ஐபிஎல் விளையாட்டை மறந்து விடுங்கள் என்று பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்றும் நடைபெறுமா ? என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். இந்தியாவின் கொரோனா பாதிப்பு வேகத்தைப் பார்க்கும்போது, கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் இந்த ஆண்டு ஐபிஎல் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் மிக விரிவான விளக்கத்தை முன்வைத்துள்ளார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்க்கு பேசியுள்ள கங்குலி,“நாங்கள் ஒவ்வொரு முன்னேற்றங்களைக் கவனித்து வருகிறோம். தற்போதைக்கு, நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. சொல்ல என்ன இருக்கிறது? விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளாகச் சிக்கித் தவிக்கின்றனர். அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. யாரும் எங்குமே போக முடியாது. மே மாதம் நடுப்பகுதி வரை இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர், “நீங்கள் எங்கிருந்து வீரர்களை வர வைப்பீர்கள்? வீரர்கள் எப்படி பயணம் செய்வார்கள்? இந்த நேரம், உலகில் உள்ள எந்தவொரு விளையாட்டிற்கும் சாதகமாக இல்லை. ஐபிஎல்லை மறந்துவிடுங்கள்”என்று கூறினார். அதனைத் தொடர்ந்து “நாளை மற்ற பி.சி.சி.ஐ பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த பிறகுதான் நான் இதைப் பற்றி கூற முடியும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM