பொள்ளாச்சியில் இருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்துக்கு கைக்குழந்தையுடன் நடந்தே வந்த 7 பேர்களை, காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்கி, தனது சொந்த வாகனத்தில் அனுப்பி வைத்து, அந்தத் தொழிலாளர்களை நெகிழ வைத்திருக்கிறார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவி ஒருவர்.

அந்த 7 பேர்கள்

Also Read: `பாதபூஜை; 105 நபர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு’- தூய்மைப் பணியாளர்களைக் குளிர்வித்த கரூர் தொழிலதிபர்

கொரோனா வைரஸ் தாக்கத்தால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மக்கள் போகவிடாதபடி தடை விதித்துள்ளது. வீடுகளில் இருந்து மக்கள் அத்தியாவசிய விசயங்களுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், வெளிமாநிலங்களில், வெளிமாவட்டங்களில் தின கூலிக்கு பணிபுரியும் பல ஆயிரம் தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. வருமானத்துக்கு வழியின்றியும், உணவு கிடைக்காமலும் அவர்கள் அல்லாடிப்போகிறார்கள்.

தமிழரசி, தனக்கோடி

இதனால், பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களைக்கூட நடந்தே கடக்கும் கொடுமையான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பொள்ளாச்சிக்கு கட்டட வேலைக்குப் போன, அரியலூர் மாவட்டம், விக்ரமங்கலம் அதலவாய் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர், சொந்த ஊருக்குப் போக நடந்தே வந்திருக்கிறார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில் உள்ள புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி அருகே சாப்பாடின்றி தவித்த கைக்குழந்தை உட்பட அந்த 7 பேர்களுக்கும், தனது சொந்த செலவில் உணவு வாங்கிக் கொடுத்ததோடு, அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றி அரியலூருக்கு அனுப்பி வைத்து, அந்தத் தொழிலாளர்களை நெகிழ வைத்திருக்கிறார், புங்கம்பாடி மேல்மாகம் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி தனக்கோடி.

இதுகுறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி தனக்கோடியிடம் பேசினோம். “பொள்ளாச்சிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியமுத்து, சிவகுமார், மோகன்ராஜ், வேலுசாமி, சாந்தி, ஜமுனாராணி மற்றும் கைக்குழந்தையான சித்தார்த் ஆகிய ஏழு பேரும் போயிருக்காங்க. கட்டட வேலைகளுக்கு அரியலூரைச் சேர்ந்த ஒருவர் பொள்ளாச்சியில் கொண்டுபோய் இவர்களை விட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால், அங்கே வேலை கிடைக்காமல் போயிருக்கிறது. கையில் இருந்த காசைக்கொண்டு சாப்பிட்டிருக்கிறார்கள்.

தமிழரசி தனக்கோடி

ஊருக்கு கிளம்பலாம்னு அவங்க நினைச்சப்ப, ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிட்டுட்டாங்க. இதனால், சொந்த ஊருக்கு அவர்களால் வரமுடியாத சூழல். அதனால், அருகில் இருந்த ஒரு விவசாயியின் கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டுற வேலையைப் பார்த்து, அதுல கிடைத்த வருமானத்துல சாப்பிட்டுருக்காங்க. அந்த விவசாயித் தோட்டத்திலும் வேலை இல்லாம போயிருக்கு. அதனால், ஊருக்குக் கிளம்ப முடிவெடுத்து, ஏழு பேரும் நடந்தே அரியலூருக்குப் போக முடிவெடுத்தாங்க. அதன்படி, நடந்தும், கிடைச்ச வாகனங்களில் சொற்ப தூரம் வாகனப் பயணமும் செய்து, எங்க ஊருக்கு அருகில் வந்திருக்காங்க.

இரவானதாலும், பசியில் அவர்கள் தவித்ததாலும், இங்கேயே தங்க முடிவெடுத்தாங்க. அதைப் பார்த்த அரவக்குறிச்சி எஸ்.ஐ, அவர்களை விசாரித்திருக்கிறார். அவர்களின் நிலைமையைக் கேட்டதும் பரிதாபப்பட்ட அவர், என்னோட கணவர் தனக்கோடிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே, நாங்க போய் அவங்களுக்கு இரவு டிபன் வாங்கிக் கொடுத்தோம். கைக்குழந்தைக்கு எங்க வீட்டுல கறந்த பாலை பருக கொடுத்தோம். அங்கேயே இரவு தங்க வைத்தோம். மறுநாள், ‘நாங்க நடந்தே போறோம்’னு 7 பேரும் கிளம்ப பார்த்தாங்க.

காவல்துறை அனுமதி பாஸ்

ஆனால், என் கணவர், எஸ்.ஐ சரவணனிடம் அனுமதி பாஸ் லெட்டர் வாங்கி, ஏழு பேரையும் எங்களோட காரில் அனுப்பி வைத்தார். பெருமாள் என்பவர் எங்க காரை ஓட்டிக்கிட்டுப் போய், அந்த ஏழு பேரோட சொந்த ஊரிலேயே அவர்களை இறக்கிவிட்டுட்டு, திரும்பி வந்தார். இந்த இக்கட்டான சூழலில், சொந்த ஊருக்கு நடந்தே போகப் பார்த்த அவர்களை எங்க வாகனத்தில் அனுப்பி வைக்க பாக்கியம் கிடைத்ததற்கு அந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார் உணர்ச்சி மேலிட!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.