மன்னார்குடி அருகே ஒன்றியப் பெருந்தலைவர் ஒருவர், தன் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்துவருவதுடன், காலம் முழுக்க அவர்கள் வாழ்கையில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் காக்கப்படவேண்டியவர்கள் எனப் பாராட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரியாதை செய்யப்பட்ட பணியாளர்கள்

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அவர்களின் தன்னலமற்ற பணிக்காக அனைவராலும் பாராட்டப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவருவது போற்றத்தக்கது.

Also Read: தூய்மைப் பணியாளர்களுக்கு `Guard of honour’ – அசத்திய நெல்லை மாநகரக் காவல்துறை 

எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது தூய்மைப் பணியாளர்கள்மீது அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. அத்துடன், பல ஊர்களில் அவர்கள் பாராட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டுவருவது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருப்பவர், மணிமேகலை. இவர், தன் ஒன்றியத்தில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்து வருவது தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமேகலை

இதுகுறித்து மணிமேகலையிடம் பேசினோம். “தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்திவருகிறது. என்னைப் போன்ற ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எங்களைவிட, தூய்மைப் பணியாளர்களின் உழைப்பு பெரும் மரியாதைக்குரியது. கிராமங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் என அவர்கள் இரவு பகல் பாராமலும், தங்கள் குடும்பத்தைப் பற்றி கவலை சிறிதும் இல்லாமலும் மக்களுக்காகப் பணிசெய்துவருகின்றனர்.

எல்லோர் முன்னிலையிலும் அவர்களைக் கெளரவித்து மரியாதை செய்ய நினைத்தேன். அதன் முதற்கட்டமாக, நல்லூர் ஊராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு எல்லோர் முன்னிலையிலும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், அவர்கள்மீது மலர் தூவியதுடன், `நீங்க இதேபோல் இன்னும் பல மடங்கு போற்றப்படவேண்டியவர்கள்’ என்றார்.

தூய்மைப் பணியில்

அப்போது, சில தூய்மைப் பணியாளர்களின் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கின. `இப்போது மட்டுமல்ல, இனி அடிக்கடி இதுபோன்ற மரியாதை உங்களுக்கு கொடுக்கப்படும். உங்களால்தான் இந்த ஊர் சுத்தமாக இருக்கிறது’ எனக் கூறி அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் வழங்கினோம். கோட்டூர் ஒன்றியத்தில் மொத்தம் 49 ஊராட்சிகள் உள்ளன. இதில் 215 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற மரியாதை கொடுக்கப்பட உள்ளது.

Also Read: `பாதபூஜை; 105 நபர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு’- தூய்மைப் பணியாளர்களைக் குளிர்வித்த கரூர் தொழிலதிபர்

அதன் பின்னர், அவர்கள் காலுக்கு ஷூ மற்றும் கையுறை போன்ற பொருள்கள் கொடுக்க இருக்கிறோம். எங்க ஒன்றியத்தைச் சேர்ந்த மக்களிடமும் தூய்மைப்பணி யாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டுவருகிறது. காலம் முழுக்க எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் காக்கப்படவேண்டியவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.