ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண்  ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். 
 
நாடு முழுவதும் போடப்பட்ட  ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. அந்தத் தடையாணையை மேலும் நீட்டிக்கச் சொல்லி பல மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனையடுத்து பிரதமர் நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்கள் இடையே உரையாற்ற உள்ளார்.  இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றினால் 9152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில்18,53,168 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
 
image
நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்த ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். 
 
விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர்.  இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். 
 
 
இது தொடர்பாக ஸ்ரீஜனா, “இது எனது கடமை. இது ஒரு மனிதாபிமான செயல். நிர்வாகத்திற்கு ஏதேனும் வழியில் உதவியாக இருப்பதன் மூலம் எனது பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை நான் உணர்ந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். 
image
 
அரசு விதிமுறைப்படி, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனாலும் அவர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அதுவும் தன் பிஞ்சுக் குழந்தையுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவரை இன்றைக்கு சமூக வலைத்தள வாசிகள்  பாராட்டி வருகின்றனர். 
 
image
 
இந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அர்ப்பணிப்பை அறிந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், இந்தப் பெண் அதிகாரியை பாராட்டியதுடன், கடமையுணர்வுடன் பங்கேற்றதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற கொரோனாவுக்கு எதிரான வீரர்களைக் கொண்டிருப்பது நாட்டின் அதிர்ஷ்டம். கடமை உணர்வுடன் அர்ப்பணிப்பாக வாழும் இவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்துடன் ட்விட் செய்துள்ளார். 
 
ஆந்திராவில், 427 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய்த் தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.