நடிகர் ரஜினிகாந்த் சார்பில் ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்க முன்வருவதாகக் கூறி சென்னை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,274ல் இருந்து 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழப்பு 149ல் இருந்து 166ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 411ல் இருந்து 473ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக கொரோனா சிகிச்சைக்கு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பான மருத்துவமனைகள் தவிர, பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் இந்த இக்கட்டான தருணத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தங்களிடம் உள்ள இடங்களை தாங்கள் தமிழக அரசுக்குத் தந்து உதவ முன்வருவதாகக் கூறி கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காகக் கொடுத்து உதவ முடிவு எடுத்துள்ளதாகக் கூறி சென்னை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதனையடுத்து அரசு அதிகாரிகள் வந்து இடத்தை பார்வையிட்டதாகத் தெரிகிறது. ஆனால் தற்போதைய சூழலில் அதற்கான தேவை இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஏற்கனவே சென்னை வெள்ள பாதிப்பின் போது சுமார் 20 நாட்கள் ராகவேந்திரா மண்டபத்தில் பொது மக்கள் தங்குவதற்காக வழங்கப்பட்டது. மேலும் அங்குத் தங்கியவர்களுக்கு உணவு தயாரித்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முன்னதாக, கமல்ஹாசன், விஜயகாந்த், வைரமுத்து மற்றும் பலர் தங்களது இடங்களை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM