லாக்-டவுன் இல்லாமலிருந்தால், நேற்று `மாஸ்டர்’ வெளியாகியிருக்கும். அந்த ஃபீலிங்கில் நேற்று முன்தினம் இருந்தே, `மாஸ்டர் டிக்கெட்டுக்கு இன்பாக்ஸ் வரவும்’, `நாளைக்கு காசி டாக்கீஸ்ல FDFS’ என போஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள். நே அது இன்னும் உக்கிரமாகி, `படத்துல அடியாட்களை அடிச்சுப்போட்டு கூட்டமா நின்னு ஒரு செல்ஃபி எடுப்பார் தளபதி. வேற லெவல். வாட்சிங் `மாஸ்டர்’ என ரோகினி தியேட்டருக்கு செக்-இன்னே போட ஆரம்பித்துவிட்டார்கள். நம் கற்பனை உலகில் ரிலீஸாகியிருக்கும் `மாஸ்டர்’, அதே கற்பனை உலகிலிருந்து கற்பனையாக ஒரு விமர்சனம் எழுத வேண்டுமில்லையா. அதான் இப்படி! யெஸ், கொரோனா க்வாரன்டீன் கொடூரமானது…

மாஸ்டர்

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வி, மீண்டும் தர்மமே வெல்லும் குட்டிக்கதைதான், `மாஸ்டர்’.

கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றும் விஜய், மாணவர்கள் மத்தியில் மரண மாஸ் மாஸ்டர். அவர்களை நல்வழிபடுத்த பாடம் எடுப்பதும், தீயவழி சென்றால் லாடம் கட்டுவதுமாக பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். வேலை என வந்துவிட்டால் ஒர்க்கஹாலிக்கான நம் வாத்தி, எந்நேரமும் கல்லீரலில் மதுவும், நுரையீரலில் புகையும் நிரம்ப சுற்றும் அல்கஹாலிக்கும் கூட. அந்தக் குடியே அவர் வேலைக்கு பிரச்னையாகிப் போக, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் மாற்றலாகி போகிறார்.

மாஸ்டர்

ஆனால், அங்கோ சிறுவர்களே போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். சிறுவர்களைப் போதைக்கு அடிமையாக்கி, பெரிய குற்றங்களை எல்லாம் செய்துவருகிறது ஒரு அண்டர்கிரவுண்ட் மாஃபியா கும்பல். அதன் தலைவர் விஜய் சேதுபதி. கெட்ட புள்ள திருந்திட சட்டம் தந்த இடம், அது உள்ள வந்து தப்பு செஞ்சா, வாத்தி ரைடு வரும் என வாத்தி லத்தியைத் தூக்குவதென பரபரக்கிறது படம். இந்த மையக் கதைக்குள், பல்வேறு கிளைக் கதைகள், அந்த ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒரு புள்ளியில் இணைவதென ஹைப்பர் லின்க் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ஜேம்ஸ் துரைராஜ் (எ) ஜே.டியாக விஜய். ஜே.டி (எ) ஜேக் டானியல்ஸ் போல் நடிப்பில் நம்மை கிறங்கடிக்கிறார். ஒயினைப் போல் வயது ஏற ஏற, இன்னும் க்யூட்டாகிக்கொண்டே போகிறார். எனர்ஜியான பாடிலாங்வேஜும், நக்கலான மேனரிஸமும் ரசிகர்களுக்கு அன்லிமிடட் விருந்து. வில்லனாக விஜய்சேதுபதி, தான் வில்லனாக நடித்தால் குறி தப்பாது என்பதை நிரூபித்து போட்டு பொளந்திருக்கிறார். விஜய்யிடம் அவர் லந்து கொடுக்கும் இடமெல்லாம், போகிற போக்கில் ஸ்கோர் செய்துவிட்டுப் போகிறார். உம்மா… விஜய் சேதுபதி!

மாஸ்டர்

மாளவிகா மோகனன், படத்தின் நாயகி. நன்றாகவே நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா ஜெர்மியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், அழகம் பெருமாள் தீனா என படத்திலுள்ள நடிகர்களின் பெயரை எழுத மட்டும், அடிஸனல் ஷீட் தேவைப்படும். அத்தனை பேர் வந்துபோகிறார்கள். ஒரு ஃப்ரேமில் குறுக்க க்ராஸ் செய்பவர் கூட, நமக்கு நன்கு தெரிந்த முகமாக இருக்கிறார். சஞ்சீவ், ஶ்ரீமன், ஶ்ரீநாத், நாகேந்திர பிரசாத் காட்சிகள் செம நாஸ்டாலஜி!

படத்தின் காட்சிகளில் உள்ள, நிறை குறைகளை சுட்டிக்காட்டினால் கூட, அது ஸ்பாயிலராக போய் முடியும் வாய்ப்புள்ளதால் தவிர்த்துவிட்டோம். பல காட்சிகள், ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. பல கதைகளை ஒன்றாக இணைத்த விதமும் அட்டகாசம். விஜய்யின் வெறித்தன ரசிகரான ரத்னகுமார், பொன் பார்த்திபன் மற்றும் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ள வசனங்கள் ஒவ்வொன்றும், விஜய் சேதுபதி வைத்திருக்கும் கத்தியைவிட செம ஷார்ப்! `நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ வசனம் வரும் இடத்தில் எல்லாம் தியேட்டர் எகிறுகிறது. யதார்த்தமாக, அதே நேரம் அழுத்தமாக நகரும் படத்தில் ஆங்காங்கே வரும் சில ஹீரோயிஸ பில்டப்கள் மட்டும் கொஞ்சம் உறுத்தல்.

மாஸ்டர்

மாஸ் படம் கிடைத்தால் அடித்து நகர்த்துவார் ராக்ஸ்டார் அனிருத்! இந்தப் படத்தில் அதன் அடுத்தகட்ட பாய்ச்சல். பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே யூடியூப்களில் மில்லியன்களை வாரி குவித்துவிட்டது. பின்னணி இசையிலும் வேற லெவல் செய்திருக்கிறார். வாத்தி ரைடு பாடலும் அது இடம்பெறும் காட்சியும், கூஸ்பம்ப்ஸ். குட்டி ஸ்டோரி பாடலை அரங்கமே சேர்ந்து பாடுகிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, அவ்வளவு நேர்த்தி. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் சுற்றி சுழண்டிருக்கிறது. ஃபிலோமின் ராஜூவின் படத்தொகுப்பு, குழப்பமில்லாமல் வெட்டிக்கொடுத்திருக்கிறது. படத்தின் பரபரப்பான ஓட்டத்துக்கு, பெரும் பங்கு செய்திருக்கிறார். ஸ்டன் சில்வாவின் சண்டை வடிவமைப்பும் கவனிக்கவைக்கிறது.

மொத்தத்தில், கொரோனா நெகட்டிவிட்டியை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு, பாஸிட்டிவிட்டியை அள்ளித்தருகிறான் இந்த `மாஸ்’டர். அப்படின்னு சொல்ற மாதிரியே படமும் இருந்தா, ரொம்பவே நல்லாருக்கும். பார்ப்போம், நம்ம லோகேஷ் என்ன பண்ணிருக்கார்னு..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.