லாக்டவுன் விரைவில் முடிவுக்கு வரலாம். மீண்டும் அலுவலகம் திரும்பும் பரபர நாள்களுக்குக் கைகொடுக்கும் வகையில், ரெடி டு குக் உணவுப் பொருள்களை இப்போதே செய்து வைத்துக்கொள்ளலாம்தானே?

சத்துமாவு தோசை மிக்ஸ், ஸ்வீட்/சால்ட் கஞ்சி மிக்ஸ், இன்ஸ்டன்ட் சட்னி… காலை நேர அவசர சமையலுக்குக் கைகொடுக்கும் இந்த ரெடி டு குக் அயிட்டங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.

சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்

“எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, சில ‘ரெடி டு குக்’ அயிட்டங்களை செய்து வெச்சுக்கிட்டா, ஆபீஸ் போறப்போ அவசரத்துக்குக் கடையில் வாங்காம, சுத்தமான முறையில், சொந்தத் தயாரிப்பில் உருவான உணவுப்பொருள்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமா இருக்கலாம்…” என்று சொல்லும் சமையல் கலைஞர் சுதா அளிக்கும்’ ரெடி டு குக்’ ரெசிப்பிகள் உங்களுக்காக…

1. சத்துமாவு தோசை மிக்ஸ்

தேவையான பொருள்கள்:

முழு கோதுமை – 2 கப் (500கிராம்)

ரவை – 2 கப்

கம்பு – 1/2 கப்

கேழ்வரகு – 1 கப்

ஜவ்வரிசி – 2 டேபிள்ஸ்பூன்

முழு உளுந்து – 8 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்

குறிப்பு:

இப்போது அனைத்துக் கடைகளும் விடுமுறை என்பதால், மாவு அரைக்கும் மில்கள் இருக்காது. முழு கோதுமை மிக்ஸியில் அரைபடுவது கடினம் என்பதால் கோதுமை மாவு சேர்த்துக்கொள்ளவும். கடைகள் திறந்த பின், அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கொடுத்து, மாவாக அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

சத்துமாவு தோசை மிக்ஸ்

கோதுமைக்குப் பதிலாக கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். மற்ற பொருள்களைத் தண்ணீர் சேர்க்காமல், தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்தவுடன் சற்று வெதுவெதுப்பாக இருக்கும் மாவு வகைகளை ஆறவிட்டு, ஒன்றாகக் கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

சத்துமாவு தோசை

செய்முறை:

தேவையான அளவு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். தாளிக்கும் வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, தேவையான அளவு பொடியாக நறுக்கிய வெங்காயமும், துருவிய கேரட்டும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதை மாவில் கொட்டி, தேவையான அளவு உப்பும் தண்ணீரும் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

தோசை தவாவில் மாவை ஊற்றி, நல்லெண்ணெய் விட்டு, மொறுகலாகச் சுட்டு சாப்பிடவும். விருப்பப்பட்டால் தோசைப் பொடியை மேலே தூவிக்கொள்ளலாம். சட்னி, சாம்பார் தேடத் தேவையில்லை.

2. ஸ்வீட் & சால்ட் கஞ்சி மிக்ஸ்

தேவையான பொருள்கள் :

சம்பா ரவை – 2 கப்

கேழ்வரகு – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

கம்பு – 1/2 கப்

பொட்டுக்கடலை – 1/2 கப்

ஜவ்வரிசி – 1/4 கப்

கறுப்பு உளுந்து – 1/4 கப்

வெள்ளை அல்லது மக்காச் சோளம் – 1/4 கப்

பச்சை வேர்க்கடலை – 1/4 கப்

முழு பச்சைப்பயறு – 1/4 கப்

முந்திரி – 50 கிராம்

பாதாம் – 50 கிராம்

குறிப்பு:

வயதானவர்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றால், முந்திரி மற்றும் பாதாமை தவிர்த்துவிடவும்.

மேலே கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் தண்ணீரில் அலசி ஈரம்போக காயவைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியைச் சூடாக்கி, அனைத்துப் பொருள்களையும் எண்ணெய் சேர்க்காமல் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மாவாகப் பொடித்துக்கொள்ளவும். அரைத்தவுடன் சூடாக இருக்கும் மாவுகளை ஆறவைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும்.

ஸ்வீட் கஞ்சி செய்முறை:

ஸ்வீட் கஞ்சி

ஒரு கப் தண்ணீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் பவுடரை போட்டு கட்டி தட்டாமல் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கி, கஞ்சி பதத்துக்கு வரும்போது, தேவையான அளவு பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும். இதில் சுவைக்கு ஏற்றாற்போல நாட்டுச்சர்க்கரையும், சிறிது ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கலக்கினால்… சத்துள்ள இனிப்புக் கஞ்சி ரெடி.

சால்ட் கஞ்சி செய்முறை:

சால்ட் கஞ்சி

ஒரு கப் தண்ணீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் பவுடரை போட்டு கட்டி தட்டாமல் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து, கட்டியாகக் களி பதத்துக்கு வரும்வரை கிளறவும். களி பதத்துக்கு சுருண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.

தேவையான அளவு நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மற்றும் உப்பு சேர்த்துக் குடித்தால் உடல் குளிர்ச்சியடையும்.

Also Read: வெட்டிவேர், புதினா, மாதுளை… எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்

3. கோங்குரா இன்ஸ்டன்ட் சட்னி

தேவையான பொருள்கள்:

கோங்குரா கீரை (புளிச்ச கீரை) ஆய்ந்து அலசியது 2 கப்

தனியா – 3 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

உடைத்த உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

புளிச்ச கீரை

செய்முறை:

கோங்குரா கீரையைத் தண்ணீரில் அலசி, ஈரப்பதம் போக துடைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு மொறுமொறுவென கீரையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் மீதமிருக்கும் எண்ணெய்யை விட்டு அதில் உப்பு தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

கீரை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். பிறகு மற்ற பொருள்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கவும்.

புளிச்ச கீரை துவையல்

த்ரீ இன் ஒன்:

1. தேவையான அளவு பொடியை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்தில் கலந்துகொள்ளவும். பிறகு கடுகு, உளுந்து தாளித்து கொட்டினால் இன்ஸ்டன்ட் சட்னி ரெடி.

2. தேவையான அளவு பொடியில் சிறிது தண்ணீரும், தேவைக்கு உப்பும் சேர்த்து, கஞ்சிக்குத் துவையலாகச் சாப்பிடலாம்.

3. சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, தேவையான அளவு பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

Also Read: வீட்டிலேயே செய்யக்கூடிய 5 விதமான அடிப்படை பார்லர் சர்வீஸ் ! #StayHome

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.