‘ஏம்பா… ஒரு காமன்சென்ஸ் வேணாமா… ஒவ்வொரு நாளும் போன் பண்ணிட்டுத் தான் வரணுமா? காலையில 9 மணியானா ஆபீஸுக்கு வர வேணாமா?’

– பாலு மகேந்திரா சார் கேட்டபோதுதான், அவர் என்னை ஏற்கெனவே உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்த்துக்கொண்டார் என்பது தெரிந்தது. மூன்று மாதங்கள் கல்லூரியும் அவரின் அலுவலகமுமாகக் கழிந்தன.

சாரிடம் நான் வேலைக்குச் சேர்ந்தது, என் அன்றாட வாழ்க்கையையே மாற்றியிருந்தது; என் முக்கியத்துவங்கள் மாறியிருந்தன. எப்போது வேண்டுமானாலும் அவர் என்னை அழைக்கலாம். உடனே சென்றாக வேண்டும். மறுநாள் கல்லூரிக்குச் செல்வதுகூட நிச்சயமற்றதாக இருந்த காலம் அது. ‘என்ன மச்சான் நாளைக்கு கிளாஸுக்கு வருவியா?’ – நண்பர்கள் கேட்டால், ‘சார் போன் பண்ணச் சொல்லியிருக்கார். அவர் கூப்பிட்டார்னா, அங்கே போயிடுவேன், இல்லைனா காலேஜ் வருவேன்’  – இப்படித்தான் இருந்தன அந்த நாட்கள்.

பி.ஏ நாட்களிலேயே என் சினிமா ஆர்வத்தை பேராசிரியர்கள் அறிவார்கள். எம்.ஏ நுழைவுத்தேர்வில் நான் அதிகபட்ச மதிப்பெண். என் ஹெச்.ஓ.டியான வீ.ஜே.மேத்யூ அட்மிஷன் சமயத்தில், ‘நீ எதுக்கு எம்.ஏ படிக்க வர்ற?’ என்றார். சின்னப் பதற்றத்துடன், ‘ஏன் சார், நான் வரக் கூடாதா?’ என்றேன். ‘இல்லப்பா, நீ சினிமாவுல ஆர்வமா இருக்க. சினிமாவுக்குப் போயிடுவ. அப்புறம் எதுக்கு உனக்கு இலக்கியம்?’- அன்று அவர் இப்படிக் கேட்டதற்கு நான் சொன்ன பதிலை இன்று நினைத்தாலும் என்னை அறியாமல் சிரித்து விடுவேன். ‘அப்படிச் சொல்லாதீங்க சார். சினிமாவும் இலக்கியமும் எனக்கு ரெண்டு தண்டவாளங்கள் மாதிரி. ரெண்டும் இல்லைனா, ரயில் பயணிக்காது’ சீரியஸாகச் சொன்னேன். ‘உன்னால, இலக்கிய ஆர்வம் இருக்கிற வேறு ஒரு மாணவனுக்கு ஸீட் கிடைக்காமப் போகுதுப்பா. அவன் சேர்ந்தாலாவது படிச்சு உருப்படியா ஏதாவது செய்வான்’ – அட்மிஷன் ஷீட்டில் வேண்டாவெறுப்பாகக் கையெழுத்திட்டார்.

எவ்வளவோ பேராசிரியர்கள் இருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் சிலர் இருப்பார்கள். அப்படியான ஒரு பேராசிரியர் ஜோசப் சந்திரா. அவ்வளவு எனர்ஜெட்டிக்காக வகுப்பு நடத்துவார். `என்ன ஆனாலும் சரி… டிகிரி முடிக்காமப் போயிடாத!’ -எம்.ஏ ஸீட் கிடைத்ததும் அவர் அழைத்துப் பேசினார். நான் எப்படியும் சினிமாவுக்குச் சென்றுவிடுவேன் என்பதுதான் அவருடைய முடிவும். அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஏ மூன்றாவது செமஸ்டரில் சாரிடம் சேர்ந்து கல்லூரிக்கும் அவரின் அலுவலகத்துக்கும் போய்வந்துகொண்டிருந்த சமயம். நண்பர்களுக்கு நடுவே இடைவெளி விழத் தொடங்கி யிருந்தது. அந்த மாற்றங்கள் எதுவும் என்னைப் பாதிக்க வில்லை. நான் முன்பைவிட மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் என் வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். அப்போது ரஜினி ஹேமா என்கிற தோழி இருந்தாள். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். அவளின் கைனடிக் ஹோண்டாவை எடுத்துக்கொண்டுதான் சாரின் அலுவலகம் செல்வேன். திரும்புவதற்குள் கல்லூரி முடிந்திருந்தாலும் எனக்காகக் காத்திருப்பாள். பிறகு, அங்கிருந்து அவள் தங்கியிருந்த எக்மோர்  ஒய்.டபிள்யூ.சி.ஏ ஹாஸ்டலுக்குச் சென்று அவளை டிராப் செய்ய வேண்டும். அவளுடன் செலவிடும் நேரமும் குறைந்தது. கல்லூரியில் அட்டெண்டன்ஸ் குறைந்தது. எப்போதுமே ஃபைன் கட்டி தேர்வு எழுதும் அளவுக்குத்தான் என் வருகைப்பதிவு இருக்கும்.

ஆனால் அந்த ஆண்டு, அதற்கும் வழி இல்லை. ‘சினிமாவா… எம்.ஏ-வா?’ முடிவெடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை. ஒரு நொடிகூட தடுமாற்றம் இல்லை; யோசிக்கவும் இல்லை. ‘சினிமாதான். அதுவும் சாரிடம்தான்’ என்பதில் தெளிவாக இருந்தேன். எம்.ஏ பாதியில் நின்றது. அதன் பின்னர் தினமும் சாரின் அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன். அந்த நாட்களில்தான் நா.முத்துக் குமாருடன் நட்பானேன். ‘வாங்க, நம்ம சினிமா நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ அன்று முத்துக்குமார் அழைத்துச்சென்ற இடம், வடபழநி குமரன் காலனியில் ஒரு வீடு. ‘இவர் சீனிவாசன். சாரிடம் சேர முயற்சி பண்ணிட்டிருக்கார்’ – அன்று அறிமுகமாகிய சீனிவாசன்தான் இன்றைய சீனுராமசாமி. `சார் அழைப்பார்’ என்பதற்காகவே  ராஜ் டி.வி வேலையை விட்டு விட்டுக் காத்திருந்தார். ‘என்னது… சார் உங்களைச் சேத்துக்கிட்டாரா… நான் அவருக்காக எட்டு மாசமாக் காத்திருக் கேனே!’ – அதிர்ச்சியானார். அதே அறையில் இருந்த வேறு ஒருவர் `ஐகோ’ என்கிற ஐந்துகோவிலான். பாரதிராஜாவின் துணை இயக்குநர். சீமானின் படங் களுக்கு வசனம் எழுதிக்கொண்டி ருந்தார். அவரும் அப்போது தனியாகப் படம்பண்ணும் முயற்சியில் இருந்தார். பாலு மகேந்திரா சாரின் அலுவலகத்தில் ஒரு ஹால், இரண்டு ரூம்கள், ஒரு கிச்சன் உண்டு. ஓர் அறையில் பழைய துணிகள், படப் பிடிப்பு சாமான்கள் நிறைந்து கிடக்கும். இன்னோர் அறைதான் அவருக்கானது.

Also Read: நான்கு இயக்குநர்கள் இணையும் `ஆந்தாலஜி படம்’ – வெற்றிமாறன் போர்ஷனில் சாய் பல்லவி!

அந்தப் பத்துக்குப் பத்து அறையின் தரை முழுவதும் பெட். முக்கால் பாகம் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கும்.  ஏ.சி குளிர் ஜில்லென இருக்கும். அவர் அமர கொஞ்சம் இடம் மட்டுமே ஓரமாக இருக்கும். அந்த அறைக்குள் நுழைவது அவர் உலகுக்குள் நுழைவது போன்றது. நாங்கள் ஹாலில் காத்திருப்போம். யாராவது சீனியர் அசிஸ்டென்ட் வந்தால், அவரை மட்டும் அந்த அறைக்குள் அழைத்துச் சென்று டிஸ்கஷன் தொடங்குவார். நாங்கள் ஏக்கத்துடன் அந்த அறைக் கதவையே பார்த்துக்கொண்டிருப்போம். அந்த வீடுதான் அவர் என்றால், அந்த அறைதான் அவரின் இதயம்.

அவரின் அறைக்குள் நுழைவது எப்படி சாதாரண விஷயம் இல்லையோ, அதேபோல அவரை தொப்பி இல்லாமல் பார்ப்பதும் முடியாத காரியம். தன் தொப்பி அடையாளத்தில் கவனமாக இருப்பார். அதுவும் கண்ணை மறைக்கும் வகையில் தொப்பியைப் போட்டிருப்பார். ஒருநாள் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு மரக்கிளை அவரின் நெற்றிப்பொட்டில் தட்ட, கால் தடுக்கிக் கீழே விழுந்தார். நாம் கால் தடுக்கிக் கீழே விழுந்தால் காயம் இல்லாமல் தப்பிக்க, கைகளை தரையில் ஊன்றுவோம். ஆனால் அவரின் ஒரு கை, தொப்பி கீழே விழாமல் அனிச்சையாகப் பிடித்துக்கொண்டது. தொப்பி, அவருக்கு உடம்பில் ஓர் உறுப்புபோல. இப்படி சார் உடனான ஒவ்வொரு நாளும் அன்பும் அதிர்ச்சியுமாகவே நகரும். பல சமயங்களில் ‘என்ன சொல்வாரோ?’ என்ற பயத்திலேயே சொதப்புவோம்.

‘குட்மார்னிங் சார்’ எனச் சொன்னதில் தொடங்கி ‘தேங்க்ஸ் சார்’ சொல்லி வீட்டுக்குப் போகும் வரை, தண்ணீரில் மூழ்கிய பந்து போலத்தான் எங்கள் தவிப்பும் இருக்கும்.

சமயங்களில் சும்மாவே திட்டு விழும். ‘என்னப்பா இப்படி உட்கார்ந்திருக்க?’ என்பார். எழுந்து நின்றால், ‘என்னய்யா இப்படி நிக்கிற… உக்காருய்யா’ என்பார். உட்கார்ந்தால், ‘ஏம்ப்பா கையைக் கட்டிட்டு இருக்க… நான் உன்னை என்னப்பா பண்ணினேன்?’ என்பார். ‘அதை ஏன் எடுக்குற?’ திடீரெனக் குரலை உயர்த்துவார். ‘வெட்டி, நான் சொல்றது உனக்குப் புரியலையாடா?’ என அலுத்துக்கொள்வார். அவருக்கு ‘வெற்றி’ வராது, எப்போதும் நான் அவருக்கு ‘வெட்டி’தான். எட்டு வருடங்கள். அவரின் நிறைகுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அவருடன் இருக்க முடியும். காரணம், அவரின் உலகம் மிகச் சிறியது. அவரும் அடிக்கடி, ‘நான், என் வீடு, என் அசிஸ்டென்ட்ஸ், எனக்கு இந்த நாலு தெருதானேடா வாழ்க்கை’ என்பார்.  உண்மைதான், அவருக்கு உதவி இயக்குநர்கள்தான் எல்லாமும். இயக்குநர் என்றால், உதவி இயக்குநர்களுடன்தான் குப்பை கொட்டியாக வேண்டும். சினிமா இயக்குநர்களின் வரம், சாபம் இரண்டுமே இதுதான். எட்டாக் கனியாக எங்களை ஏங்கவைத்த அவரின் அறைக்குள் முதல்முதலாக நுழைந்த அந்தத் தருணம் மறக்க முடியாதது. அப்போது நானும் முத்துக்குமாரும் மட்டுமே இருந்தோம். பகல் 11 மணி இருக்கும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

‘வாங்கப்பா… ரூம்ல போய்ப் பேசுவோம்’ என்றார் சார். எங்களால் அதை நம்பவே முடியவில்லை. அதை அடுத்தகட்ட புரமோஷனாகவே நினைத்தோம். அந்த அறை நுழைவுக்கான அன்பு அழைப்பு, ‘நீங்கள் என் உதவி இயக்குநர்’ என அவர் எங்களை அங்கீகரித்ததின் அடையாள மாகவேபட்டது. அதை நானும் முத்துக்குமாரும் அடுத்தகட்ட நகர்வாகக் கருதி, பெரிய சாதனை புரிந்துவிட்ட உணர்வுடன் அவரைப் பின்தொடர்ந்தோம்.

பாலுமகேந்திரா

ஒவ்வோர் அறைக்கும், ஒரு வடிவம் உண்டு; ஒரு வாசம் உண்டு. அந்தந்த அறைகளில் நின்று பேசும்போது வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. மற்ற இடங்களைவிட, கிச்சனில் நின்று அம்மாவிடம் பேசுவது இன்னும் நெருக்கமானது. நம் இருக்கைக்கே வந்து பேசும் மேனேஜரை நமக்குப் பிடிக்கும். அதே மேனேஜர் அவர் அறைக்கு நம்மை வரச் சொன்னால், இனம் புரியாத ஓர் உணர்வுடன் செல்வோம். அப்படி முதல்முறையாக சாரின் அறைக்குள் நுழைந்தோம். எங்களிடம் பாலு மகேந்திரா என்கிற அதிசயத்தின் படைப்பாற்றலுக்குள் நுழைந்து, அவரையும் அவரின் சினிமாவையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம். புது வேலை தொடர்பாகப் பேசினார்.

“ரெண்டு விஷயம் இருக்குப்பா. டி.வி-க்கு ஒரு புராஜெக்ட் பண்ணணும். `அழியாத கோலங்கள்’ படத்தோட எக்ஸ்டென்ஷன் மாதிரியான ஒரு வொர்க் பண்ணலாம்னு இருக்கேன். இல்லைன்னா, ஒரு ட்ரெயின் ஸ்கிரிப்ட் இருக்கு. அதையும் பண்ணலாம்னு இருக்கேன். முதல்ல இந்த ‘அழியாத கோலங்கள்’ எக்ஸ்டென்ஷனுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க!” அதுதான் உதவி இயக்குநராக எனக்கு அவர் தந்த முதல் அசைன்மென்ட்.

– பயணிப்பேன்...

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.