கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று மாலை நிலவரப்படி திருச்சி, சென்னை, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் டெல்லி சென்றுவந்த 71 பேருக்கு நோய் தொற்று இல்லை பரிசோதனையில் உறுதியானாலும், அவர்கள் அனைவரும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்

மேலும் ஏற்கெனவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேரும், கரூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த நிலையில், நேற்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதால், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனத் திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வீடு திரும்பிய நோயாளி… மகிழ்ச்சியில் மருத்துவர்கள்

கடந்த 22ம் தேதி துபாய் நாட்டில் இருந்து திருச்சி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கவே, அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 18 நாட்கள் சிகிச்சை முடிந்தநிலையில் அந்த வாலிபர் நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை, ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

வீடு திரும்பிய நோயாளி

“அந்த வாலிபர் ஆரம்பம் முதலே எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது. கூடவே, அவருக்கு வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கினோம். தொடர்ந்து அவரை, அவரின் குடும்பத்தாரோடு பேச அனுமதித்ததால் அவரின் மனநிலையிலும், உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். தொடர் சிகிச்சையின் பலனாய் மூன்று முறை எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர், 18ம் நாள் டிஸ்சார்ஜ் செய்து உள்ளோம்” என்றார்கள் திருச்சி மருத்துவர்கள்.

சாப்பாடு சரியில்லை.. வீட்டுக்குப் போறேன்!

இப்படியிருக்க கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலர் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த 45 வயது நபர், மருத்துவமனையில் வழங்கும் உணவு பிடிக்கவில்லை. அதனால் வீட்டு சாப்பாடு சாப்பிட சென்றது நீண்ட தேடலுக்கு பிறகு தெரிந்தது.

கொரோனா பரிசோதனை.

போலீஸாரின் தேடுதலில் அந்தநபர், அவர் வீட்டில் இருப்பது தெரியவரவே, அவரை திருவெறும்பூர் போலீஸார் திருச்சி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

ஒத்துழைக்க மறுக்கும் நபர்கள்..!

நிலைமை இப்படியிருக்க கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்து உழைத்து வருகிறார்கள்.

ஆனால் சிலர் ஆரம்பம் முதலே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறார்கள். அதில் திருச்சி பீம நகரைச் சேர்ந்த மூன்று பேர் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், இன்று காலை, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் நோயாளிகளை மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த நோயாளி ஒருவர் திடீரென மருத்துவரின் முகத்தில் எச்சிலை துப்பியதுடன், அவர் அணிந்திருந்த மஸ்கையும் கழட்டி மருத்துவர் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இது திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி கமிஷ்னர் வரதராஜூ ஆகியோர் நேரில் விசாரித்தனர். அதனையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸை மற்றவர்களுக்குப் பரப்பும் வகையில் செயல்பட்டது, ஊரடங்கு உத்தரவை மீறியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

அடுத்தக்கட்ட விசாரணையில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்படும் என்கிறார்கள் திருச்சி போலீஸார். கொரோனா நோயாளி, சிகிச்சைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: `மருத்துவமனையில் சாப்பாடு சரியில்லை; அதான் வந்துட்டேன்!’-திருச்சி மருத்துவர்களை அதிரவைத்த நபர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.