பப்பாளிப் பழத்தை வெட்டருவாள்ல பதம் பார்த்த மாதிரி மஞ்சளுஞ் செவப்பும் கலந்து வானம் ‘செவசெவ’னு விடியிற நேரம். வாடிவாசல் தாண்டி தோட்டத்துக்கு நடுப்பற ஜெகஜோதியா அரண்மனை மின்னுது. ரொம்ப நாள் கழிச்சுக் காலம்பற விளக்கேத்தி இருந்தாங்க.

பிள்ளைச்சோறு வாங்க வந்த கிராமத்துப் பொம்பளைங்க, ‘இதென்னடி அதிசயம்’னு கொவட்ல கைவச்சுப் பாத்துக்கிட்டிருந்தாங்க.

அரண்மனையச் சுத்திச் சுறுசுறுப்பா தயாரா இருந்த பரிவாரங்கள, வாசல்ல இருந்த பட்டுப்போன கொன்ற மரம் மட்டும் மவுனமா வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்துச்சு!

நம்ம ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கர், வயசான தாயாரு வேளாண்டியம்மா கால்ல நெடுஞ்சாணா விழுந்து துண்ணூரு வாங்கினாரு. பெரிய ஜமீன்தாரு திருமலை கண்டம கெண்டம ராமகிருஷ்ண நாயக்கரோட பெரிய படத்துக்குப் புதுசா மால போட்டுக் கும்பிட்டாரு.

வெள்ளக்கார கலெக்டர் துரைக்கு ஜமீனோட ஐவேஜை ருசுப்படுத்தி, ஜமீன் கௌரதய காப்பாத்தணுமில்ல..? அதுக்குத்தான் பரிவாரங்களோட காட்டுக்குள்ள போறதுக்கு முந்தி பெரியவங்க ஆசி!

என்னதான் பாளையப்பட்டக்காரர்களா இருந்தாலும், பிரிட்டிஷ் சர்க்காருக்கு எவ்வளவு கப்பம் கட்றாங்கறதை வச்சுத்தான் ஒவ்வொரு ஜமீனுக்கும் இவ்வளவு கத்தி-கபடா, இவ்வளவு யானை-குதிரை வச்சுக்கலாம்னு சம்மதம் கொடுப்பாங்க. தனக்கு வர்ற ஆபத்தான நேரத்துல எழுவத்திரெண்டு பாளையப் பட்டக்கார ஜமீன்தாருக்கும் தாக்கீது அனுப்பி வெள்ளக்காரன் சேனை சேத்துக்குவான்.

வெள்ளக்கார துரைக்கு நம்ம ஐவேஜை காட்டணும். ஒண்ணு, நம்ம வில்லம்பு, கட்டை கடப்பாரைய வச்சு அவனோட மோதி ஜெயம் பண்ணணும். இல்லாட்டி, ‘எங்கிட்ட இவ்வளவு சமாசாரம், பூதம் இருக்கு’னு பயங்காட்டி அவன நடுங்க வைக்கணும். எது உசத்தி..?

வருச நாட்டு ஜமீன் கதை – 3

கலெக்டர் துரையோட மோதி மண்டைய ஒடச்சிக்கிறது அவ்வளவு சாமான்யமில்ல. அவங்க பார்த்து ஆதரிச்சு வச்ச ஆளுகதான் நம்ம ஜமீன்தாருக. வெள்ளத் துரைகளுக்கு எதுல பயம், எதுல பலவீனம் தெரிஞ்சு அடிக்கிறவங்கதான் ஜமீன்தாருங்க.

நடுச்சாமத்துல உத்தரவு போட்டபடி நாட்டாமைக, மணியக்காரங்க, சேவுகக்காரங்க சுறுசுறுப்பாயிட்டாங்க. முந்நூறு பேத்துக்கு ஆகாரப் பொட்டணம் கட்டியாச்சு. பெரிய வீட்டு முண்டா நாயக்கரைத் தட்டி எழுப்பியாச்சு. மலை ஜாதி பளியர்கள் ஒரு நூறு நூத்தம்பது ஆளுக வந்தாச்சு. யானைத் தடம் பார்த்துப் போறதுலயும் நர மாமிசம் சாப்பிடுற காட்டு ஜீவாத்யங்கள அடையாளம் கண்டு அடிக்கறதுலயும் இந்தப் பளியர்க வில்லாதி வில்லனுங்க.

நாட்டுத் துப்பாக்கி, வெடி வேட்டு, வேல் கம்பு, வில்லம்பு, பூட்டு, வடக் கயிறு, கட்டுச் சங்கிலி, இடாறி, மயக்கப் பொடி, விஷ மருந்து… இதோட அண்டா குண்டால சுண்ணாம்பும் அள்ளிப் போட்டுக் கிட்டாங்க.

ஜமீன்தாரு, அரண்மனை யானை மேல அம்பாரி ஏறிட்டாரு. துணைக்கு மூணு யானை, ஓட்டத்துக்கு இருவத்தேழு குதிரைக, வேட்டை நாய் முப்பத்தாறும் கடமலைக்குண்டு உள்காட்டுப் பகுதிக்குப் பாய ஆரம்பிச்சிருச்சு. தார தப்பட்டை அடிச்சு, கொட்டு கொம்பு ஊதி,

“அண்டம கண்டத விண்டல மண்டல

வெண்டிச செண்டு கழண்டெழ,

டுண் டுண் டுண் டுண்டென

திண்டிம கெண்டம கண்டமணி ஒலிக்க,

எட்டுத் திக்கும் அட்டக்கிரிகளும்

பதறிக் கதறிச் சிதறிக் கனலுற,

பாரொடு புவனம் சோதி பொறிந்திட

படீர் படீரென வெடித்துக் குலுங்கிட…”

எல்லாருமே ஏகச் சத்தமா கத்திப் பாட, காடே தூர்பேந்து போச்சு!

குள்ள நரி, காட்டுப் பன்னி மட்டுமில்ல… சிறுத்தைப் புலி, வரிப் புலி, கழுதப் புலி, கரடி, மான் மட்டை முதக்கொண்டு பள்ளத்தாக்குல சுக ஜீவனம் நடத்திக்கிட்டிருந்த அம்புட்டும், கத்திக் கதறி மூலைக்கொண்ணா பிச்சுக்கிட்டு ஓடுதுக. பளியர்க, கண்ணுக்குச் சிக்குனத வேல் கம்பால குத்தித் தோள்ல போட்டுக்கிட்டாங்க.

கெழக்க, வேலப்பர் கோயில் பக்கமா ஒரு பரிவாரத்தையும், மேற்க சீப்பாலக் கோட்டை வண்டிப் பாதை பக்கமா ஒரு பரிவாரத்தையும் பிரிச்சு அனுப்பினாரு பெரிய வீட்டு முண்டா நாயக்கர். அவருக்குத் தெரியாத காடு – தெசை கெடையாது. பெரிய ஜமீன்தாரோட அடிக்கொரு தரம் யானை, புலி வேட்டைக்குப் போன பழக்கம். பளியர்க பாஷையும் யானை பாஷையும் தெரிஞ்சவரு. பக்ஷிகளோடயும் பேசுவாரு.

‘காலங்கார்த்தால யானை எந்த எடத்துக்கு மேய வரும், தண்ணி தாப்பு எடுத்தா எந்தக் குட்டையில தண்ணி குடிக்கும், சாயங்காலமா எந்தப் பாதை வழியா போயி அடையும்’னு அம்புட்டும் தெரிஞ்சவரு. யானைக மேட்டுல விடுவிடுனு ஏறும். ஆனா, பள்ளத்துல எறங்கும்போது மெதுவா பின்னங்காலச் சுருக்கித் தடுமாறி எறங்கும். தலை பாரம் ஜாஸ்தி. அடி சறுக்கிறது அப்பத்தான். வெள்ள நெறத்தக் கண்டா யானைகளுக்கு ஒத்துக்காது.

இப்பிடித்தான் முன்ன ஒரு தடவ ஒத்த யானகிட்ட தனியா மாட்டிக்கிட்ட நாயக்கரு, கட்டியிருந்த வெள்ள வேட்டிய உருவிப் புதர்ல போட்டுட்டு முண்டமா ஓடிப்போயி மரத்துல ஏறித் தொத்திக்கிட்டாரு. யானை அந்த வேட்டிய கால்ல மிதிச்சுத் தும்பிக்கைல ‘பரட்.. பரட்’னு இழுத்துச் சுக்கல் சுக்கலா கிழிச்ச பெறகுதான் மதம் அடங்கி ஓடிப்போச்சு. சமயம் பாத்து தப்பிச்சு முண்டமா ஓடி வந்தவருக்குத்தான் ‘முண்டா நாயக்கர்’னு பட்டப் பேர் வெச்சாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை – 3

‘யானைக்குச் சுண்ணாம்பு அடிக்கணும்’னு ஜமீன்தாரு நடுச்சாமத்துல சொன்னதும் நாயக்கருக்கு முதல்ல வௌங்கல. யானைக அம்புட்டையும் ஒரே எடத்துல கூட்டுச் சேக்க ஜமீன்தாரு இப்பிடி ஒரு சூத்திரம் வெச்சிருக்காருனு தெரிஞ்சுக்கிட்டதும் முண்டா நாயக்கரே அசந்துட்டாரு!

துணை யானைக மூணுக்கும் பொடி அடிச்சு கயித்தைக் கட்டினாங்க. சுண்ணாம்பைக் கலக்கி, அதுக மேல வெள்ளையடிச்சாங்க. மூணு யானைகளையும் முன்ன நிறுத்தி அதுக பாஷையில,

‘மாவூத்து கும்பேறி மலைக்குண்டு அடியேறி வளசல் போயி அணச்சு ஓடியா!’னு என்னத்தையோ சொல்லி அங்குசத்தைத் தூக்கி ஒரு சலாவட்டம் அடிச்சுக் குத்தினாரு முண்டா நாயக்கரு. அம்புட்டுதான்… மூணு யானைகளும் நேரா தெக்குமுன்ன மலைமேட்ல ஏறிக் காட்டுக்குள்ள மறஞ்சுபோச்சு.

சொன்னபடிக்கு சாயங்காலம் மதுரை கலெக்டரு துரை மோட்டார் வண்டியில கண்டமனூர் அரண்மனைக்கு வந்ததும் காரியதரிசி சீனி நாயக்கர் வருமானம் இன்னபிற சிலவுக் கணக்கு சிட்டா புஸ்தகத்தை பவ்யமா புரட்டிக் காட்டினாரு. வருமானக் கணக்கைப் பார்த்த துரை, சிலவுக் கணக்குல, ‘யானைக்குக் கடலை அல்வா வாங்கிப் போட்டதுல இவ்வளவு ரூவா அணா பைசா செலவு’னு சுத்தமா எழுதியிருந்ததைப் பார்த்ததும் ஆடிப்போயிட்டாரு.

“துரை அவர்களே… பதினஞ்சு கடம் யானைகளை வளர்க்கிறோம். எல்லாமே உங்க சேனைதான். அதைப் பார்க்கத் தங்களை மயிலாடும்பாறை மாளிகைக்கு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார் எங்க ஜமீன் ஐயா…”

– சீனி நாயக்கர் ஒரே போடா போட்டு துரைய மாளிகைக்குக் கூப்பிட்டுப் போனாரு. போற வழியில ரெண்டு சிறுத்தைப் புலிக வாலச் சுருட்டிக்கிட்டுப் பதுங்கிப் பதுங்கி ஓடுறத துரை அதிசயமா பார்த்தாரு.

மயிலாடும்பாறை மாளிகைல துரை எறங்குனதும் வாட்டசாட்டமான வெடலப் பொம்பளப் புள்ளக நாலு பேரு அவருக்குப் பூப்போட்டு நமஸ்காரம் பண்ண, ஜமீன்தாரு ஒரு சலாம் அடிச்சு, கை குலுக்கி, பக்கத்துல இருந்த பாறை உச்சிக்கு கூப்பிட்டுப் போனாரு. அங்கன இருந்து பார்த்தா பச்சப்பசேல்னு பாதி ஒலகம் கண்ணுக்குத் தெரியுது. இவ்வளவு மரம் மட்டைகளை எங்கயுமே பார்த்ததில்லை. தூரமா தங்கக்கோடு மாதிரி வைகை நதி தகதகனு ஊந்து போகுது!

துரை மயங்கி நிக்கிற நேரத்துல திடீர்னு தெக்கயிருந்து மூணு வெள்ள யானைகளும் அதுக்குப் பின்னால திகுடுதிம்பா நூத்துக்கணக்குல காட்டு யானைகளும் சாரசாரையா எறங்கி வர்றது தெரிஞ்சுது. ஏவிவிட்டபடிக்கி, மூணு வெள்ள யானைக வைகை நதி ஆத்துல எறங்கித் தண்ணிக்குள்ள போக, அதுகள விரட்டி வந்த காட்டு யானைக பள்ளத்தாக்குல வந்து சேர்ந்துபோச்சு.

சாயங்கால சூரிய வெளிச்சத்துல நூத்துக்கணக்கான யானைகளும் அதோட தந்தங்களும் மின்னி மினுக்கறதை துரை தொப்பியைத் தூக்கிக் கண்ணுக்கு இதமா வெச்சு அதிசயமா பார்த்துக்கிட்டிருந்தாரு! ஜமீன்தாரு, சீனி நாயக்கரைப் பாத்து கண் புருவத்திலேயே துரையக் காட்டி கேலியா உதட்டைப் பிதுக்கினாரு.

“துரை அவர்களே… இவ்வளவு யானைகளுக்கும் தீனி போட்டு வளர்க்கிறோம். சேனையைக் காப்பாத்த வருமானத்தை மீறிச் செலவு செய்யறோம். இதுமட்டுமில்ல துரை அவர்களே… நீங்க சரின்னு சொன்னா புலி, கரடிகளையும் இந்த மாளிகைக்கே வரச் சொல்றோம்…”னு சொன்னதுதான் தாமசம்… மிரண்டு ரெண்டு கஜம் பின்னாடி நகண்டு போயி, “நோ… நோ… உங்க செல்வாக்கு என்னன்னு கண்கூடா பார்த்துட்டேன். உங்களப் பாராட்டுறேன்”னு ஜமீன் தாருக்குக் கைகுலுக்கினாரு துரை.

‘கலெக்டர் மாப்ள விழுந்துட்டான்’னு தெரிஞ்சுபோச்சு. துரைக்கு ராத்திரி விருந்துக்கு ஏற்பாடு ஆச்சு. மான்கறியும், முயல்கறியும் நெய் சொட்டச் சொட்டத் தயாராச்சு. வெள்ளிப் பொட்டி யானைத் தந்தம் சவரட்சணயும் தயாராச்சு. பூப்போட்டு நமஸ்காரம் பண்ண எளஞ்சிட்டுக, இப்போ ரவிக்கை இல்லாம வளையவந்து மதுக் கிண்ணத்த ஏந்தி துரையைச் சுற்றி உட்கார, அவரு பூமியிலிருந்து ஏழு மைல் உசரத்துக்குப் போயி மெதக்க ஆரம்பிச்சுட்டாரு.

வருச நாட்டு ஜமீன் கதை – 3

Also Read: வருச நாட்டு ஜமீன் கதை – 2

மெத்த மேல மல்லாந்து படுத்துக் கிட்டாளுக. எதத் தொட்டாலும் முயலைத் தொடற மாதிரி இருக்கு. எந்த ஊர்லயும் இவ்வளவு வடிவான பொண்ணுகள துரை பார்த்ததே இல்ல. ‘நைஸ் நைஸ்’னு தடுமாறி ஒருத்தியோட கன்னத்தக் கிள்ளி மெத்தைல லாவி, ரெண்டு கைய அவமேல பரப்பி மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

இந்த மாதிரி வாட்டமான பொம்பளைங்களுக்கு ‘சாரல்’னு பேரு. இவளுக எப்பவும் ஜமீன்தாரு குடும்பத்தைச் சுத்தியே இருப்பாங்க. ஜமீன்தாருக்கும் வேத்து ஜாதிப் பொம்பளைங்களுக்கும் பொறந்தவளுகதான் இந்தச் ‘சாரல்’!

நம்ம ஜமீன்தாருக்கு அப்ப ஜனகம் ஞாபகம் வந்துருச்சு! அரண்மனை நிர்வாகஸ்தரைக் கூப்பிட்டாரு. வைகை ஆத்தங்கரையில ‘சின்ன அரண்மனை’ கட்ட உத்தரவு போட்டாரு. மேஸ்திரிய நாளைக்கே சந்திக்கணும்னு முடிவெடுத்தாரு.

அதேசமயம்.. ஜமீன்தாருக்குக் கல்யாணமே ஆகலைன்ற சங்கதியை ஜனகத்துக்கு யாரோ சொல்லியிருக் காங்க. யாரு?

– தொடரும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.