கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில மாநில அரசுகள் விடுத்துள்ளது. பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
லாக் டவுனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அதன்காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தேவையில்லாமல் வெளியில் ஊரைச் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாகத் தமிழக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ரவியிடம் பேசினோம். “மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. லாக்டவுனால் வீடுகளிலேயே இருந்துவருகிறோம். போனைத் திறந்தால் கொரோனா தொடர்பான மெசேஜ்களே அதிகமாக வந்திருக்கும். கொரோவைக் கட்டுபடுத்தும் பணியில் சுகாதாரத்துறையினரும் காவல்துறையினரும் இதர அரசு துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தனிமனித ஹெல்த்தை சரியாகப் பராமரித்தால் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் ஓடியே போய்விடும். வீடுகளிலேயே முடங்கியிருப்பதை நிறையபேர் மனஅழுத்தமாகக் கருதுகின்றனர். சந்தோஷமாக இருங்கள். மனஅழுத்தம் தேவையில்லை. இது ஒரு கோல்டன் வாய்ப்பு. லாக்டவுன் முடிந்து நம்முடைய பணிக்குச் செல்லும்போதுதான் இன்னும் நிறைய சந்தோஷமாக இருந்திருக்கலாம் என நினைக்கத் தோன்றும். இதுதான் நம்முடைய குடும்பத்தைக் கவனிக்கக்கூடிய காலம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள். யூடியூப்பை பார்த்து மனைவி, குழந்தைகளுக்கு குடும்பத் தலைவர்கள் சமைத்துக் கொடுக்கலாம்.
அப்போதுதான் குடும்பத் தலைவிகளைப் புரிந்துகொள்ள முடியும். இளைஞர்கள், குழந்தைகள் ஆன்லைனில் புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். லாக் டவுன் காலகட்டத்தில் நம்மை நாமே அறிந்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதுங்கள்.
ஊரடங்கு சமயத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள் அதிகளவில் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. குடும்ப வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தருணத்தில் பெண்கள், கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டும். வன்முறைகளை ஏவினால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்படும் பெண்கள், தயங்காமல் காவல்துறையின் 181, 1901, 100, காவலன் ஆப்ஸ் ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
ஏடிஜிபி ரவியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன?

தினமும் குறைந்தபட்சம் 30 போன் அழைப்புகள் வருகின்றன. அதன்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். புகார்களின் அடிப்படையில் 6 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளனர்.
குடும்ப வன்முறைகள் அதிகரித்ததற்கு என்ன காரணம்?
லாக் டவுன் காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. கணவன், மனைவிக்கு இடையே சண்டைகள் அதிகமாக நடக்கின்றன. மனைவிகளை அடிப்பதற்கு கணவர்களுக்கு உரிமையில்லை. மனைவிகளை அடிப்பது சட்டப்படி குற்றம். எனவே, லாக்டவுன் காலகட்டத்தை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ பழகிக் கொள்ளுங்கள்.
எந்த மாவட்டங்களிலிருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளன?
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 புகார்களும் அடுத்து புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 4 புகார்களும் சிவகங்கையில் 3 புகார்களும் வந்துள்ளன. சென்னை, கோவை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு புகாரும் வந்துள்ளது. மொத்தம் 24 புகார்கள் வந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேரும் கோவை, புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 18 பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம். புகாரளித்த அடுத்த சில நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள், குழந்தைகள் என யாரிடமிருந்து அதிக புகார்கள் வந்துள்ளன?.
Also Read: `லத்தி தேவையில்லை, அனைவருக்கும் அட்வான்ஸ் தருகிறேன்!’- போலீஸ் ஏ.சி-யின் நூதன தண்டனை #Corona
தற்போதைய சூழலில் பெண்களிடமிருந்துதான் புகார்கள் அதிகளவில் வருகின்றன. புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.