கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரலில் முடியவேண்டிய 10-ம் வகுப்பு தேர்வை, தற்போது மே மாதத்தில் நடத்தலாம் என்றும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய வைக்கலாம் என்றும் ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. தற்போது, 3 வாரங்களுக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட முடியாததால், பல சிறுவர்களுக்கு இந்தத் தொடர் விடுமுறை சலித்துப்போய்விட்டது.

சில மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமுடன் பாடப் புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் மாணவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட புதுக்கோட்டை தொழுவங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை, தன் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தினமும் வீட்டுப் பாடம் கொடுத்து, மாணவர்களின் வீட்டையே பகுதி நேர வகுப்பறையாக மாற்றி படிக்கவைத்துவருகிறார்.

‘தொழுவங்காடு நூற்றாண்டுப் பள்ளி’ என்ற வாட்ஸ்அப் குரூப்பைத் தொடங்கி, மாணவர்களின் பெற்றோர்களின் வாட்ஸ்அப் எண்ணை இணைத்திருக்கிறார். அதில், “இனிய காலை வணக்கம், 4-ம் வகுப்பு கார்த்திகேயன் பேசுகிறேன் டீச்சர், இன்னைக்கு என்ன ஹோம் வொர்க்” என்று வாட்ஸ்அப் குரூப்பில், மாணவன் வாய்ஸ் நோட் போடுகிறார். அதற்குக் கீழே ஆசிரியர் ராக்கம்மாள், “காலை வணக்கம் கார்த்திகேயன், முதல் 20 திருக்குறள்களைப் பொருளோடு படிச்சிட்டு அதை எழுதி அனுப்புப்பா” என்று வாய்ஸ் நோட் அனுப்புகிறார். உடனே ஓகே டீச்சர் என்று கூறிய 2 மணி நேரத்தில் படித்துவிட்டு, அதைப் பெற்றோர்கள் முன்னிலையில் நோட்டில் எழுதி குரூப்பில் அனுப்பிவிடுகிறார்.

இடையிடையே, படிப்பதற்காக பொது அறிவுக் கேள்விகள் அனுப்பப்படுகிறது. வாய்ப்பாடு, பழமொழி, விநாடி-வினா, தமிழ் எழுத்துப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வமுடன் எழுதி அனுப்பிவருகின்றனர்.

இதுபற்றி பள்ளி ஆசிரியை ராக்கம்மாள் கூறும்போது, “எங்க பள்ளியில படிக்கிற பெற்றோர்களிடம், எப்போதும் கான்டெக்ட்ல இருப்பேன். அப்படி, பெற்றோர்கள்கிட்ட பேசினப்பதான், எங்க பிள்ளைங்க சிலர் ஆர்வமா புத்தகத்தை எடுத்து வச்சு எழுதிப் பார்க்கிறதா சொன்னாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி பள்ளி வாட்ஸ்அப் குரூப் ஓப்பன் பண்ணிட்டாலும், அப்பதான் எனக்கு வாட்ஸ்அப் மூலம் பாடம் நடத்தலாம்ங்கிற ஐடியா வந்துச்சு.

வாட்ஸ் அப்பில் பாடம்;

அவங்களே ஆர்வமாக ஒருநாளைக்கு 2 மணி நேரம் படிச்சா போதும். ரொம்பவும் டார்ச்சர் பண்ணக்கூடாது. இப்போதைக்கு எழுத்துப்பயிற்சிதான் அதிகமாகக் கொடுக்கிறேன். பெற்றோர்கள் முன்னாடி பார்க்காம எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்பிருவாங்க. அதை திருத்தி அனுப்புவேன். வரும் நாள்களில், வீட்டில் இருந்து கொண்டே அவர்களைப் படிக்கவைக்கணும். பிள்ளைங்க ஆர்வமாக இருக்காங்க. அதே நேரத்துல அவங்க பெற்றோரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. பெற்றோர்கள் சப்போர்ட் இல்லைனா நிச்சயமா இது சாத்தியமில்லை. வாட்ஸ்அப் இல்லாத ஒரு சிலர்கிட்ட போனில் பேசி படிக்கவைக்கிறேன். பிள்ளைங்களுக்கு பாடம் நடத்த முடியலையேங்கிற குறையை வாட்ஸ்அப் போக்கிருச்சு” என்கிறார் மகிழ்வுடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.