வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், ‘கொரோனா’ பாதிப்புக்குள்ளான 46 வயது நபர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அந்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவலை சி.எம்.சி நிர்வாகம், முன்கூட்டியே சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்ட அன்றுதான், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

இதுபோன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சி.எம்.சி மருத்துவமனைக்கு 22 விதிமுறைகளை விதித்து கடுமையாக எச்சரித்துள்ளார், வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம். சி.எம்.சி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் அரசு மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணியமர்த்த வேண்டும். விதிமுறைகளை மீறும்பட்சத்தில், சி.எம்.சி நிர்வாகம் எதிர்பார்க்காத வகையில் நடவடிக்கைகள் பாயும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் பேசினோம். “வேலூரில், சி.எம்.சி மருத்துவமனைக்கு எனத் தனி மரியாதை உள்ளது. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஜனவரியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேரளாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சி.எம்.சி மருத்துவமனையில் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களை உடனே பணியில் ஈடுபடுத்தாமல், பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

முதன்முதலில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிக்குச் சிறப்பான சிகிச்சை அளித்தனர். அவரிடமிருந்து பிறருக்குத் தொற்று ஏற்படாமல் தடுத்தனர். தற்போது ஏற்பட்ட உயிரிழப்பு விவகாரத்தில் மட்டும் சி.எம்.சி கோட்டை விட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட நபரைப் பரிசோதனை செய்த பிறகு, கொரோனா உறுதிப்படுத்துவதில் தாமதப்படுத்தியுள்ளனர். இந்த முறை எச்சரிக்கை செய்து விட்டுள்ளோம். தவறை சரிசெய்து கொள்வார்கள். இந்த ஒரு விவகாரத்தை வைத்து அந்த மருத்துவமனையைக் குறை சொல்லவிட முடியாது’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.