டு வழிபாடு செய்தோம்.

ஒவ்வொரு வீட்டுலயும் அவரவர் வீடுகளில் கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு..ன்னு என்ன விதை இருக்கோ அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சோம். அதை வழிபாட்டுல வச்சு, சாமி கும்பிட்ட பிறகு, எல்லா விவசாயி ஏர்கலப்பைக்கும் மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடன் காட்டினதும், ஒவ்வொரு ஜோடி மாடுகளும் வரிசையாய்ப் போயி, ஊருக்குச் சொந்தமான நிலத்துல வரிசையா ஏர்பூட்டி நிறுத்தினோம்.

உழவு

ஊருல மூத்த விவசாயி துணியை அசைச்சதும், கிழக்கு மேற்கா மூணு தடவை உழுதுட்டு, நிலத்தைக் குறை போடாம முழுவதுமா உழுது, அப்படியே ஊர் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூவினோம். பிறகு, விவசாயிகள் அவரவரது சொந்த நிலத்துலயும் உழுதுட்டு வீட்டுக்கு வருவோம். பொன் ஏர் கட்டுவதற்கு முன்பாக எந்த ஒரு விவசாய வேலையையும் செய்ய மாட்டோம்.

கோடையில் பெய்யும் மழை நீரை மண்ணை விட்டு வெளியேற விடாமல், மண்ணிலேயே நிலை நிறுத்தி மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துவதுதான் கோடை உழவின் நோக்கம். கோடையில பெய்யும் மழை நீரை முறையாக சேமிக்கலேன்னா நிலத்துக்குப் பயன்படாமல் வீணாகிவிடும். எனவே கோடை உழவு ரொம்ப அவசியம்.

டிராக்டர் உழவு

வறட்சி ஏற்படும் காலத்தில் மேல் மண்ணில் ஈரம் இல்லாவிட்டாலும், மண்ணின் அடிப்பாகத்தில் உள்ள தண்ணீர், மண்ணின் மேலே ஊடுருவி பயிரை மண்ணின் வறட்சியிலிருந்து பாதுகாக்கும். கோடையில் உழவடிப்பதால் மண் பொலபொலப்பா மாறிவிடும், இதனால் மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழைநீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நில விவசாயிகளுக்கு கோடைமழைதான் உயிர்நாடி” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.